மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியில்லாமல் பயோ காஸ் திட்டப் பணிகளை உள்ளாட்சி மன்றங்கள் துவக்கிய வழக்கில், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரையும் (COMMISSIONER OF MUNICIPAL ADMINISTRATION;CMA) எதிர்மனுதாரராக இணைக்க - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளை உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:
திடக்கழிவுகள் கொண்டு பயோ காஸ் உற்பத்தி செய்து, அதன் மூலம் பெறப்படும் மின்சாரம் கொண்டு தெரு விளக்குகளை இயக்கும் திட்டத்தினை தமிழக அரசு 2013ம் ஆண்டு அறிவித்தது. மொத்தம் சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், 5 மாநகராட்சிகளிலும், 24 நகராட்சிகளிலும் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழக அரசின் அறிவிப்பில் இடம்பெற்ற மாநகராட்சிகள்:
திருச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருநெல்வேலி
தமிழக அரசின் அறிவிப்பில் இடம்பெற்ற நகராட்சிகள்:
காயல்பட்டினம், ஓசூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல், ராஜபாளையம், நாகர்கோயில், கும்பகோணம், பள்ளிப்பாளையம், பூந்தமல்லி, மேட்டூர்,ஆவடி, கடலூர், பல்லாவரம், திருவண்ணாமலை, கரூர், உதகமண்டலம்,பொள்ளாச்சி, பழனி, திருத்தணி, திருச்செங்கோடு, நாகபட்டினம், மேட்டுப்பாளையம், கோபி செட்டிபாளையம்
பல உள்ளாட்சி மன்றங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி இன்றியே பணிகளை துவக்கிவுள்ளன என்ற குற்றச்சாட்டினை தொடர்ந்து, அது குறித்து - மே 9 தேதிக்குள், அறிக்கை சமர்ப்பிக்க - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, ஏப்ரல் 7 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மேலும் - இத்திட்டங்களில், மாநில அளவில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளன என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (மே 9) இவ்வழக்கு மீண்டும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளையின் முன்பு வந்தது.
அப்போது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழக்கறிஞர் யாஸ்மீன் அலி, அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரினார்.
இந்த வழக்கில் பல உள்ளாட்சி மன்றங்கள் சம்பந்தப்படுவதால், நகராட்சி நிர்வாகத்துறையின் ஆணையரையும் (COMMISSIONER OF MUNICIPAL ADMINISTRATION;CMA) எதிர் மனுதாரராக இணைக்க உத்தரவிட்டு, வழக்கினை - ஜூலை 18 தேதிக்கு, நீதிபதி ஜோதிமணி ஒத்திவைத்தார். |