காயல்பட்டினம் நகரில் சேரும் குப்பைகளை பப்பரப்பள்ளி நிலத்தில் கொட்டுவதை வரும் செப்டம்பர் 03ஆம் நாளுக்குள் நிறுத்தாவிட்டால், அறவழியில் போராட்டம் இன்னும் வீரியப்படும் என, அப்பகுதி மற்றும் எல்.எஃப். வீதியை உள்ளடக்கிய 13ஆவது வார்டு பொதுமக்கள், நகராட்சி ஆணையரிடம் தெரிவித்துள்ளனர். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் சேரும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, எல்.எஃப். வீதிக்குத் தென்பகுதியில் அமைந்துள்ள பப்பரப்பள்ளி நிலத்தில் பல்லாண்டு காலமாக நகராட்சியால் கொட்டப்பட்டு வருகிறது.
நகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களாலும், அடையாளம் தெரியாத சிலராலும் அடிக்கடி அக்குப்பைக் கிடங்கில் தீ வைப்பதால் ஏற்படும் புகை மூட்டம் அப்பகுதி முழுக்கப் பரவி, சுற்றுப்புறத்தில் குடியிருப்போரது உடல் நலனுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
நாளுக்கு நாள் அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கேயே குப்பைகள் கொட்டப்படுவதும், அக்குப்பைகளில் அடிக்கடி தீ வைப்பதும் தொடர்வதால், அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, 23.08.2015 அன்று காயல்பட்டினம் துளிர் பள்ளி கேளரங்கில் அப்பகுதி மக்கள் மற்றும் பொதுநல அமைப்பினரின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் இறுதியில், பகுதி மக்கள் திரண்டு சென்று, நகராட்சி ஆணையரிடம் முறையிடுவதென தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் எல்.எஃப். வீதி பொதுமக்களும், பொதுநல அமைப்பினரும் காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டனர்.
அவர்களின் சார்பில் சில பிரதிநிதிகள் நகராட்சி ஆணையரைச் சந்தித்து, பின்வருமாறு மனு அளித்தனர்:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நகரின் சர்வகட்சியினர் இணைந்து பின்வருமாறு மனு அளித்தனர்:-
பப்பரப்பள்ளி நிலத்தில் குப்பை கொட்டுவதை வரும் செப்டம்பர் 03ஆம் நாளுக்குள் நிறுத்த வேண்டும் என்றும், அது நடக்கவில்லையெனில் அறவழியில் போராட்டம் வீரியப்படும் என்றும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பப்பரப்பள்ளியில் குப்பை கொட்டப்படும் இடத்தில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் சார்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், அப்பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்படவில்லையெனில் நீதிமன்ற உதவியை நாடப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுக்களை காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
“காயல்பட்டினம் நகராட்சியால் பப்பரப்பள்ளி நிலத்தில் தற்போது குப்பை கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் சந்திக்கும் சுகாதாரக் கேடு பிரச்சினைகளை நான் அறிவேன்.
குப்பை கொட்டுவதற்காக மாற்று இடம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதற்காக நானும், 17 உறுப்பினர்களும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையும் இணைந்து ஒரு தனவந்தரிடம் நிலம் பெற்றோம். ஆனால் அங்கு பணிகளைச் செய்வதற்கு - சில சுயநலம் கொண்டவர்களால் நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளதால் உடனடியாக அங்கு குப்பை கொட்ட இயலவில்லை. என்றாலும், இதுகுறித்து தீர ஆராய்ந்து, விரைவில் மாற்று இடம் தேர்வு செய்யப்படும்” என்றார்.
இதைக் கேட்ட பொதுமக்கள், “அந்த சில சுயநலம் கொண்டவர்கள் யார்? அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்!” என்று கேட்டனர். ஆனால், ஆணையர் அவர்களின் பெயர்களைக் கூறவில்லை. பின்னர், அங்கு வந்திருந்த செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், பொருத்துநர் நிஸார், நகர்மன்ற 11ஆவது வார்டு உறுப்பினரும், துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர். |