காயல்பட்டினம் நகராட்சியின் பிரதான சாலைகளில் ஒன்றான சி கஸ்டம்ஸ் சாலையை, பேவர் பிளாக் (PAVER BLOCK) கொண்டு புனரமைக்க செப்டம்பர் 11 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இச்சாலைக்கான மதிப்பீடாக 46 லட்சம் ரூபாய்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியில் நிறைவேற்றப்படும் பேவர் பிளாக் சாலைக்கான முதல் தீர்மானம் இதுவல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாதம், 22 சாலைகளை - பேவர் பிளாக் கொண்டு அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்பணிகளின்
மொத்த மதிப்பீடு, 1 கோடியே, 35 லட்சத்து, 60 ஆயிரம்.
அவற்றில் 6 சாலைகள் சமீபத்தில் முடிக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 16 சாலைகளில், 8 சாலைகளுக்கு
சமீபத்தில் டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 8 சாலைகளுக்கு
டெண்டர் விடப்பட்டு, எவரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் - ஜூலை 27 அன்று நகர்மன்ற துணைத் தலைவர் மூலம் கூட்டம் நடத்தப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சுமார் 40 சாலைகளில், குறைந்தது 28 சாலைகள் (மொத்த மதிப்பீடு - 2 கோடியே, 25 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய்) பேவர் பிளாக் வகை சாலைகள் ஆகும். [அக்கூட்டத்தில் இடம்பெற்ற பல சாலைகள் குறித்த பொருட்கள் - தார் சாலையா, பேவர் பிளாக் சாலையா என்ற விபரம் வழங்கவில்லை.]
இவ்வகை சாலைகளில் பயன்படுத்தப்படும், முன்னரே தயாரிக்கப்பட்ட (PRE-FAB) பேவர் பிளாக் கற்கள் பல வகையான தரங்களில் உள்ளது.
கடந்தாண்டு டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவுற்றுள்ள சாலைகளில் எந்த வகையான பேவர் பிளாக் கற்கள் பயன்படுத்தப்பட்டன என்ற விபரம்
இல்லை. இருப்பினும் - சமீபத்தில் டெண்டர் விடப்பட்ட 8 சாலைகளுக்கான விபரங்கள் மூலம், முன்னர் டெண்டர் விடப்பட்டு, பணி நிறைவுற்றுள்ள
6 சாலைகளிலும், (தற்போது டெண்டர் விடப்பட்டு - யாரும் ஒப்பந்தப்புள்ளி கோராத 8 சாலைக்கும்) அதே வகையான பேவர் பிளாக் கற்களே
பயன்படுத்தப்பட்டிருக்கும் என யூகிக்க முடியும்.
தமிழக அரசின் டெண்டர் இணையதளத்தில் நகராட்சி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம்படி, காயல்பட்டினம் நகராட்சி பயன்படுத்த உள்ள பேவர் பிளாக் கற்கள் - M40 க்ரேட், 80 மில்லி மீட்டர் அளவு தடிமானம் - தரவகையை சார்ந்தது என கூறப்படுகிறது.
இந்த விபரங்கள்படி, இந்த வகை சாலைகளுக்கான - காயல்பட்டினம் நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட மதிப்பீடுகள் முறையாக உள்ளதா என அறிந்திட, இதே தரத்தில் - தமிழகத்தில் ஏனைய மாநகராட்சிகள் / நகராட்சிகள் மூலம் வெளியிடப்பட்ட டெண்டர் ஆவணங்களை காயல்பட்டணம்.காம் பார்த்தது. அதில் - காயல்பட்டினம் நகராட்சியின் மதிப்பீடு, குறைந்தது 40 சதவீதம் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
உதாரணமாக, மதுரை மாநகராட்சி இம்மாதம் வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்புகளில் இவ்வகையான பல சாலைகளுக்கு ஒரு சதுர மீட்டருக்கு சுமார் ரூபாய் 940 அளவில் மதிப்பீடு வெளியிட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியின் மூலம் வெளியாகியுள்ள மதிப்பீடுகள் - சதுர மீட்டருக்கு - ரூபாய் 1300 முதல் ரூபாய் 1600 வரை உள்ளது.
உதாரணமாக -
மொய்தீன் பள்ளி சாலைக்கான மதிப்பீடாக, 4.75 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் பரப்பளவு - 354 சதுர மீட்டர் என டெண்டர்
ஆவணம் தெரிவிக்கிறது. இதன்படி ஒரு சதுர மீட்டருக்கான தொகை - சுமார் ரூபாய் 1340.
சாலைப்பணிகள் நிறைவுற்றுள்ள ஆரம்பள்ளி தெருக்கான மதிப்பீடு ரூபாய் 9.4 லட்சம். இந்த தெருவின் நீளம் சுமார் 175 மீட்டர். சராசரியான
அகலம் 4 மீட்டர் என்றாலும் - இந்த சாலையின் பரப்பளவு சுமார் 700 சதுர மீட்டர். இதன்படி, ஒரு சதுர மீட்டருக்கான தொகை - சுமார் ரூபாய்
1340.
இது போல - சி கஸ்டம்ஸ் சாலைக்கு தயாரிக்கப்பட்டுள்ள மதிப்பீடு ரூபாய் 46 லட்சம். இந்த சாலையின் நீளம் - சுமார் 750 மீட்டர். சராசரியான
அகலம் 4.5 மீட்டர் என்றாலும் - இந்த சாலையின் பரப்பளவு சுமார் 3375 சதுர மீட்டர். இதன்படி, ஒரு சதுர மீட்டருக்கான தொகை - சுமார் ரூபாய்
1362.
இந்த புள்ளி விபரங்கள்படி, மதுரை மாநகராட்சியின் மதிப்பீட்டோடு ஒப்பிடும் போது, இவ்வகை சாலைகளுக்கு மொத்தம் சுமார் 2.8 கோடி ரூபாய் மதிப்பில் இருக்கவேண்டிய காயல்பட்டினம் நகராட்சியின் மதிப்பீடு, சுமார் 1.2 கோடி ரூபாய் அதிகமாக, சுமார் 4 கோடி ரூபாய் அளவில் உள்ளது என தெரிகிறது. |