கடந்த 2014-2015 கல்வியாண்டில், பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு - ஹாங்காங் கஸ்வா அமைப்பின் சார்பில் பணப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
ஆண்டுதோறும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் நகரளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் (கஸ்வா) அமைப்பின் சார்பில் அம்மன்றத்தின் நிறுவன உறுப்பினர் மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவாக 2002ம் ஆண்டு முதல் பணப்பரிசும் பாராட்டுக் கேடயமும் வழங்கப்பட்டு வருகிறது.
மற்றும் சென்ற வருடத்திலிருந்து மருத்துவம் , மற்றும் பொறியியலுக்கான கட்ஆப் (cutoff) மதிப்பெண், நமதூர் அளவில் முதல் இடம் பெறும் மாணவருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மற்றும் இந்த வருடத்திலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் நகரளவில் முதலிடம் பெறும் ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெற்ற மாணவருக்கு கஸ்வா அமைப்பின் உறுப்பினர் மர்ஹூம் ஹாஃபிழ் என். எச். ஷாஹுல் ஹமீத் நினைவாக பணப்பரிசு வழங்கப்படுகிறது.
2014-2015 கல்வியாண்டில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு இந்த பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி 20-08-2015 வியாழக்கிழமையன்று காலை 09.15 மணிக்கு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், மாணவர் ஒன்றுகூடலின்போது நடைபெற்றது. பள்ளியின் அரபி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
அறிமுகவுரை
இந்நிகழ்ச்சியில், கஸ்வா அமைப்பின் அறப்பணிகள் குறித்து அதன் செயற்குழு உறுப்பினர் எம்.செய்யித் அஹ்மத் விளக்கிப் பேசினார்.
நமதூரில், கல்லாமையை இல்லாமையாக்குவது, ஏழை-எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி (Professional Courses)யை சிரமமின்றி அடைய செய்வது போன்ற நல்லெண்ணங்களை முற்படுத்துவதே கஸ்வாவின் அடிப்படை நோக்கம் என்றும், பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் (On Merit Basis) தங்களின் உயர் கல்விக்கு போக வசதியற்ற நம் ஊர் முஸ்லிம் மாணவர்களுக்கு, அல்லாஹ்வின் உதவிக்கொண்டு அவர்களின் உயர் படிப்பு படிக்கும் காலம் முழுவதும், அவர்களை தத்தெடுத்து (படிப்பு மற்றும் ஹாஸ்டல் சம்மந்தப்பட்ட அனைத்து செலவுகளுக்கும் பொறுப்பேற்று) அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், ஒழுக்கமான வாழ்விற்கும் ஓர் அடித்தளமாக இருந்து, அந்த மாணவ செல்வங்களை அவர்களின் குடும்பத்திருக்கும், நம் ஊருக்கும், நம் சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடியவர்களாக உருவாக்குவது கஸ்வா வின் தூய எண்ணத்தில் ஒன்றாகும் என்று கூறினார்.
இது வரை 31 பட்டதாரிகளை (1 M.B.B.S, 1 Ph.D, 1 M.E., 1 M.Tech, 21 B.E., 2 B.Tech, 1 B.Arch., 1 B.D.S., 1 B.Pharm., 1 M.B.A) கஸ்வா உருவாக்கியிருக்கின்றது என்றும் தற்போது 7 பட்டதாரிகளுக்கு (6 B.E., 1 B.Tech) முழு நிதியுதவி வழங்கி வருகின்றது என்றும் கூறினார்.
பரிசளிப்பு
மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவு பாராட்டுக் கேடயத்தையும் ரூ.10,000 தொகையையும் அவரது மாமா எஸ்.ஏ.செய்யித் அஹ்மத் அவர்கள் வழங்க, காயல்பட்டினம் நகரளவில் முதலிடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் எஸ்.லெட்சுமி நாராயணன் (1200க்கு 1162 மதிப்பெண்கள்) சார்பாக அவரது மாமாவும் - எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஓவிய ஆசிரியருமான மணிகண்டன் பெற்றுக்கொண்டார்.
மர்ஹூம் ஹாஃபிழ் என்.எச்.ஷாஹுல் ஹமீத் நினைவு பணப்பரிசு ரூ.3,000 தொகையை அவரது தந்தை அல்ஹாஜ் என்.எஸ்.நூஹ் ஹமீத் வழங்க, காயல்பட்டினம் நகரளவில் ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் பெற்ற மாணவர்களில் முதலிடம் பெற்ற சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி மாணவர் பீ.எம். சதக்கத்துல்லாஹ் சபூஹ் (1200க்கு 1136 மதிப்பெண்கள்) சார்பாக கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் ஏ.எல். இர்ஷாத் அலீ பெற்றுக்கொண்டார்.
மருத்துவம் மற்றும் பொறியியலுக்கான கட்ஆப் (cutoff) மதிப்பெண், நமதூர் அளவில் முதல் இடம் பெற்ற மாணவருக்கான பணப்பரிசு தலா ரூ.3,000 தொகையை ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் வழங்க, முதல் இடம் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் எஸ். லெட்சுமி நாராயணன் (மருத்துவத்திற்கான கட்ஆப் : 191.75 ; பொறியியலுக்கான கட்ஆப் : 196.75) சார்பாக அவரது மாமா மணிகண்டன் பெற்றுக் கொண்டார்.
வாழ்த்துரை
பின்னர் எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப். செய்யித் அஹ்மத் அவர்கள் கஸ்வாவின் சேவைகளை பாராட்டிப் பேசினார்.
கஸ்வா அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் மாணவர்களுக்கு நல்ல பல அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், எல்.கே.மேனிலைப்பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், கஸ்வா அமைப்பின் உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
‘வீனஸ் ஸ்டூடியோ’
கஸ்வா அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |