தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கமும், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமும் இணைந்து தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடத்தியது.
இப்போட்டியில் 27 அணிகள் பங்குபெற்றன. நாக்கவுட் முறையில், கோவில்பட்டி, விளாத்திக்குளம், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் ஆகிய வட்டாரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவில் இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், கோவில்பட்டி வட்டாரத்தில் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி அணியும், விளாத்திக்குளம் வட்டாரத்தில் அரசுமேல்நிலைப் பள்ளி அணியும், தூத்துக்குடி வட்டாரத்தில் காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளி அணியும், திருச்செந்தூர் வட்டாரத்தில் எல்.கே.மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றிபெற்றன.
இந்த அணிகளிடையே அரையிறுதிப் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியின் முடிவில், எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணியும், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும், இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலில் பேட்டிங் செய்தது, அந்த அணியினர் 77 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணியினர் 9 விக்கெட்டுகளை இழந்து, வெற்றி இலக்கை எட்டி, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான திரு. அல்பர்ட் முரளீதரன் தலைமை தாங்கினார், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் கூடுதல் துணைத் தலைவர் தனவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கினார்.
வெற்றிபெற்ற எல்.கே. மேல்நிலைப் பள்ளி அணியினருக்கு கோப்பை, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு உபகரணங்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
வெற்றிக்கு முனைந்த விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியினருக்கு, கோப்பை, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு உபகரணங்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த போட்டித் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணியின் தமிழரசுவும், சிறந்த பந்து வீச்சாளராக எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் பாசித் என்ற மாணவனும், போட்டித் தொடரின் சிறந்த வீரராக தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளி அணியின் இமானுவேல் என்ற வீரரும் தேர்வு செய்யப்பட்டு, கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
தகவல்:
எம்.ஜஹாங்கிர்
|