இன்று (ஜூலை 17 வெள்ளிக்கிழமை) பெருநாள் இரவு என்றும், நாளை (ஜூலை 18 சனிக்கிழமை) நோன்புப் பெருநாள் என்றும், காயல்பட்டினம் ஜாவியால் நடைபெற்ற ஜாவியா - மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் இன்று 19.40 மணியளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
நடப்பாண்டு ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளைத் தீர்மானிப்பதற்கான ஜாவியா - மஹ்ழரா மற்றும் காயல்பட்டினம் நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டம், இன்று (ஜூலை 17 வெள்ளிக்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி வளாகத்தில், மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ தலைமையில் நடைபெற்றது.
காயல்பட்டினத்தில் மேகமூட்டம் காரணமாக பிறை தென்படவில்லை என்றபோதிலும் - லால்பேட்டை, சேலம் - எடப்பாடி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட ஊர்களில் ஷவ்வால் தலைப்பிறை காணப்பட்ட செய்தியை முறையாக விசாரித்து உறுதி செய்ததன் அடிப்படையில், இன்று ஷவ்வால் பிறை 01 - நோன்புப் பெருநாள் இரவு என, 19.40 மணியளவில் ஒருமனதாக அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வருமாறு:-
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரி, மஹ்ழரா அரபிக் கல்லூரியின் உலமாக்களும் (மார்க்க அறிஞர்கள்), நகர உலமாக்களும் கலந்துகொண்டனர். பெருநாள் அறிவிப்பைத் தொடர்ந்து, தக்பீர் முழங்கப்பட்டு, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பெருநாள் அறிவிப்பு குறித்து அறிவதற்காக, ஜாவியாவின் வெளி வளாகத்தில் நகர பொதுமக்கள் திரளாகக் குழுமியிருந்தனர். அறிவிப்பு வெளியானதும், அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறியவர்களாக களைந்து சென்றனர்.
கடந்த ஆண்டு (ஹிஜ்ரீ 1435) மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட நோன்புப் பெருநாள் அறிவிப்பு குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு (ஹிஜ்ரீ 1436) ஜாவியா - மஹ்ழரா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ரமழான் தலைப்பிறை அறிவிப்பு குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜாவியா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |