“மாணவர்களை வழிதவறாமல் பாதுகாத்திட, கடற்கரையில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்!” என, 05.09.2015 அன்று காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் இணைந்து - காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் மைதானத்தில் நடத்திய “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” பரிசளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஷ்வின் கோட்னிஸ் இடம் கோரிக்கை வைத்தார். அவரது உரை வருமாறு:-
எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!!
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் இவ்வினிய நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற - முத்து மாவட்டமாம் நமது தூத்துக்குடி மாவட்டத்தையே அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்வதற்காக கடமையுணர்வுடன் செயலாற்றி வருகின்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அஷ்வின் கோட்னிஸ் அவர்களே! இந்நிகழ்ச்சியின் காரணகர்த்தாக்களாகிய மாநிலத்தின் முதன்மாணவியரான ஜெ.பவித்ரா, எல்.பி.நிவேதா ஆகியோரே! அவர்கள் தம் பெற்றோரே! மேடையில் வீற்றிருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆன்றோரே, சான்றோரே, பெரியோரே, தாய்மாரே, மாணவ-மாணவியரே! உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆசிரியர் தின வாழ்த்து:
ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில்தான் தீர்மானிக்கப்படுகின்றது என்று கூறுகின்றார்கள். அதற்கேற்ப, மாத - பிதாவிற்கு அடுத்தபடியாக, போற்றுதலுக்குரியவராகிய ஆசிரியர் பெருமக்கள் நம் நாட்டை நல்வழிப்பாதையில் நடத்திச் செல்லக்கூடிய வழிகாட்டிகளாக இருந்து, எதிர்காலத் தலைமுறையினரான மாணவக் கண்மணிகளை உருவாக்கித் தருவதற்கு அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றி வரக்கூடிய எனது மதிப்பிற்கும், பேரன்பிற்கும் பாத்தியப்பட்ட ஆசிரியப் பெருமக்களுக்கும் - குறிப்பாக இங்கே மேடையிலும், மேடைக்கு முன்பும் வீற்றிருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் இந்த இனிய நாளான (செப்டம்பர் 05) ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.
ஓர் ஆசிரியர் தன் மாணவருக்கு அளிக்கும் கல்வியறிவானது அவரை அழிவிலிருந்து காக்கும் கருவியாக இருக்க வேண்டும் என்பது பன்மொழி. அதாவது, நிகழ்காலத்தின் எந்தவொரு சோதனையிலிருந்தும், எதிர்காலத்தில் எந்தத் தீய பழக்கவழக்கத்திற்கு ஆளாகாமலும் தன்னை ஒரு மாணவன் காத்துக்கொள்வதே அழிவிலிருந்து காத்துக்கொள்வதாகும். அப்படிப்பட்ட கல்வியைத் தரக்கூடியவர்களாகத்தான் ஆசிரியர்கள் திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
மாணவர்களுக்குக் கல்வியறிவை வழங்கும் ஆசிரியர்கள் தம்மை ஒரு முன்மாதிரியாக ஆக்கிக்கொண்ட நிலையில் கற்றுக்கொடுத்தால், அவர்கள் வலிமைமிக்க - சிறந்த கல்வியைக் கற்றுக் கொடுப்பவர்களாகின்றனர். அப்படிப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் - எனது பள்ளி வாழ்க்கையில் நேர்மை - நற்பண்புகளோடு எனக்குக் கற்றுத் தந்த அந்தக் கல்வியானது இன்றளவும் என்னை அழிவிலிருந்து காக்கும் சிறந்த கருவியாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை இந்த ஆசிரியர் தினத்திலே நான் பெருமையோடு நினைவுகூர்கிறேன்.
ஆன்மிக நற்போதனைகள் தேவை:
தான் ஆசிரியராக இருப்பதையே பெருமையாகக் கருதி, தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை மாணவர்களுடனேயே கழித்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம், “இன்று நாட்டில் கல்வியறிவு என்பது அத்துனை மோசமாக இல்லை... இருப்பினும் மனித சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டுதானே உள்ளது? குறைந்தபாடில்லையே ஏன்?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “எனக்கும் இதே சந்தேகம் இருந்தது... இதுகுறித்து ஆன்மிகப் பெரியவர் ஒருவரிடம் கேட்டபோது, நமது மாணவர்களுக்கு சரித்திரத்தையும், அறிவியலையும் கற்றுத் தரும் நாம், ஆன்மிகம் போதிக்கும் நற்பண்புகளையும், ஒழுக்க மாண்புகளையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம்... அதன் விளைவுதான் இவை என்று அவர் கூறினார்” என அப்துல் கலாம் அவர்கள் கூறினார்கள்.
ஆகவே, ஆன்மிகத்தைக் கற்றுக்கொள்கிற - ஆன்மிகத்தின் மூலமாக நற்பண்புகளைக் கற்றுக்கொள்கின்ற இளைய தலைமுறையினரிடம் மனிதாபிமானம் வளரும்... அது வளர்ந்தால், இந்த சமூகத்தில் ‘நான், நீ’ என்ற காழ்ப்புணர்ச்சி தோன்றாது... அங்கே பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் நிச்சயமாக இருக்காது... எதிர்கால சந்ததியினரிடம் இந்தக் கயமைகள் உருவாகாது... அதன் காரணமாக சமுதாயத்தில் குற்றங்கள் பெருகாது என்று கூறுகின்றார்கள்.
அனைத்து மதங்களுமே ஆன்மிகத்தைத்தான் போதிக்கின்றன... அன்பையும், அறநெறிகளையும், அமைதியையும், தர்ம சிந்தனைகளையுமே அவை போதிக்கின்றன... இந்த நல்ல பண்புகள்தான் மாமனிதர்களை உருவாக்கும்.
ஆகவே ஒரு மாணவர் நல்ல மனிதாக உருவாவதற்கு பள்ளிப்பாடங்களில் பெறும் மதிப்பெண்களும், தேர்ச்சி விகிதங்களும் மட்டும் போதாது... அவர்கள் சமூகத்தில் பிறருடன் நல்ல உறவு கொள்ளல், பிறருக்கு உதவுதல், பிறரை நேசித்தல், உண்மை – நேர்மையுடன் நடத்தல், பெற்றோர் - ஆசிரியருக்கு மரியாதை செலுத்தல், நாட்டுப்பற்றுடன் வாழ்தல், தன்னம்பிக்கையுடன் வாழ்தல், சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல் - இவைபோன்ற நற்பண்புகளைக் கொண்டவர்களாக மாணவர்கள் வாழ்ந்தால், மனிதநேயமிக்க நல்ல மாண்பாளர்களாக அவர்கள் உருவாகுவர்.
தனி மனித மாற்றம்தான் ஒரு சமூக மாற்றத்திற்குக் காரணம். சமூக மாற்றம் ஒரு நாட்டின் மாற்றம்... நம் நாட்டிலே - நம் ஊரிலே நல்ல மாற்றத்திற்கான விதைகள் யார் என்றால் மாணவர்களாகிய நீங்கள்தான்! இந்த விதைகள் நாளை விருட்சங்களாகும்போது, மாற்றங்கள் அனைத்துமே முன்னேற்றங்களாக நம் கண் முன்னே நிற்கும்.
வாரத்தில் ஒரு மணி நேரமாவது கற்றுக்கொடுக்க வேண்டும்...
நமது மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களுக்காக 10 அம்ச வழிகாட்டு உறுதிமொழிகளைக் கூறுகின்றார். அவற்றுள் ஒன்று, எழுதப்படிக்கத் தெரியாத 5 பேருக்கேனும், வாரத்தில் ஒரு மணி நேரமாவது எழுதப்படிக்கக் கற்றுக்கொடுப்பது. தான் ஆசிரியராக இருப்பதையே பெருமையாகக் கருதுவதாகக் கூறிய அப்துல் கலாம் அவர்கள் சொன்ன இந்த உறுதிமொழியின்படி, அன்னம் யாவினும் புண்ணியம் கோடி தருகின்ற ஆன்றோர் ஏழைக்கு எழுத்தவிறிக்கின்ற இந்த மாபெரும் பணியை எனதருமை மாணவர்களாகிய நீங்கள் செய்வதற்கு இந்த ஆசிரியர் தினத்திலே உறுதிகொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நமதூரிலே ஏழ்மை நிலையிலுள்ள பல மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கும், பள்ளியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதற்கும் காரணங்களைக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் என்னவென்றால், “எங்களுக்கு கணக்கும், ஆங்கிலமும் வரவில்லை... அதற்கான டியூஷன் வைப்பதற்கு எங்களிடம் வழியில்லை... எங்கள் பெற்றோருக்கும் சொல்லித் தரத் தெரியவில்லை... அதனாலேயே நாங்கள் பள்ளிக்கூடத்திற்குப் போவதில்லை...” என்று கூறினர். நிச்சயமாக மாணவக் கண்மணிகளாகிய நீங்கள் நினைத்தால் அவர்களின் கல்விக் கண்களைத் திறக்க உங்களால் முடியும்!
நேற்று, நமது இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் காணொளித் திரை (வீடியோ கான்ஃபரன்ஸிங்) வாயிலாக - நமது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விசாலினி என்ற மாணவி உள்ளிட்ட - இந்தியாவின் தலைசிறந்த பத்து மாணவர்களோடு உரையாடுகையில் என்ன சொன்னார் என்றால், “எல்லாத் துறைகளிலும் உள்ள திறமைசாலிகள் வாரத்திற்குக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அல்லது ஆண்டுக்கு நூறு மணி நேரங்கள் ஒதுக்கி மாணவர்களுக்குக் கற்பிக்கலாம்... இதன் மூலம் கல்வித்துறை புது வலிமை பெறும்” என்று கூறினார்.
தனது ஐந்து வயது வரை பேச்சே வராத விசாலினிக்கு அவரது தாய் கொடுத்த ஊக்கத்தால் இன்று பி.டெக். படித்துக்கொண்டிருக்கின்றார். ஆக, பெற்றோர்கள் - குறிப்பாக தாய்மார்கள்தான் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்கள். உங்களது மடிதான் அவர்களுக்கு முதல் பள்ளிக்கூடம் என்று ஷேக்ஸ்பியர் கூறுகின்றார். அந்த அடிப்படையில், எனதருமைப் பெற்றோர் நம் மாணவக் கண்மணிகளுக்கு நல்லதொரு ஊக்க சக்தியாகத் திகழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
கடற்கரையில் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும்:
நமது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வந்திருக்கின்றார்கள். அவர்களிடம் ஒரு சின்ன கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன்... அதாவது, எமது ஊரிலே மாணவர்களின் போக்கைப் பார்க்கும்போது சமூக விபரீதங்கள் ஏற்பட்டுவிடும் சூழலைக் காண்கின்றேன்... அது மனதுக்கு மிகவும் வேதனையளிக்கக் கூடியதாக இருக்கிறது... சமூக விரோதச் செயல்களின் கேந்திரமாக இந்த ஊரின் கடற்கரை மாறிக்கொண்டிருக்கின்றது... நம் மாணவ சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு நம்மில் ஒவ்வொருக்கும் உண்டு.
அந்த அடிப்படையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகிய தாங்கள், காயல்பட்டினம் கடற்கரையில் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்து, எமது மாணவக் கண்மணிகள் - எமது சமுதாயத்தின் தூண்கள் - எமது ஊரின் எதிர்கால சந்ததிகள் எந்தவொரு அழிவுப்பாதைக்கும் போகாமல் அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய ஒரு பணியைத் தாங்கள் ஆற்றித் தர வேண்டும் என்று இந்த ஊர் மக்களின் சார்பாகவும், பெற்றோர் - குறிப்பாக தாய்மார்கள் சார்பாகவும் நான் தங்களைக் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.
நிகழ்ச்சிக்கு வாழ்த்து:
இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் இணைந்து நடத்தும் அழகிய இந்த நிகழ்ச்சியின் மூலம் மாநிலத்தின் முதன்மாணவ-மாணவியரை ஆண்டுதோறும் நமதூர் மாணவ-மாணவியர் சந்தித்து உரையாடச் செய்ததன் பலனாக நமதூரின் கல்வித் தேர்ச்சி விகிதம் கனிசமாக உயர்ந்திருக்கிறது... அந்த வகையில், இன்னும் பல நூறு ஆண்டுகள் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று, நம் மாணவ சமூகத்திற்கு என்றும் ஊக்கமளிக்கும் சக்தியாகத் திகழ்ந்திட எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.
எப்பொழுதும் இந்த மேடையிலே நான் இறைவனிடம் வேண்டுவது போல், இந்த மேடையில் - இந்த இடத்தை அலங்கரிக்கக் கூடிய (மாநிலத்தின் முதன்மாணவர் என்ற) வாய்ப்பை நமதூர் மாணவர் இன்ஷாஅல்லாஹ் வருங்காலங்களில் பெற வேண்டும்... நிச்சயம் பெறுவார் என்ற நம்பிக்கையோடு, எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டி விடைபெறுகின்றேன் - நன்றி, அஸ்ஸலாமு அலைக்கும்.
இவ்வாறு, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றினார்.
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |