“பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு மரியாதை அளித்தல், நேர மேலாண்மை ஆகியவற்றை சரிவர கடைப்பிடித்தால், வெற்றி நம்மைத் தேடி வரும்” என, காயல்பட்டினத்தில் நடைபெற்ற - நகர பள்ளி மாணவ-மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, 2014-2015 கல்வியாண்டில் ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவியர் ஜெ.பவித்ரா, எல்.பி.நிவேதா ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சி குறித்த சுருக்கச் செய்தி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியரை மாநில அளவில் சாதனைகள் புரிந்திட ஊக்கமளிக்கும் நோக்குடன், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” என்ற தலைப்பில், ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவியரை காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, நகர பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் மற்றும் நகரின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகளை கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளன.
அந்த வரிசையில், நடப்பு 10ஆம் ஆண்டின் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” நிகழ்ச்சி, 05.09.2015 சனிக்கிழமையன்று, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் மைதானத்தில் நடைபெற்றது.
நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியரான - திருப்பூர் விகாஷ் வித்யாலயா மேனிலைப்பள்ளியில் பயின்ற ஜெ.பவித்ரா, கோயமுத்தூர் சவுடேஷ்வரி வித்யாலயா மேனிலைப்பள்ளியில் பயின்ற எல்.பி.நிவேதா ஆகியோருடன், காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி, 05.09.2015 சனிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்ளான வாவு எஸ்.அப்துல் கஃப்பார் தலைமை தாங்க, ஜெஸ்மின் ஏ.கே.கலீல், எம்.ஏ.எஸ்.ஜரூக், வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் ஃபரீதுத்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் சாதனை மாணவியர் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தம் பெற்றோருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில சாதனை மாணவியருடன் எம்.ஜெ.ஹபீபுர்ரஹ்மான் கலந்துரையாடினார்.
மாணவ-மாணவியரின் கேள்விகளுக்கும், இடையிடையே பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கும் சாதனை மாணவியர் விடையளித்தனர். சில கேள்விகளுக்கு மாணவியரின் பெற்றோரும் விடையளித்தனர்.
தமது பூர்விகம், துவக்கக் கல்வி, மேனிலைக் கல்வி, வணிகவியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், மாநில சாதனை மாணவியராக அறிவிக்கப்பட்ட பின்னர் கலந்துகொண்ட - தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினரின் பாராட்டு நிகழ்ச்சிகள் குறித்து அவர்கள் தகவல்களை வழங்கினர். மாநில சாதனை மதிப்பெண் என்பது எட்டாக்கனியல்ல என்றும், மனதை ஓர்மைப்படுத்தி முயற்சித்தால் யாருக்கும் அது கைகூடும் என்றும் அவர்கள் கூறினர்.
மாநில சாதனையாளராவதற்காக பிரத்தியேகமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
பள்ளியில் பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையளித்து, அவர்கள் நடத்தும் பாடங்களைக் கூர்ந்து கவனித்து, சந்தேகங்களுக்கு உடனுக்குடன் விளக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இருக்கும் நேரத்தை சரியான முறையில் ஒவ்வொரு பணிக்காகவும் ஒதுக்கிப் பழக்கப்படுத்திக்கொண்டால், சாதனைகள் நம்மைத் தேடி வரும் என்றும் அவர்கள் கூறினர்.
நிகழ்ச்சி இடைவேளையின்போது மாணவ-மாணவியருக்கு தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இக்ராஃ பொருளாளர் கே.எம்.டீ.சுலைமானின் நன்றியுரையைத் தொடர்ந்து, துஆ - நாட்டுப்பண்ணுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ, கத்தர் காயல் நல மன்ற அங்கத்தினரான ஹுஸைன் ஹல்லாஜ், இசட்.எம்.டி.முஹம்மத் அப்துல் காதிர், சமூக ஆர்வலர்களான ஹாஃபிழ் என்.ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
கடந்தாண்டு (2014) நடைபெற்ற ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவர்களை’ - கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |