நடப்பாண்டில், காயல்பட்டினத்தில் ஜூலை 17 வெள்ளிக்கிழமை, 18 சனிக்கிழமை என இரண்டு நாட்களில் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெருநாளுக்காக கிடைத்த விடுமுறையைப் பயன்படுத்தியும் அல்லது விடுமுறை எடுத்தும் - பல்வேறு ஊர்களிலும், நாடுகளிலும் பணிபுரியும் காயலர்கள் பெருமளவில் ஊர் வந்து சேர்ந்துள்ளனர். இதன் காரணமாக, இன்று ஜும்ஆ தொழுகையின்போது கடுமையான இடநெருக்கடி காணப்பட்டது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் வழமையாக கீழ் தளம் முழுவதும் நிறைந்து, மேல் தளத்தில் முக்கால் பகுதியும் நிறைந்திருக்கும். ஆனால், இன்று நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் இரு தளங்களிலும் மக்கள் நிறைந்து, வெளிப்பள்ளியிலும் நிறைந்து, பள்ளியையொட்டிய சாலையிலும் 3 வரிசைகள் வரை நின்று தொழுதனர்.
வழமையாக பள்ளி பாட வேளை முடிந்ததும், அவ்வழியே கடந்து செல்லும் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பயிலும் மாணவியர், இந்த திடீர் ஏற்பாடு காரணமாக, மாற்று வழியில் கடந்து சென்றனர்.
விரிவாக்கிக் கட்டப்பட்டுள்ள அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளியும் பெருமளவுக்கு நிறைந்தே காணப்பட்டது.
மகுதூம் ஜும்ஆ பள்ளியில் வழமையாக கீழ்தளம் நிறைந்தும், மேல் தளத்தில் ஓரிரு வரிசைகளிலும் மக்கள் இருப்பர். ஆனால் இன்று, இரு தளங்களும் நிறைந்து, பள்ளிக்கு வெளியிலும் ஒரு வரிசையில் நின்று பொதுமக்கள் தொழுதனர்.
பெருநாளை முன்னிட்டு, பிரதான வீதி, ஸீ-கஸ்டம்ஸ் சாலை, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் உள்ளிட்ட பகுதிகள் மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் காட்சியளிக்கிறது. இன்றிரவு அங்கு மக்கள் நெருக்கடி அதிகரித்ததையடுத்து, ஆறுமுகநேரியிலிருந்து காவல்துறையினர் வந்து போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். |