“பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து, அத்துறையில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்” என, 05.09.2015 அன்று காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் இணைந்து - காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் மைதானத்தில் நடத்திய “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஷ்வின் கோட்னிஸ் பேசினார். அவரது உரை வருமாறு:-
மதிப்பிற்குரிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் அவர்களே! இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தும் இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் அங்கத்தினரே! மாநிலத்தின் முதன்மாணவியரான பவித்ரா, நிவேதா ஆகியோரே... வாழ்த்துக்கள்!
பாராட்டு:
அவங்க வாங்கிய மதிப்பெண்களைப் பார்த்தால், ஒரு குடும்பத்துல நாலஞ்சி பேரு சேர்ந்து வாங்கிய மதிப்பெண்கள் போல இருக்கு! எஞ்சிய 6, 7 மதிப்பெண்கள் எங்கே போயிடுச்சி என்று கேட்கவே பயமாக இருக்கு!
நாங்கள் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 படித்தபோது பொதுவாக 95 சதவிகித மதிப்பெண்களை சாதனை மாணவர்கள் பெறுவார்கள்... இன்றோ, 100 சதவிகித மதிப்பெண்கள் சாதாரணமாக பெறப்படுகிறது... மாணவியரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்...
கடின உழைப்பே காரணம்:
இந்த சாதனைக்குக் காரணம் கடின உழைப்பும், தொடர் முயற்சியும்தான் காரணமென்று கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நிச்சயம் இம்மாணவியர் கூறியிருப்பார்கள். அறிவுத் திறனையும் தாண்டி, கடும் முயற்சிகள் இருந்தால்தான் இந்த சாதனைகளை அடைய முடியும். அந்த முயற்சியை யாரால் செய்ய முடியும்? தனது படிப்பில் சிலர் கடும் முயற்சிகளைக் கொண்டு சாதனை புரிகின்றனர்... மற்ற சிலரோ வேறு துறைகளில் திறமை காண்பித்து சாதனை புரிகின்றனர்...
நான் ஐ.பீ.எஸ். ஆகி 12 ஆண்டுகள் ஆகின்றன. ஐ.பீ.எஸ். ஆனபோது, , இந்த சாதனை மாணவியர் கே.ஜி. படித்துக்கொண்டிருந்திருப்பார்கள். இன்று 10ஆம் வகுப்பிலோ, 12ஆம் வகுப்பிலோ மாணவர்கள் மதிப்பெண்களைப் பெறுகின்றனர்... ஆனால், 40 வயதாக இருக்கும்போது, 20 வருடங்கள் கழித்து அவர்கள் என்னவாக இருப்பார்கள் என்று இப்போதே உறுதியாகச் சொல்லிவிட முடியாது. எனவே, முதல் நிலை மாணவர்களில் நான் இல்லை என்று கருதி ஒருவர் மன உளைச்சல் கொள்ளத் தேவையில்லை. அதுபோல, முதல் மதிப்பெண் பெற்றுவிட்டதால் எல்லாவற்றையும் சாதித்துவிட்டதாகவும் கருதிவிடக் கூடாது.
இன்று நாம் சாதித்துவிட்டதற்காக நமக்குப் பாராட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது... அதுவே நாளை இன்னொரு போட்டியில் சற்று பின்தங்கினால், இன்று நடப்பதை நினைத்து அன்று மனம் வருத்தப்படும். அந்தளவுக்கு மனது யோசிக்கத் தேவையில்லை... யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இங்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
இன்று சாதனை மாணவியராவதற்கு நீங்கள் என்னென்ன உழைப்புகளைக் கொடுத்தீர்களோ, அவற்றை இத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், உங்கள் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் பட்ட கஷ்டங்கள் உங்களுக்கு முழுப்பலன் தரும்.
மகளிரின் ஆர்வம்:
அதே நேரத்தில் இன்னொன்றையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்... அதாவது, இந்த அரங்கிற்குள் நான் நுழைந்தபோது ஒரு புறத்தில் பெண்கள் முழு அரங்கையும் நிறைத்து அமர்ந்திருக்கிறார்கள்... ஆனால் மாணவர்களோ ஆங்காங்கே விளையாடிக் கொண்டும், எஸ்.பீ.யின் வாகனத்தைப் பார்த்துக்கொண்டும் இருந்த காட்சியைக் கண்டேன். இப்போதுதான் அவர்கள் இருக்கையில் கொஞ்சங்கொஞ்சமாக அமர்வதைப் பார்க்கிறேன்... இது, இந்த காயல்பட்டினத்தின் மாணவியர் கல்வியின் மீது கொண்டுள்ள ஆர்வத்தைக் காண்பிப்பதாக உள்ளது. பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பெண்கள் பகுதியில் இருக்கை இல்லாமல் பலர் ஆங்காங்கே சுவரோரத்தில் அமர்ந்திருக்கின்றனர். ஆனால் மாணவர்கள் பக்கமோ நிறைய இருக்கைகள் வெற்றிடமாகவே உள்ளன.
