சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட திருக்குர்ஆன் மனனப் போட்டியில் 8 ஹாஃபிழ்கள் பங்கேற்றுள்ளனர். போட்டி நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இன்ஷாஅல்லாஹ் - எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் எமதமைப்பின் உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழ்களுக்கான திருக்குர்ஆன் மனனப் போட்டி நேற்று (03.04.2016. ஞாயிற்றுக்கிழமை) 09.30 மணி முதல் 17.30 மணி வரை, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்றத்தின் சார்பில் ஞாயிறுதோறும் நடத்தப்பட்டு வரும் வாராந்திர - திருக்குர்ஆன் மனன மீளாய்வு (தவ்ர்) வகுப்பில் அங்கம் வகிக்கும்
(1) ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்
(2) ஹாஃபிழ் கே.ஷாஹுல் ஹமீத் பாதுஷா
(3) ஹாஃபிழ் எம்.ஐ.முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக்
(4) ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத்
(5) ஹாஃபிழ் செய்யித் அஹ்மத்
(6) ஹாஃபிழ் சாவன்னா பி.ஏ.ஷாஹுல் ஹமீத்
(7) ஹாஃபிழ் எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ
(8) ஹாஃபிழ் கே.எம்.எஸ்.தைக்கா ஸாஹிப்
ஆகிய 8 ஹாஃபிழ்கள் பங்கேற்றனர்.
சிங்கை பென்கூலன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் கய்யூம் பாக்கவீ, சிங்கப்பூர் தோப்புத்துறை அமைப்பின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஷேக் அலீ பாக்கவீ, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் ஆசிரியர் ஹாஃபிழ் மில்லத் இஸ்மாஈல், மஸ்ஜித் ஜாமிஆ சூலியா பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ ஆகியோர் நேரிலும்,
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும் - முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, தமிழகத்தின் தலைசிறந்த திருக்குர்ஆன் ஓதல் கலை வல்லுநர்களுள் ஒருவரான மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஸித்தீக் அலீ பாக்கவீ, மவ்லவீ ஹாஃபிழ் என்.ஜெ.நூர் முஹம்மத் ஸிராஜீ ஆகியோர் தொலைதொடர்பு வழியாகவும் நடுவர்களாகப் பணியாற்றி, போட்டியாளர்களிடம் கேள்விகளைக் கேட்டனர்.
நிறைவில்,
(1) ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல்
(2) ஹாஃபிழ் கே.ஷாஹுல் ஹமீத் பாதுஷா
(3) ஹாஃபிழ் எம்.ஐ.முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக்
ஆகியோர் முறையே முதல் மூன்றிடங்களைப் பெற்றனர். அவர்களுக்கு, வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
மன்ற உறுப்பினர்கள் இப்போட்டியில் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். முன்னிட்டு, அனைவருக்கும் காலை - மதிய வேளைகளில் உணவு ஏற்பாடுகளும், மாலையில் தேனீர் - சிற்றுண்டி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
சென்ற ஆண்டை விட, இம்முறை போட்டியாளர்களின் பங்கேற்பு கூடுதல் திறமையுடன் காணப்பட்டதாக நடுவர்கள் கூறினர்.
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு, திருக்குர்ஆன் வினா-விடை போட்டி (KWAS QUR’AN QUIZ) ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு (2015) சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட திருக்குர்ஆன் மனனப் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |