கத்தர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எம்.என்.முஹம்மத் சுலைமான் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இறையருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 83ஆவது செயற்குழுக் கூட்டம், 28.05.2016. சனிக்கிழமையன்று, கத்தர் மன்ஸூராவிலுள்ள காயல் நண்பர்கள் இல்லத்தில், மன்ற ஆலோசகர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையில், தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் முன்னிலையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் மீரான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
நகர்நலன் குறித்த - செயற்குழு உறுப்பினர்களின் நீண்ட கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மன்ற அபிமானியின் மறைவுக்கு இரங்கல்:
கத்தர் காயல் நல மன்றத்தால் அண்மையில் நடத்தப்பட்ட மாடித்தோட்ட பயிற்சி முகாம் உள்ளிட்ட - நகர்நலத் திட்டங்கள் அனைத்திலும் தன்னார்வத்துடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் களப்பணியாற்றிய அன்புச் சகோதரர் அல்ஹாஜ் பாளையம் முஹம்மத் இஸ்மாஈல் ஸாஹிப் அவர்கள் அண்மையில் விபத்தில் காலமான செய்தி...
எம் மன்றத்தின் மூத்த உறுப்பினர் சோனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் மச்சான் கூஸ் ஷாஹுல் ஹமீத் ஸலீம் அவர்களின் மறைவுச் செய்தி...
ஆகியன எமக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது. அன்னவர்களின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்களது மண்ணறை - மறுமை நல்வாழ்வுகளுக்காக உளமாரப் பிரார்த்திக்கிறது.
அவர்களது குடும்பத்தாருக்கு எல்லாம்வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை வழங்கியருள இக்கூட்டம் உருக்கமுடன் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 2 - பள்ளிச் சீருடை இலவச வினியோகம்:
நடப்பு கல்வியாண்டில், நகரிலுள்ள ஏழை - எளிய மாணவ-மாணவியர் 100 பேருக்கு, கத்தர் காயல் நல மன்றம், ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றம் (KWAUK), சிங்கப்பூர் காயல் நல மன்றம் (KWAS), பஹ்ரைன் காயல் நல மன்றம் (BAKWA) ஆகிய அமைப்புகளுடன் (அவர்களின் ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டதன் அடிப்படையில்) இணைந்து, பள்ளிச் சீருடைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை, இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் நடைமுறைப்படுத்த இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
மன்றத்தின் இத்திட்டத்தில் இணைந்து செயல்படவும், இக்ராஃ மூலம் இத்திட்டத்தை செயல்படுத்திடவும் இசைந்துள்ள மேற்படி அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் கத்தர் காயல் நல மன்றம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் 3 - நகரின் முதல் சட்டமன்ற உறுப்பினருக்குப் பாராட்டு:
அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள - காயல்பட்டினத்தின் முதலாவது சட்டமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ள அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுவதோடு, அவரது பணிகள் சிறக்க வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 4 - இமாம் - முஅத்தின் நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகைக்கு பங்களிப்பு:
தாய்லாந்து காயல் நல மன்றத்தின் (தக்வா) ஒருங்கிணைப்பில் கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் - நகர பள்ளிவாசல்களின் இமாம் - முஅத்தின் நோன்புப் பெருநாள் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தில் இணையவும், அவ்வகைக்காக 15 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்தும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - சாதனை மாணவ-மாணவியருக்கு பாராட்டு:
அண்மையில் வெளியான SSLC, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளின்படி, காயல்பட்டினத்திலுள்ள பள்ளிகளில் பயின்று மாநில - மாவட்ட - நகர அளவில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற சாதனை மாணவ-மாணவியர் அனைவரையும் இக்கூட்டம் மனதாரப் பாராட்டி மகிழ்வதோடு, அவர்களின் உயர்கல்வியும், வருங்காலமும் சிறக்க வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.
அதே நேரத்தில், இம்முறை சுமார் 46 பேர் தேர்ச்சி பெறாமல் போனதையறிந்து இக்கூட்டம் கவலை கொள்கிறது. இது தொடர்பாக அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இக்ராஃ நிர்வாகி அல்ஹாஜ் ஏ.தர்வேஷ் முஹம்மத் அவர்களுடன் தொலைபேசியில் பேசப்பட்டுள்ளதையும் இக்கூட்டம் பதிவு செய்கிறது.
தீர்மானம் 6 - இஃப்தாருடன் வருடாந்திர பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் இணைத்து, இன்ஷாஅல்லாஹ் வரும் 10.06.2016. அன்று நடத்திட இக்கூட்டம் தீர்மானிப்பதோடு, நிகழ்விடம் குறித்து உறுப்பினர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறது.
இவ்வாறாக தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. ஹாஃபிழ் ஏ.எச்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் காயல் நல மன்றம்)
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (79ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |