காயல்பட்டினம் நகர்மன்றத் துணைத் தலைவர் உட்பட 14 உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவருக்கு 4 பொருட்களை கொண்டு, செப்டம்பர் 25 தேதிக்குள், மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) விதிகள் படி - கூட்டம் நடத்த கடிதம் அனுப்பியுள்ளனர்.
உறுப்பினர்களின் கோரிக்கையில் இடம்பெற்றுள்ள பொருட்கள் -
<> துப்பரவு பணிகளுக்கு என 100 (நூறு) பணியாளர்கள் நியமனம் செய்வது,
<> 23.5 லட்ச ரூபாய்க்கு டாங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்வது,
<> தனியார் வசம் வழங்கப்பட்டுள்ள 21.5 லட்ச ரூபாய் மதிப்பிலான தெரு விளக்கு பராமரிப்பு பணிகளை 10 சதவீதம் உயர்த்தி, அதே ஒப்பந்ததாருக்கு வழங்குவது,
<> ஜூலை மாதம் விடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் 5 சாலைகளுக்கு பணியானை வழங்குவது ஆகும்.
இந்த நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கை கடிதத்தையும், அதற்கான தனது பதிலையும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நகர்மன்றத் தலைவரின் முகநூல் பதிவு வருமாறு:
செப்டம்பர் 16 அன்று துணைத் தலைவர் உட்பட 14 உறுப்பினர்கள் கையெழுதிட்ட கடிதம் ஒன்று எனக்கு கிடைத்தது. அதில் - மாவட்ட நகராட்சிகள்
சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) படி செப்டம்பர் 25 அன்று கூட்டம் நடத்திட இந்த கடிதத்தை தாங்கள் அனுப்புவதாகவும், அவ்வாறு
நடத்த வில்லை என்றால் துணைத் தலைவர் கொண்டு அந்த கூட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் - மன்ற பொருள் 1 என குறிப்பிட்டு, நான்கு வெவ்வேறு பொருட்கள் இணைக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தை இணைத்துள்ளேன்.
மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தொகுப்பு 3, விதிமுறை 3(2) விதிகள் படி - அடுத்த சாதாரண கூட்டம்வரை காத்திருக்க முடியாத ஒரே ஒரு
பொருள் மட்டும் தான் இது போன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளில் இருக்க வேண்டும். இந்த விதிமுறை மீறப்பட்டதால் தான் - ஜூலை 27 அன்று
நடந்த கூட்டம், சட்டத்திற்கு புறம்பானது என்று நிலைப்பாட்டை நான் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த அடிப்படையில் தான் சென்னை உயர்
நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஜூலை 27 நடந்த கூட்ட தீர்மானத்திற்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது.
உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் உள்ள 4 பொருட்களில், 3 பொருட்கள் - செப்டம்பர் 22 சாதாரண கூட்ட அஜெண்டாவில் ஏற்கனவே
இணைக்கப்பட்டுள்ளது. இணைக்கப்படாத ஒரே பொருள் - டாங்கர் மூலம் நகரில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் குறித்தது (23.5 லட்ச ரூபாய்க்கு
டாங்கர் மூலம் தண்ணீர் விநியோகம்).
இந்த டாங்கர் மூலம் குடிநீர் விநியோகம் சம்பந்தமாக, நான் ஏற்கனவே - முகநூலில் பதிவு செய்துள்ளேன். இது குறித்து, திருநெல்வேலியில் உள்ள
நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருக்கு (RDMA) 11.7.2015 அன்று நான் எழுதிய கடிதத்திற்கு பதில் (17.7.2015) வழங்கியிருந்த RDMA, ஒரு வார
காலத்திற்குள் - இது குறித்த விளக்கத்தை எனக்கு வழங்க ஆணையர் காந்திராஜனுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். RDMA இன் பதில்
கிடைக்கப்பெற்று (17.7.2015) 2 மாதத்திற்கு மேலாகியும், இது வரை - ஆணையர் காந்திராஜன் இது சம்பந்தமான பதிலினை எனக்கு தரவில்லை.
எனவே - உறுப்பினர்களின் 15.9.2015 கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இந்த பொருள், ஆணையரிடம் இருந்து முறையான விளக்கம் பெறப்பட்டப்பின் -
கூட்ட பொருளில் இணைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்ற விரிவான தகவலை, நான் உறுப்பினர்கள் அனைவருக்கும் - தனியொரு பதிவு
தபால் மூலம் தெரிவித்துள்ளேன்.
நகர்மன்ற உறுப்பினர்கள் - செப்டம்பர் 22 அன்று அழைக்கப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்துக்கொண்டு, நகரின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும்
தேவையான இத்தீர்மானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு நகர்மன்றத் தலைவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik |