காயல்பட்டினம் தீவுத்தெருவில், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் ஃபாத்திமா நர்ஸரி பள்ளி உட்பட - தூத்துக்குடி மாவட்டத்தின் 3 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் அங்கீகாரமற்றவை என்றும், அவற்றின் மாற்றுச் சான்றிதழ்களை போலியானவையாகக் கருதி சேர்க்கை மறுக்கப்பட வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் கடந்த மார்ச் மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, ஃபாத்திமா நர்ஸரி பள்ளியைத் திறக்காமல் இருப்பதற்காக, இரண்டு நாட்களுக்கு முன் கல்வித் துறை அதிகாரிகள் அப்பள்ளியின் வாயில்களில் முத்திரை (சீல்) வைத்து, “பாத்திமா நர்சரி பள்ளக் கூடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி சீல் வைக்கப்பட்டுள்ளது” என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் பள்ளியின் வாயிலில் அறிவிப்பும் ஒட்டப்பட்டிருந்தது.
இவ்வாறிருக்க, இன்று புதிய கல்வியாண்டு பள்ளி திறப்பை முன்னிட்டு, ஃபாத்திமா நர்சரி பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர் பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் அறிவிப்புடன் பள்ளி பூட்டப்பட்டு, முத்திரையிடப்பட்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, பள்ளியைத் திறக்கக் கோரி வாசல் அருகில் சுமார் 100 பேர் திரண்டு முற்றுகையிட்டனர்.
இத்தகவலறிந்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் செந்தூர் ராஜன், தொடக்கப் பள்ளிக்கான உதவி கல்வி அலுவலர் டக்ளஸ் ஆல்பர்ட் ராஜ், வட்ட வழங்கல் அலுவலர் கோபாலகிருஷ்ணன், திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல், ஆறுமுகநேரி காவல் உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி, தலைமைக் காவலர் ரகு, காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் ஃப்ரான்சிஸ் பாரதி ஆகியோர் நிகழ்விடம் வந்து, ஃபாத்திமா நர்சரி பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை செய்ததோடு, குழுமியிருந்த பெற்றோரின் முறையீடுகளையும் கேட்டறிந்தனர்.
பின்னர் காயல்பட்டணம்.காம் இடம் பேசிய அதிகாரிகள், குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாதிருப்பதற்காக பள்ளியைத் திறக்குமாறு பெற்றோர் கோரியதன் அடிப்படையில், ஃபாத்திமா நர்சரி பள்ளியை தற்காலிகமாகத் திறந்து, புரிந்துணர்வு அடிப்படையில் இச்சர்ச்சை தொடர்பான அனைவரையும் அழைத்துப் பேசி சுமூக தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப் போவதாகக் கூறிச் சென்றனர்.
ஃபாத்திமா நர்ஸரி பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 23:03 / 01.06.2016.] |