காயல்பட்டினம் நகராட்சியில் பல ஆண்டுகளாக, பல்வேறு முறைக்கேடுகள் நடந்து வருகின்றன. சில முறைக்கேடுகள் உள்ளாட்சி துறைகளுக்கான தணிக்கை குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில முறைக்கேடுகள் தற்போதைய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், ஊழல் எதிர்ப்பு இயக்கம் போன்ற சமூக நல அமைப்புகள் மற்றும் சில சமூக ஆர்வாலர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வாங்கப்படாத கணினிக்கு வழங்கப்பட்ட காசோலை குறித்து நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ள செய்தியினை காயல்பட்டணம்.காம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.
லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறித்த மாலை முரசு (19-10-2015) செய்தி
இருப்பினும், நகராட்சியில் நடந்துள்ள பிற முறைக்கேடுகளில் மேல் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவை நிலுவையில் உள்ளன.
காயல்பட்டினம் நகராட்சியின் புதிய நிர்வாகம் பதவிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இந்த 4 ஆண்டுகளில், நான்கு நகராட்சி ஆணையர்கள் பதவியில் இருந்துள்ளனர். அவர்கள் வி.கண்ணையா (3 மாதங்கள்), வி.எஸ்.சுப்புலெட்சுமி (3 மாதங்கள்), ஜி.அசோக் குமார் (22 மாதங்கள்) மற்றும் காந்திராஜன் (21 மாதங்கள்) ஆவர்.
இந்த நால்வரில், புதிய நகர்மன்றம் பொறுப்பேற்கும்போது பதவியில் இருந்த ஆணையர் வி.கண்ணையா. நகராட்சி பொறியாளரான (MUNICIPAL ENGINEER) இவர் ஆணையர் பொறுப்பையும் கவனித்து வந்தார். ஜனவரி 2012 இறுதியில் இவர் மாற்றலானார்.
இவர் பொறுப்பில் இருந்த காலத்தில் (2011-12 நிதியாண்டு) பல்வேறு முறைக்கேடுகள் காயல்பட்டினம் நகராட்சியில் நடந்ததாக உள்ளாட்சி துறையின் தணிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கடுங்குறைப்பாடு என வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த முறைக்கேடுகளினால் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து, இதற்கு காரணமான ஆணையர் வி.கண்ணையா மீது நடவடிக்கை எடுத்து, அந்த தகவலை வழங்க, நகராட்சி நிர்வாக இயக்குனர் (DIRECTOR OF MUNICIPAL ADMINISTRATION), காயல்பட்டினம் நகராட்சிக்கு தெரிவித்தும், இது வரை எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
[தொடரும்]
|