கல்வியில் சாதிக்காதவர் பிற துறைகளில் சாதிக்கலாம்:
இதில் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கல்வியில் சிறந்து விளங்காத மாணவர்கள் பலர் விளையாட்டுத் துறையில் சிறந்தோங்குவார்கள். அவர்களுக்கு அந்தத் துறையிலேயே ஊக்கமளிக்க வேண்டும். கல்வியில் ஊக்கப்படுத்துவது நல்லதுதான். அதே நேரத்தில் அவர்களின் குறிக்கோள் என்ன என்பதையும் கருத்திற்கொண்டு செயலாற்ற வேண்டும். ஐந்து விரல்களும் என்றுமே ஒரே மாதிரி இருப்பதில்லை.
இன்றைய இந்தியாவில், அனைவருக்குமே வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. ஒரு ஷாருக் கான் பரீட்சையில் தோற்றிருக்கலாம்... ஆனால் இன்று சிறந்த நடிகர் என்ற நிலையில் இருக்கிறார்... சச்சின் டெண்டுல்கர் கூட எட்டாம் வகுப்பிலோ, பத்தாம் வகுப்பிலோ ஃபெயில் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஆனால் அவர் க்ரிக்கெட் ஜாம்பவானாகத் திகழ்ந்தார் என்பதை நாம் பார்த்துள்ளோம்.
பிள்ளைகளின் திறமையறிந்து ஊக்கமளிக்க வேண்டும்:
எனவே, உங்கள் பிள்ளைக்கு என்ன திறமை உள்ளதோ, அதைச் சரியாகக் கண்டறிந்து அதில் அவர்களை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். வெறுமனே ‘படி, படி’ என்று அடித்து அடித்து கூறிக்கொண்டே இருத்தல் சரியாகாது. எல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை உள்ளது என்பதை மட்டும் மனதில் ஆழப்பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களிடமிருக்கும் அந்தத் திறமைக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கட்டாயக் கடமை என்பதை மறந்து விடக்கூடாது.
நகர்மன்றத் தலைவர் அவர்கள் கூட இங்கே பேசும்போது, ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் அதன் பெற்றோர்தான் என்று கூறினார். அது உண்மை! ஓர் ஆசிரியருக்குக் கூட தன் மாணவரின் தனித் திறமையைக் கண்டறிய வாய்ப்புகள் குறைந்து போகலாம். ஆனால் பெற்றோருக்கு அது இலகுவானது. எனவே, உங்கள் மக்களிடம் என்ன தனித்திறமை உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதிலேயே அவர்களை ஊக்கப்படுத்தினால், நிச்சயம் உங்கள் பிள்ளைகள் நல்ல நிலையில் உயர்வார்கள்.
இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் - மருத்துவர், பொறியியல் வல்லுநர் ஆனால்தான் சாதனையாளர் என்று கருதப்பட்ட நிலை இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல! இன்று இந்த மேடையில் அமர்ந்திருக்கும் மாநில சாதனை மாணவியர், தாம் சார்ட்டட் அக்கவுண்டன்ட் (CA) ஆகப்போவதாகக் கூறுகிறார்கள்.
பல ஆண்டுகளாக நானும் பத்திரிக்கைகளில் பார்க்கும்போது, சாதனை மாணவ-மாணவியர் தான் மருத்துவராகவோ, பொறியியல் வல்லுநராகவோ ஆகப்போவதாகத்தான் கூறுவார்கள். இன்று அது மாறியிருக்கிறது. எனவே, சாதிக்க பல துறைகள் உள்ளன என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, உங்கள் யாவருக்கும் நான் சொல்ல விரும்புவதெல்லாம், இன்று கல்வியில் சிறந்தோங்கும் இவர்களை நாம் பாராட்டி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம். இதுபோல, எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குவோரும் முறையாக பாராட்டப்பட வேண்டும். அவ்வாறு செய்வது, வெவ்வேறு வகைகளில் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும்.
அரசுத் துறைகளில் முஸ்லிம்களின் ஆர்வம் அதிகரிக்க வேண்டும்:
அந்த வகையில், இந்த சிறப்பான நிகழ்ச்சியை இக்ராஃ, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. இதன் பலனாக, மனதில் பல்வேறு கற்பனைகளோடு இருக்கும் இந்த ஊரின் மாணவ-மாணவியர் தமது திறமைகளை உணர்ந்தறிந்து சிறந்து விளங்க இந்நிகழ்ச்சி பயன்படும்.
TNPSC தேர்வுகளுக்கு வழிகாட்டுவதாக இங்கே கூறியிருக்கிறார்கள். அது உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். அரசுத் துறைகளில் கவனம் செலுத்துவது - அதுவும் முஸ்லிம் சமூகம் கவனம் செலுத்துவது என்பது இந்திய அளவில் மிகவும் குறைந்த விகிதாச்சாரத்திலேயே உள்ளது.
கஷ்மீர் சாதனையாளர்:
பத்து நாட்களுக்கு முன்பு, மாவட்ட கண்காணிப்பாளருக்கு(SP)க் கீழுள்ள பொறுப்பான துணை கண்காணிப்பாளருக்கு (ASP) ஆட்கள் நியமிக்கப்பட்டனர். ஐ.பீ.எஸ். படித்து வெளிவரும் ஒருவர் முதன்முதலாக இப்பொறுப்பில்தான் அமர்த்தப்படுவார். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில், மாணவி ஒருவரும் தேர்வாகியிருக்கிறார். அவர் ஒரு பெண் என்பது மட்டுமல்ல! அவர் கஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த, டாக்டரான, முஸ்லிம் பெண் ஆவார். அடுத்த ஆண்டு இந்நிகழ்ச்சியை நடத்தும்போது கூட அவரை அழைத்துப் பாராட்டலாம். அவர் கோயமுத்தூரில்தான் பணியாற்றுகிறார். மாநிலத்தின் சாதனை மாணவியரான இவ்விருவரும் கோயமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், எளிதில் அவர்களைச் சந்திக்க வாய்ப்பிருக்கும்.
தமிழ்நாட்டுக்குள் நாங்களே முதன்முறையாக வந்தபோது, இங்குள்ள மொழி, உணவு அனைத்துமே எங்கள் வழமைக்கு மாற்றமானது என்பதால், சற்று பதட்டப்பட்டோம். ஆனால், இந்த கஷ்மீர் பெண், அவரது குழுவில் (batch) உள்ள அனைவரிலும் ஒரே பெண் என்பதும், மற்றவர்களெல்லாம் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க இவர் மட்டும் கஷ்மீர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தைரியம் அவசியம்:
அப்படித்தான் இவரும் இருப்பார் என்று கருதி நாங்கள் அவரிடம், “கவலைப்படாதீங்க... துவக்கத்தில் அப்படித்தான் இருக்கும்!” என்றபோது, “சார்! நான் கவலைப்படவே இல்லையே...? நான் நன்றாகப் பணியாற்றுவேன்... இந்தத் தமிழ்நாட்டில் பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்...” என்று சிறிதும் அலட்டலின்றிக் கூறியதைக் கேட்டு புருவம் உயர்த்தினோம். அந்த தைரியம் மிகுந்த பாராட்டுக்குரியது. அது மாணவ-மாணவியராகிய உங்களிடம் வர வேண்டும். அப்படியொரு தைரியம் ஒரு அதிகாரியிடம் இருப்பது உண்மையிலேயே எனக்கு முழு மகிழ்ச்சியளிக்கிறது.
பெற்றோரின் கடமை:
இங்குள்ள பெற்றோர் மனதில் கொள்ள வேண்டியது என்னவெனில், எனது மகன் அல்லது மகள் எந்தத் துறையிலேனும் சாதனை புரிந்து முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று மனதில் உறுதிகொண்டு, அதற்கேற்ப செயலாற்ற வேண்டும்.
குறிக்கோளை உயர்வாக வைத்துக்கொண்டால் கிடைப்பது எதுவானாலும் மகிழ்ச்சிதான். ஐ.பீ.எஸ். ஆக வேண்டும் என்று முயற்சித்தால் குறைந்தபட்சம் இன்ஸ்பெக்டர் நிலைக்காவது உயரலாம் அல்லவா? எனவே குறிக்கோளை மட்டும் என்றும் மிக உயர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் சாதனை மாணவியர் இருக்குமிடத்தில், அடுத்த ஆண்டிலோ அல்லது சில ஆண்டுகளிலோ இதே கல்வித் துறையிலோ அல்லது ஏதேனும் நல்ல துறைகளிலோ முதல்நிலை பெற்ற மாணவ-மாணவியர் அமர வேண்டும்... அவர்களைப் பாராட்ட எனக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எனது ஆவலைக் கூறி நிறைவு செய்கின்றேன், நன்றி.
இவ்வாறு, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஷ்வின் கோட்னிஸ் உரையாற்றினார்.
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |