கடந்த 04-09-2015 வெள்ளியன்று நடந்த ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 34-வது பொதுகுழு மற்றும் 89-வது செயற்குழு கூட்டம் குறித்து அம்மன்றத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை.
சஊதி அரபிய்யா - ஜித்தா - காயல் நற்பணி மன்றத்தின் 34-வது பொதுகுழு மற்றும் 89-வது செயற்குழு கூட்டம் காயலர் சந்திப்பு நிகழ்வாக வெளியரங்கில் ஜித்தா சர்வதேச விமான நிலையம் அருகில் அமைந்துள்ள "அஸ்ஸஃப்வா" எனும் ஓய்வில்லத்தில் கடந்த 04-09-2015, வெள்ளிக்கிழமை மாலை 04:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை மிகச்சிறப்பாக நடந்தேறியது.
வாகன புறப்பாடு:
முன்னதாக மின்னஞ்சல், அலைபேசி குறுஞ்செய்தி ,வாட்ஸ்அப் வாயிலாக மற்றும் காயலின் அனைத்து இணைய தளங்களில் செய்தியாக அறிவித்தபடி பகல் 02:30 மணியிலிருந்தே உறுப்பினர்கள் ஜித்தா,ஷரஃபிய்யா, ஆர்யாஸ் உணவகம் முன்பு குழுமினர். ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு சிற்றுந்துவில் உறுப்பினர்களை அமர்த்திகொண்டு பகல் 03:30 மணியளவில் புறப்பட்டு நிகழ்வு நடைபெறும் இடம் நோக்கி வந்து சேர்ந்தது.
மக்கா உறுப்பினர்கள் சிற்றுந்துகள் மூலம் சகோ.எம்.ஏ.செய்யது இப்ராஹீம் தலைமையில் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்கள். யான்புவில் இருந்தும் மிக ஏராளமான உறுப்பினர்கள் சகோ கலவா எம்.ஏ.முஹம்மது இப்ராஹிம் தலைமையில் மகிழுந்துகள் மூலம் வருகை தந்தனர்.
சொந்த வாகனம் வைத்துள்ள மக்கா,ஜித்தா உறுப்பினர்கள் தத்தமது வாகனங்களில் வந்து சேர்ந்தனர். வருகை தந்த அனைவர்களையும் சகோ.குளம் எம்.எ.அஹ்மத் முஹ்யித்தீன், சகோ.சட்னி எஸ்.எ.கே.செய்யது மீரான் , சகோ எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம் ஆகியோர் அகங்குளிர வரவேற்றனர்.
நிகழ்விட வாயிலில் பார் புகழ் பாட்ச்சி கொக்கோவை வருகை தந்தோருக்கு வழங்கி இனிமையுடன் வரவேற்றார் சகோ பாட்ச்சி எம்.என்.முஹம்மது ஷமீம். நீண்ட நெடிய நாள்களுக்குப்பின் அனைவரும் ஒன்று கூடுவதால் வந்திருந்தோர் யாவரும் தங்களுக்குள் உற்சாகமாக உரையாடி அவரவர் நலம் விசாரித்து கொண்டிருந்தனர்.
சகோ.எம்.எம்.எஸ்.செய்கு அப்துல் காதிர், சகோ.பொறியாளர் ஜி.எம்.முஹம்மது சுலைமான் இருவரும் வருகை தந்த உறுப்பினர்களின் பெயர்களை பதிவு செய்தும், சந்தாக்கள், நன்கொடைகளை பெற்றும் அதற்கான ரசீதுகளை உடன் அளித்து கொண்டனர். புதிதாய் வருகை தந்துள்ள நம் சகோதரர்களும் தங்களை மன்றத்தில் இணைத்து உறுப்பினராகி சந்தாக்களை வழங்கி கொண்டார்கள்.
34 வது பொதுக்குழு மற்றும் 89-வது செயற்குழு கூட்டம்:
முன்னதாக பொதுக்குழு கூட்டம் சகோ கலவா எம்.ஏ .அபூபக்கர்,சகோ நூஹு ஜலீல் மற்றும் சகோ எஸ்.எஸ்.ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகிக்க ஆரம்பமானது. இந்த அமர்விற்கு மன்றத்தின் தலைவர் சகோ. குளம், M.A.அஹ்மது முஹ்யித்தீன் தலைமையேற்று மன்றம் இதுவரை செயலாற்றியுள்ள திட்டங்கள் இதனால் நம் மக்கள் பெற்ற பயன்கள் என விபரமான தகவலுடன் தலைமையுரையற்றினார். சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா நிகழ்சிகளை மிக அழகிய வண்ணம் நெறிபபடுத்தியும் மன்றம் சார்ந்த நல்லதோர் தகவல்களையும் பரிமாறி கொண்டார். துணைத்தலைவர் சகோ மருத்துவர், எம்.ஏ.முஹம்மது ஜியாத் இறைமறை ஓதிடவும், சகோ.எம்.டபிள்யூ.ஹாமீது ரிஃபாய் வந்திருந்த அனைவரையும் அகமகிழ வரவேற்றார்.
கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செயற்குழு மேலும் முதன்முதலாக யான்பு நகரில் நடந்தேறிய செயற்குழு கூட்டங்களின் அறிக்கைகள் மற்றும் தீர்மானங்களையும் நடைபெற்ற பணிகள் வழங்கப்பட்ட உதவிகள் குறித்த முழு விபரங்களை செயலாளர் சகோ சட்னி S.A.K.செய்யிது மீரான் விளக்கினார்.
மன்ற செயல்பாடுகள், உறுப்பினர்களின் உத்வேக மிக்க களப்பணிகள், ஒற்றுமை, நன்கொடை மற்றும் சந்தா என நிதியை மன்றத்திற்கு வழங்கியதின் நிமித்தம் மன்றம் செய்த பாரிய உதவிகள் அதனால் இறைவன் புறத்திலிருந்து நம்மை அறியாது நாம் பெற்றிடும் அளப்பரிய நன்மைகள் மற்றும் சமீபத்தில் தாயகம் சென்ற இடத்தில் நடைபெற்ற மன்றம் சார்ந்த நிகழ்வுகள் குறித்த செய்திகளை செயலாளர் சகோ.M.A.செய்யிது இப்ராஹீம் விரிவாக தந்தார்.
நம் மன்றம் இதுவரை வழங்கிய உதவித்தொகை, நாம் பெற்ற சந்தா மற்றும் நன்கொடை மன்றத்தின் தற்போதைய இருப்பு மற்றும் தேவைகள் போன்ற நிதிநிலை குறிப்புக்களை மிக விபரமாக பொருளாளர் சகோ.M.S.L.முஹம்மது ஆதம் வழங்கினார். கடந்த 12 ஆண்டுகளாக இது வரை மன்றம் சார்ந்த அனைத்து நிதிநிலை விபரங்களுடைய சிறு குறிப்பு பட்டியலின் நகலும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அடுத்து சகோ எஸ்.ஹெச்.ஹுமாயுன் கபீர் மற்றும் ஆலோசகர் சகோ எம்.எம்.மூஸா சாஹிப் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள். புதிய உறுப்பினர்களும் தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டார்கள். இதனை தொடர்ந்து 89-வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கல்வி உதவி வேண்டி வந்திருந்த மனுக்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டும் வரிசைபடுத்தியும் இதில் தொழில் கல்வி பொறியியல் படிப்பில் கட்டிடவியல்,இயந்திரவியல், கணினியல் ,மின்னியல் சார்ந்த பொறியியல் கல்வி பயிலும் இரண்டாமாண்டு நபர்கள் 8 , மூன்றாமாண்டு நபர்கள் 3 நான்காமாண்டு நபர்கள் 5 என மொத்தம் 16 மாணவ மாணவிகளுக்கு உதவிகள் வழங்கிட எல்லோராலும் ஒரே மனதாக முடிவு செய்யப்பட்டு தொகைகள் ஒதுக்கப்பட்டன.
மேலும் கடந்த இரண்டாண்டு காலமாக மன்ற செயற்குழு உறுப்பினர்களின் அனுசரணையின் மூலமாக இக்ரா கல்வி சங்கம் வழிகாட்டலின் படி கலை அறிவியல் கல்வி பயிலும் கல்லூரி மாணவ மாணவிகள் 19 நபர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த உதவிகளைப்போல் இவ்வாண்டு இறுதி மூன்றாமாண்டும் தொடர்ந்து உயர் கல்விக்கான உதவி தொகைகள் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது.
நன்றியுரை:
எங்களது அழைப்பினை ஏற்று பல சிரமங்களை பொருட்படுத்தாது கலந்து சிறப்பித்த அனைவருக்கும் இனிய இந்நிகழ்வு நடைபெற எல்லா வகைகளிலும் உதவிய, ஒத்துழைத்த , மேலும் இட வசதி ,மாலை நேரத்தில் மசால் வடை,தேநீர் , இரவு உணவு பிரியாணி, குடிநீர் ,குளிர்பானம்,ஐஸ் க்ரீம் ,தின்பண்டங்கள், பரிசுப்பொருட்கள் மற்றும் வாகன வசதிகள் என பலவித அனுசரணைகள் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் சகோ.சொளுக்கு எஸ்.எம்.ஐ.செய்யிது முஹம்மது சாஹிப். சகோ.K.A.முஹம்மது நூஹு பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் இந்த அமர்வு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
மக்ரிப் மற்றும் சிற்றுண்டி இடைவேளை:
மக்ரிப் தொழுகையும் கூட்டாக நிறைவேற்றப்பட்டு அனைவருக்கும் காயலின் சுவைமிகு இஞ்சி ஏலம் கலந்த தேநீருடன் சாலாவடை எனும் பருப்பு வடையும் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது.
வெளியரங்க விளையாட்டு போட்டிகள்:
ஆண்களுக்கான வெளியரங்க விளையாட்டு போட்டிகள் விசாலமான மைதானத்தில் ஆரம்பமானதும் துள்ளிக்குதித்து வந்த சிறுவர், சிறுமியர்,மாணவர் ,இளைஞர் மற்றும் பெரியோர் என விளையாட்டில் ஆர்வமுள்ள அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப், சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ.சீனா. எஸ்.ஹெச். மொகுதூம் முஹம்மது, சகோ.எம்.என். முஹம்மது ஷமீம், ஆகியோர் சகோ.குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன் தலைமையில் சிறு சிறு குழுக்களாக போட்டியாளர்களை தேர்வு செய்யவும் போட்டிகள் துவங்கின.
பெனால்டி கிக் மற்றும் கைப்பந்து போட்டிகள்:
கால்பந்து பெனால்டி கிக் போட்டி மற்றும் தொடர்ந்து கைப்பந்து போட்டிகளுக்கு என தனித்தனியாக 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு யான்பு, மக்கா, ஜித்தா என குழுக்களுக்கு பெயரிட்டு வழமையான உற்சாகத்துடன் நடைபெற்றது. மேலும் ஏழு நபர் கால்பந்து போட்டி முறுக்கு கவ்வுதல் மற்றும் முத்தாய்ப்பு போட்டியான கயிறு இழுக்கும் வெளியரங்க போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட பெரியோர், இளையோர் காயல் தெருவில் விளையாடும் சிறார்களாக மாறி ஆட்டம் ஆட முற்பட்டது உண்மையான காயல் விளையாட்டை கண்முன் கொண்டு வந்தது. போட்டியில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமுடன் பள்ளிப்பருவ மலரும் நினைவில் துள்ளி விளையாடியவர்களாக மாறினர். விளையாட வாய்ப்பு அமையாத பெரும்பாலானவர்கள் பார்வையாளர்களாக இருந்து போட்டியாளர்களை உற்சாக மூட்டினார்கள்.
மகளிர்களுக்கான உள்ளரங்க போட்டிகள்:
மங்கையர்களுக்காக உள்ளரங்கில் இசை நாற்காலி, கப்பில் பந்து போடுதல், MOVIN ON UP / CUP ஐ மேலிருந்து கீழ் அடுக்குதல், COLOR SEPERATION ANEXITY / கலர் கற்களை பிரித்தெடுத்தல், SKIPPING என பல பொழுதுபோக்கு போட்டிகள் நடைபெற்றது. அனைத்து போட்டியையும் நான்கு பேர் கொண்ட மகளிர் குழுவினர் மிக சிறப்புற நடத்தினர்.
சிறார் மற்றும் மழலைகளுக்கான வெளியரங்க போட்டிகள்:
சிறார் மற்றும் மழலைகளுக்காக சாக்கு ஓட்டம்,100, 50 மீட்டர் ஓட்டப்பந்தையம், பலூன் வெடித்தல், இசை நாற்காலி, முறுக்கு கவ்வுதல் மற்றும் பலவித போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. கொஞ்சம் கூட அலுப்பு தட்டாது மிகுந்த ஆர்வத்துடன் சிறார் சிறுமியர்கள் கலந்து கொண்டது பார்வையாளர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்தது. இவர்களுக்கான போட்டிகள் அனைத்தையும் சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப் மற்றும் சகோ.எம்.என். முஹம்மது ஷமீம் முன்னின்று அழகுற நடத்தினர்.
இந்நிகழ்விற்கு மத்தியில் சுவைமிகு கோன் ஜோன் ஐஸ்க்ரீம் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. வந்திருந்தவர்களில் நிறைய சகோதரர்கள் தங்கள் மக்களுடன் பாலைவன சூட்டை தணிக்க உடலையும் உள்ளத்தையும் குளிருட்டிட சிறு குளம் போல் காட்சியளித்த நீச்சல் குளத்தில் உற்சாகமாக நீராடி மகிழ்ந்தார்கள்.
அனைத்துவித வெளியரங்க போட்டிகளும் இனிதாய் முடிவுபெற்றதும் அனைவரும் உவகை பெருக்குடன் உள்ளரங்கம் நோக்கி வந்திடவும் இஷா தொழுகையும் கூட்டாக இனிதே நிறைவேற்றப்பட்டது.
இச்சங்கமத்தின் இடைவிடாத வெளியரங்க விளையாட்டினால் நேரமின்மையின் காரணத்தினால் முன்னேற்பாடு செய்து வந்த பொது வினாடி வினா, நீயா நானா போன்ற உள்ளரங்க போட்டிகள் நடத்த முடியாமல் போனது அனைவருக்கும் ஏமாற்றமே.
காயலின் சுவைமாற பிரியாணி சாப்பாடு:
நம் காயல் மண்ணுக்கு சொந்தமான சுவை மிகுந்த பிரியாணி சாப்பாடு உடன் கட்டா எனும் கத்திரிக்காய் கறியும், சிக்கன் 65 பொரியல், தயிர் பச்சடி, சட்னி சாம்பாருடன் தோசை மற்றும் கேசரி இனிப்பும் சேர்த்தும் இரவு 11-00 மணியளவில் முதலில் பெண்கள், மழலைகளுக்கும் பின்பு ஆண்களுக்குமாக பரிமாறப்பட்டது.
கண்கவர் பரிசளிப்பு விழா:
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்கள் , வெற்றிக்காக முனைந்தவர் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மகளிர்களின் சார்பாக அவர்களின் குழந்தைகள் வந்து பரிசுகளை மிக குதூகலத்துடன் வாங்கி சென்றனர். மேலும் இந்நிகழ்வை இனிதாக அமைந்திட துணை புரிந்த சகோதர்களுக்கும் உற்சாக மூட்டும் பரிசுகளும் மற்றும் கலந்து கொண்டவர்களை ஆர்வ மூட்டும் வகையில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு பரிசுகளும் மற்றும் வருகை புரிந்த கைக்குழந்தைகள் முதல் மழலைகள் வரை அனைவருக்கும் மனம் மகிழத்தக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியில் அழைப்பினை ஏற்று குடும்பத்தோடு வருகை தந்திருந்த ஜித்தா, மக்கா மற்றும் யான்பு வாழ் சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து மற்றும் இந்நிகழ்ச்சிக்கு நன்கொடை தந்தும், அனுசரணை அளித்தும் எல்லா வகையிலும் உழைத்த உதவிய அனைத்து நல்ல உள்ளங்களை நன்றி பாராட்டியும் இறுதியில் சகோ,எஸ்.எஸ்.ஜாபர் சாதிக்கின் பிரார்த்தனை மற்றும் கப்பாரவுடன் நிகழ்வுகள் அனைத்தும் மிக அழகிய முறையில் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
சந்திப்பு இல்லாமல் அங்குமிங்குமாக இருந்து வந்த நம் காயல் சொந்தங்கள், நட்புகள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி உளமகிழ உரையாடி கவலைகள் யாவும் மறந்து "ஓடி விளையாடு பாப்பாவாக" மாறிய இந்நாளை மறக்கத்தான் முடியுமா? என்ற விடை தேடிடும் வினாவுடன் ஒரே நாளில் விமான பயணச்சீட்டு ,கடவுச்சீட்டு ,விசா இன்றி தாயகம் சென்று திரும்பிய மன திருப்தியுடன் சந்தோசத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு இன்ஷா அல்லாஹ் மீண்டும் இது போன்ற இனியதோர் நாள் வர வேண்டும் என்ற நல்ல பிரார்த்தனையுடன் அவரவர் இருப்பிடம் நோக்கி புறப்பட்டு இறையருளால் சிறப்புடன் சென்று சேர்ந்தனர்.
இனிய இந்நிகழ்வான காயலர் குடும்ப சங்கம ஒருங்கிணைப்பிற்கான ஏற்பாட்டை சகோ.குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன் தலைமையில் சகோ. சட்னி, எஸ்.எ.கே. செய்யது மீரான், சகோ,சோனா ஏ.டி.மன்சூர் ஹல்லாஜ், சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம், சகோ.எம்.எம்.எஸ்.செய்கு அப்துல் காதிர், சகோ பிரபு எம்.எஸ்.செய்யது முஹியித்தீன், சகோ.சட்னி. எஸ்.எ.கே. முஹம்மது உமர் ஒலி, சகோ எம்.எஸ்.அபூபக்கர் சித்திக் மற்றும் சகோ பொறியாளர்,அல்ஹாபிழ் எம்.ஐச் முஹம்மது அலி ஆகியோர் மிக சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
தகவல்:
சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
நிழற்படங்கள்:
சொளுக்கு எஸ்.எம்.அஹமது லெப்பை.
பொறியாளர் தோல்ஷாப் எம்.ஏ.சி.முஹம்மது லெப்பை.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
|