ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் உள்ள - காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வருகிறது “அமீரக குருவித்துறைப் பள்ளி மஹல்லா கூட்டமைப்பு”.
இதன் சார்பில், காயல்பட்டினத்தில் குருவித்துறைப்பள்ளி மஹல்லாவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பொதுநலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், மரைக்கார் பள்ளித் தெரு பெரிய கல் தைக்காவில் இயங்கி வரும் முஹ்யித்தீன் மத்ரஸத்துன் நிஸ்வான் துணையுடன், கடந்த மே மாதத்தில் சுமார் 25 நாட்கள் கோடைகால பயிற்சி முகாம், இளம் மாணவ-மாணவியருக்காக நடத்தப்பட்டது. 10 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவியருக்காக நடத்தப்பட்ட இப்பயிற்சி வகுப்பில், சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 57 பேர் பயின்று முடித்துள்ளனர்.
அவர்களைப் பாராட்டி வழியனுப்பும் நோக்குடன், 22.05.2016. புதன்கிழமையன்று, பயிற்சி முகாம் நிறைவு விழா நடத்தப்பட்டது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவ-மாணவியர் பல்வேறு சன்மார்க்க நிகழ்ச்சிகளை பொதுமக்கள் முன் நடத்திக் காண்பித்தனர். அவர்கள் அனைவருக்கும் - திருவாவடுதுறை இஸ்லாமிய பைத்துல்மால் கல்வி அறக்கட்டளையின் அனுசரணையில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாம் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி - ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ ஆகியோர், மாணவ-மாணவியரை வாழ்த்திப் பேசி, அறிவுரைகளை வழங்கினர்.
பயிற்சி வகுப்புகளையும், நிறைவு விழாவையும், ஊஷி எஸ்.எச்.ருக்கய்யா பீவி, ஜுல்ஃபிகா உள்ளிட்டோர் பொறுப்பேற்று நடத்தினர். விழா நிறைவில், பயிற்சி வகுப்பில் பயின்ற மாணவ-மாணவியரை குழுப்படப் பதிவு செய்யப்பட்டது.
இவ்விழாவில் திரளான மகளிர் பங்கேற்று, மாணவ-மாணவியரை வாழ்த்திப் பாராட்டினர்.
தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் M.A.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ
(உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் - அமீரக குருவித்துறைப்பள்ளி ஜமாஅத் கூட்டமைப்பு)
அமீரக குருவித்துறைப் பள்ளி ஜமாஅத் கூட்டமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |