காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா, 15.10.2015 வியாழக்கிழமையன்று பல்வேறு தடகளப் போட்டிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது.
விழா நிகழ்ச்சிகளை பள்ளியின் அரபி மொழி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கிராஅத்தைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர் ஆனந்தக்கூத்தன் விழா அறிமுகவுரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - கிருஸ்டியாநகரம் டீ.டி.டீ.ஏ. மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜேக்கப் மனோகர், விழா கொடியேற்றி வாழ்த்துரையாற்றினார்.
முன்னதாக அவருக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். துணை தலைமையாசிரியர் கே.எம்.ஐ.செய்யித் முஹ்யித்தீன் நன்றி கூறினார்.
தொடர்ந்து மாணவர் அணிவகுப்பு நடைபெற்றது. மகாத்மா காந்தி நினைவு வளைவிலிருந்து துவங்கிய - மாணவர்களின் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம், மைதானத்தில் முடிவடைந்தது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து அனைவரும் ஒலிம்பிக் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேடையில் அங்கம் வகித்தோர் சமாதானப் புறாக்களைப் பறக்க விட, விளையாட்டுப் போட்டிகள் துவங்கின.
வயது வரம்பிற்கேற்ப 100 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப் பந்தயங்கள், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், லக்கி கார்னர், மிதிவண்டி மெது ஓட்டப்போட்டி, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினரும், மேடையில் அங்கம் வகித்தோரும் பரிசுகளை வழங்கினர்.
பணி நிறைவு பெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் இப்பரிசளிப்பு விழாவின்போது பள்ளி நிர்வாகத்தால் கண்ணியப்படுத்தப்பட்டார். பள்ளியின் தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பையும், ஏற்கனவே பணி நிறைவு பெற்றும் - பள்ளியோடு இன்றளவும் தொடர்புடன் இருந்து சேவையாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகத்திற்கு, பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பியும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர். நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
ஏற்பாடுகளை, பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர் வழிகாட்டுதலில் - ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ
(ஆசிரியர், எல்.கே.மேனிலைப்பள்ளி)
எல்.கே.மேனிலைப்பள்ளியில் 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற விளையாட்டு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |