தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) அணி சாம்பியன் பட்டத்தை வென்று, தமிழக அளவிலான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.. விபரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழகம் சார்பில், ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி லீக் முறையில் நடைபெறும். நடப்பாண்டிலும் வழமை போல தூத்துக்குடி மாவட்டத்தை - தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட அணிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி மண்டலம், நாசரேத், வீரபாண்டியன்பட்டினம், DCW, காயல்பட்டினம், திருச்செந்தூர், புன்னைக்காயல் உள்ளிட்ட அணிகளை உள்ளடக்கிய திருச்செந்தூர் மண்டலம் என இரு மண்டலங்களாகப் பிரித்து, கால்பந்து சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது. இதில், திருச்செந்தூர் மண்டல அணிகளுள் KSC உள்ளிட்ட இரண்டு அணிகள் புள்ளி அடிப்படையில் முதலிடங்களைப் பெற்று, அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக மைதானத்தில், 02.04.2016. சனிக்கிழமையன்று, இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், காயல்பட்டினம் KSC அணியும் - தூத்துக்குடி வில்சன் கால்பந்துக் கழக அணியும் மோதின. இதில், 3-1 என்ற கோல் கணக்கில் KSC அணி வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
மறுநாள் (04.04.2016. ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப்போட்டியில், தூத்துக்குடி ஸ்ப்ரிட்டெட் யூத் அணியுடன் மோதிய KSC அணி, 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 2015-2016ஆம் ஆண்டிற்கான தூத்துக்குடி மாவட்ட அளவிலான சாம்பியன் கோப்பையை வென்றது. அவ்வணி வீரர்களான ஸாலிஹ் 2 கோல்களும். முஹம்மத் அலீ 2 கோல்களும் அடித்தனர்.
இதன்மூலம், சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் – தமிழக அளவிலான சாம்பியன் கோப்பை சுற்றுப்போட்டியில் (DISTRICT CHAMPIONS LEAGUE) விளையாடத் தகுதிபெற்றுள்ளது.
தகவல் & படங்கள்:
M.B.S.சுலைமான்
(பொருளாளர் - KSC)
KSC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 10:41 / 06.04.2016.] |