“மாணவ-மாணவியரின் கேள்விகளுக்கு விடையளிக்கும் இந்த நிகழ்ச்சி எங்களுக்கு புது அனுபவமாக உள்ளது” என, 05.09.2015 அன்று காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் இணைந்து - காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் மைதானத்தில் நடத்திய “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” பரிசளிப்பு விழாவில் மாநிலத்தின் மாணவியர் ஜெ.பவித்ரா, எல்.பி.நிவேதா ஆகியோர் தமது ஏற்புரையில் கூறியுள்ளனர். அவர்களது உரைகள் வருமாறு:-
ஜெ.பவித்ரா:
இங்கு கூடியுள்ள அனைவருக்கும் எனது வணக்கங்கள். நான் பவித்ரா. தற்போது நடைபெற்ற ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தின் முதலிடத்தைப் பெற்றுள்ளேன்.
இன்று காலையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி எனக்குப் புது அனுபவமாக இருந்தது. இதற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நாங்கள் மாணவ-மாணவியரிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் இன்று, அவர்கள் கேட்க நாங்கள் பதிலளிப்பது புது அனுபவமாக இருந்தது.
இங்கே எனக்கு புது நண்பர்களும் நிறைய கிடைத்துள்ளனர். மாநிலத்தின் முதன்மாணவர் என்ற இந்தத் தகுதி கிடைப்பது மிகவும் கடினமானது என்றோ, அதிஷ்டத்தின் அடிப்படையில் கிடைப்பது என்றோ கருதி, கடின உழைப்பைக் கொடுக்காமல் இருந்துவிட வேண்டாம். முழு முயற்சி செய்து, கடின உழைப்புடன் செயல்பட்டால் எல்லாருக்குமே அது சாத்தியமானதுதான்.
அடுத்த ஆண்டிலிருந்து இந்த காயல்பட்டினத்தின் மாணவர்கள் மாநிலத்தின் முதன்மாணவராக வர வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன். இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு, மாநிலத்தின் முதன்மாணவி ஜெ.பவித்ரா பேசினார்.
எல்.பி.நிவேதா:
இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தும் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் ஆகிய அமைப்புகளின் அங்கத்தினருக்கும், இவ்விழாவிற்குத் தலைமை ஏற்றுள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும், இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் துவக்கமாக நான் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படியொரு சந்திப்பை ஏற்படுத்தித் தந்தமைக்காக உங்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஏனெனில், நாங்கள் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். ஆனால், மாணவ-மாணவியருடன் கலந்துரையாடல் செய்யும் நிகழ்ச்சியில் இங்குதான் முதலாவதாகக் கலந்துகொள்கிறோம்.
நிறைய இடங்களில் பெரியவர்கள் பேசுவார்கள். நாங்கள் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்போம்... ஆனால் இங்கோ நிறைய கேள்விகளுக்கு நாங்கள் பதிலளித்துக்கொண்டிருந்தோம். அந்த வகையில், எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இது ஒரு நல்ல தளமாக அமைந்திருந்தது. காலையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் - பவித்ரா சொன்னது போல எங்களுக்கு நிறைய நண்பர்கள் புதிதாகக் கிடைத்துள்ளனர்.
நானும் கடந்த ஆண்டில், இதுபோன்றதொரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உங்களைப் போல பார்வையாளர்களுள் ஒருத்தியாகக் கலந்துகொண்டிருந்தேன். ஆனால் இப்போது உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கும் இடத்தில் இருக்கிறேன். அதுபோல, வரும் ஆண்டில் இப்போது இங்கு பார்வையாளர்களாக இருக்கும் உங்களுள் ஒருவர் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று விடையளிக்கும் தகுதியைப் பெற வேண்டும் என நான் ஆசைப்படுகின்றேன். அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு, மாநிலத்தின் முதன்மாணவி எல்.பி.நிவேதா பேசினார்.
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |