DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டம் சம்பந்தமான தீர்ப்பினை மறு சீராய்வு செய்ய, காயல்பட்டணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது. இது குறித்து, காயல்பட்டணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.சாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சி எல்லை பகுதியில் இருந்து செயல்புரியும் DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து, காயல்பட்டணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) தொடர்ந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டலம் கிளை - பிப்ரவரி 15 அன்று தள்ளுபடி செய்தது.
நீதிபதி சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் வழங்கிய அந்த தீர்ப்பில் அடிப்படை தவறுகள் உள்ளன என சுட்டிக்காட்டி, KEPA அமைப்பு - மறு சீராய்வு மனுவை (REVIEW PETITION), தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முன்பு தாக்கல் செய்திருந்தது.
மறு சீராய்வு மனுவும் தற்போது, பசுமை தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர்,
"தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய தகுதியான புதிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், தொழிற்சாலைக்கு ஆவணங்கள் தயாரித்த நிறுவனத்திற்கு, NABET அமைப்பு - 1.5.2014 அன்று தகுதி சான்றிதழ் (ACCREDITATION) வழங்கியுள்ளது என்றும், மேலும் - DCW நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட விஷயத்தில் போதிய அளவு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன (SUBSTANTIAL COMPLIANCE)
எனவும் தெரிவித்துள்ளனர்.
காயல்பட்டணம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவில், அறிக்கை தயாரித்த நிறுவனங்கள் தகுதி குறித்த புதிய ஆவணங்கள், ஆய்வு கூடத்தின் தகுதி குறித்த மோசடியை வெளிபடுத்தும் புதிய ஆவணம், கொட்டமடைக்காடு - காப்பு காடு (RESERVED FOREST) என்பதற்கான புதிய ஆவணம் உட்பட பல்வேறு புதிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பில் மேற்கோள்காட்டப்பட்டுள்ள 1.5.2014 அன்று வழங்கப்பட்ட PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவனத்திற்கான அனுமதி, அந்நிறுவனம் - 16.5.2012 அன்று சமர்ப்பித்த விண்ணப்பத்தின் அடிப்படையிளானது. இந்த விண்ணப்பத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே, PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவனம் - DCW தொழிற்சாலைக்கு ஆவணங்கள் தயார் செய்து முடித்து விட்டது.
மேலும், அந்த விண்ணப்பத்தில், DCW தொழிற்சாலைக்கு ஆவணம் தயாரித்த அனுபவத்தையும் PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED காண்பித்துள்ளது.
இது தவிர, வழங்கப்பட்ட சான்றிதழ் (ACCREDITATION), நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது (ON HOLD). அந்த நிபந்தனைகளை - அந்நிறுவனம் பூர்த்தி செய்யாததால், 2015இல் அந்த அனுமதியும் நிரந்தரமாக ரத்தும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் - தகுதி சான்றிதழ் வழங்கியதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள NABET அரசு நிறுவனம், DCW தொழிற்சாலைக்கு ஆவணங்கள் தயாரிக்க - இரு நிறுவனத்திற்கும் (PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED மற்றும் CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED) தகுதி கிடையாது என தெரிவித்த ஆவணமும் ஏற்கனவே தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றில் எதனையும், தீர்ப்பாயம் - தனது தீர்ப்பில் கண்டுக்கொள்ளவில்லை.
|