திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும் சட்டப்பேரவை தேர்தலை திமுக தலைமையில் காங்கிரஸ் எதிர்கொள்கிறது.
தமிழக அரசியல் களத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அறிவிப்புதான் முதல் கூட்டணி அறிவிப்பாக இருந்தது.
இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முடிவான நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த 25-ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் கருணாநிதியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அன்றைய தினம் எந்த முக்கிய முடிவும் எட்டப்படவில்லை.
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி என பேசப்பட்டு வந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்று (திங்கள்கிழமை) சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், "காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டில் நல்ல முடிவு ஏற்படும்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
தி இந்து |