வறுமையில் துவண்ட தன்னைத் துவக்கமாகத் தூக்கி நிறுத்திய முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகத்திற்கும், இன்றளவும் வாழ வைத்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக, பணி நிறைவில் விடைபெற்றுச் செல்லும் எல்.கே.மேனிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் அப்துர்ரஊஃப் (தொடர்பு எண்: +91 88708 89203), பிரியாவிடை நிகழ்ச்சியில் உருக்கமாக உரையாற்றினார். விரிவான விபரம் வருமாறு:-
எல்.கே.மேனிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் அப்துர்ரஊஃப் - பணி நிறைவில் விடைபெற்றுச் செல்வதையொட்டி, பள்ளியின் மரபுப் படி பிரியாவிடை நிகழ்ச்சி, 03.06.2016. வெள்ளிக்கிழமையன்று 14.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர், ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி, பெற்றோர் - ஆசிரியர் கழக செயலாளர் பாளையம் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் உரை:
அரபி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, பணி நிறைவில் செல்லும் ஆசிரியரின் நற்குணங்கள், சேவைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
தன்னை விட வயதில் மூத்தவரான அவரை சக அலுவலராகப் பார்க்காமல், இன்றளவும் குடும்ப உறவுமுறை சொல்லியே அழைப்பதாகவும், அதில் தனக்கு முழு இன்பம் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.
ஆசிரியர் அப்துர்ரஊஃப் கணித மேதை என்றால் அது மிகையல்ல என்றும், சிறு குழந்தைகளுக்கும் புரியும் வகையில், பாட்டுப்பாடும் ராகத்துடன் அவர் கணிதத்தை நடத்தும் பாணியே தனித்துவம் மிக்கது என்றும் கூறிய அவர் - பழகுவதற்கு இனியவர், யாராலும் விரல் நீட்டிக் குறை சொல்ல வழி வைக்காதவர், உதவும் குணம் கொண்டவர், தன்னிடம் இல்லாத காலகட்டத்திலும் வறுமையை வெளிக்காட்டாமல் கவுரவமாக வாழ்ந்தவர், அவர் இருக்கும் வகுப்பறைக்கு எப்போது சென்றாலும் ஒரு நிமிடம் கூட ஓய்வில் இருந்து அவரைக் கண்டதில்லை என்று புகழ்ந்துரைத்தார்.
அண்மையில் இடுப்பு எலும்பில் ஏற்பட்ட மிகப்பெரிய சுகவீனத்தால் - “இனி பிழைப்பாரா?” என்று கேட்குமளவுக்கு படுத்த படுக்கையாகிவிட்ட நிலையிலும், அவரது நல்ல மனதால் கவரப்பட்ட அனைத்து மக்களின் பிரார்த்தனைகளின் பலனாக விரைவிலேயே குணமாகி இன்று நம் முன் பழைய ஆசிரியராகக் காட்சியளிப்பது அற்புதம் என்று கூறினார்.
தாளாளர் உரை:
பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை வாழ்த்துரையாற்றினார். கணிதம் என்றாலே அனைத்து மாணவ-மாணவியரும் ரஊஃப் சார் பெயரையே உச்சரிப்பர் என்றும், அவரிடம் டியூஷன் பயில, பெண் மக்களைக் கூட நம்பிக்கையுடன் பெற்றோர் அனுப்பி வைப்பது அவரது நற்குணத்திற்கு ஒரு சான்று என்றும் அவர் கூறினார்.
தலைவர் உரை:
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பள்ளியின் ஆட்சிக் குழு தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் வாழ்த்துரையாற்றினார்.
தனது பள்ளிப்பருவத்தில் ஓர் ஆண்டு கூட காயல்பட்டினத்தில் கழிந்ததில்லை என்றும், ஆனால் இப்பள்ளியின் ஆட்சிக்குழு தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, காயல்பட்டினத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இத்தனை பணிப்பளுவுக்கிடையிலும் சொந்த ஊருக்கு வந்து செல்வது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.
தான் எந்த நாட்டில் இருந்தாலும் இப்பள்ளியின் முன்னேற்றம் குறித்து தலைமையாசிரியர், ஆசிரியர்கள், நிர்வாகிகளுடன் அடிக்கடி தொலைதொடர்புக் கருவிகள் வழியே கேட்டறிவது வழமை என்று கூறிய அவர், அண்மையில் நடைபெற்ற ப்ளஸ் 2 தேர்வில் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்காக தலைமையாசிரியரோ, ஆசிரியர்களோ கவலை கொள்ளத் தேவையில்லை என்றும், அவரவர் பணியை சிறப்பாகவே செய்ததைத் தான் அறிந்துள்ளதாகவும் கூறியதோடு, இனி வருங்காலங்களில் முழுத் தேர்ச்சி நிலையை அடைய அனைவருடனும் தானும் இணைந்து முயற்சிக்கப் போவதாகவும், நடப்பில் உள்ள குறைகளைக் கண்டறிந்து அவற்றைக் களைந்து, முன்பு போல சிறப்பான தேர்ச்சியை வழங்க அனைத்தையும் செய்யவுள்ளதாகவும், இது விஷயத்தில் தலைமையாசிரியர் எடுக்கும் முடிவுகள் அனைத்திற்கும் நிர்வாகம் முழு ஒத்துழைப்பளிக்கும் என்றும் கூறினார்.
விடைபெறும் ஆசிரியர் குறித்துப் பேசிய அவர், அவரது சேவைகளை நினைவுகூர்ந்தார். உடல் நிலை கவலைக்கிடமான தகவல் தனக்குத் தெரியவே தெரியாது என்றும், “இனி இதுபோன்ற நிலை யாருக்கும் வராமல் இறைவன் காப்பாற்றட்டும்... ஒருவேளை நம் பள்ளியில் பணியாற்றும் யாருக்காவது அல்லது யாருடைய இரத்த உறவினருக்காவது உடல்நலக் குறைவு என்றால், என்னாலான அனைத்து உதவிகளையும் செய்ய ஆயத்தமாக உள்ளேன்” என்று அவர் நிகழ்ச்சியின்போதே அறிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கரவொலியெழுப்பி அதை வரவேற்றனர்.
தங்க நாணயம் & விருது அன்பளிப்பு:
விடைபெறும் ஆசிரியருக்கு அடுத்து விடைபெறும் ஆசிரியர் தங்க நாணயம் வழங்குவது பள்ளியின் மரபு. அதன்படி, அடுத்து விடைபெறப் போகும் ஆசிரியர் ஆனந்தக் கூத்தன் தற்போது விடைபெறும் ஆசிரியர் அப்துர்ரஊஃபுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தங்க நாணயம் வழங்கினார். பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் எல்.கே.லெப்பைத்தம்பி அவருக்கு விருது வழங்கினார். தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அன்பளிப்பு வழங்கி கண்ணியப்படுத்தினார்.
வாழ்த்துரை:
அனைத்து ஆசிரியர்கள் சார்பாக, ஆசிரியர் முஜீபுர்ரஹ்மானும், முன்னாள் மாணவர்கள் சார்பாக எஸ்.கே.ஸாலிஹும் வாழ்த்திப் பேசினர்.
ஏற்புரை:
நிறைவாக விடைபெறும் ஆசிரியர் அப்துர்ரஊஃப் ஏற்புரையாற்றினார்.
10.05.1958ஆம் ஆண்டு பிறந்த நான், எம்.ஏ. (பொருளியல்), பி.எஸ்ஸி. (கணிதம்), பி.எட். ஆகிய பட்டப்படிப்புகளைப் படித்து முடித்துள்ளேன்.
படிப்பு முடிந்ததும் 1978ஆம் ஆண்டில், நெல்லை வண்ணாரப்பேட்டையில் தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றினேன். என்றாலும், ஆசிரியர் பணியில் அதிக நாட்டம் இருந்ததால், காயல்பட்டினத்தில் புதிதாக மெட்ரிகுலேஷன் பள்ளி திறக்கப்படுவதாகவும், அதற்கு ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் அறிந்து அதற்காக விண்ணப்பித்தேன்.
அதன்படி, 1979ஆம் ஆண்டில் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் எனக்கு ஆசிரியராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. மனமுவந்து அதை நான் செய்து வந்தேன். சாதாரண ஆசிரியராக, பின்னர் உதவி தலைமையாசிரியராக, பின்னர் தலைமையாசிரியராகவெல்லாம் அங்கு என்னைப் பணியாற்றச் செய்து உயர்த்தினார்கள்.
அங்கு அப்போது கிடைத்த ஊதியத்தைக் கொண்டு பி.எட். படித்து முடித்தேன். டியூஷன் நடத்திய வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவினங்களைக் கவனித்துக் கொண்டேன்.
பின்னர், எல்.கே.மேனிலைப்பள்ளியின் அப்போதைய ஆட்சிக்குழு தலைவர் மர்ஹூம் கனி காக்கா அவர்கள், என்னைப் பற்றிக் கேட்டறிந்தும், அவர் வீட்டிற்கருகிலேயே இருந்த அவருக்குச் சொந்தமான இன்னொரு வீட்டை வாடகையின்றி எனக்களித்தும் எனது சிரமத்தில் பங்கேற்றார்.
என்னைப் பற்றி நன்கு அறிந்த அவர், அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கத் தூண்டினார். அதன் விளைவாகவே இப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, இன்று விடைபெற்றுச் செல்லும் நிலையிலிருக்கிறேன்...
எனது பணிக்காலங்களில், என்னுடன் ஒத்துழைத்த அனைத்து ஆசிரியர்களையும் நான் வெகுவாக மதிக்கிறேன். அவர்கள் அனைவரும் என்னை அவர்களுள் ஒருவனாக மதித்துப் பார்த்துக் கொண்டார்கள். நான் விடைபெறும் இந்தத் தருணத்தில் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
என்னை அடையாளங்காட்டி தூக்கி நிறுத்திய முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தையும், எனக்கு வாழ்வளித்த எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகத்தையும் என் வாழ்நாளெல்லாம் மறக்க மாட்டேன்...
நான் சுகவீனப்பட்டு படுக்கையில் கிடந்தபோது, என் வாழ்வு முடியப்போகிறது என்றே கருதினேன். அந்த நேரத்தில், யாரென்றே தெரியாத - என்னிடம் பயின்று தற்போது அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் மாணவர் ஒருவர் அனைத்துத் தடைகளையும் தாண்டி என்னுடன் தொலைபேசியில் உரையாடி, சுகம் விசாரித்து, “உங்கள் சிகிச்சைக்கு பணம் ஒரு தடையாக இருக்கவே கூடாது... அன்று கஷ்ட நிலையிலிருந்த எனக்குக் கணிதம் சொல்லித் தந்து நீங்கள் ஆளாக்கியதாலேயே இன்று நான் இந்த அளவுக்கு முன்னேற்றத்துடன் இருக்கிறேன்... உங்கள் சிகிச்சைக்கு எவ்வளவு பொருள் செலவானாலும் அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்...” என்றார்.
இத்தகைய நல்ல நிர்வாகங்களையும், சக ஆசிரியர்களையும், வியத்தகு மாணவர்களையும் பெற்றுள்ள நான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவன்...
பள்ளியில் பயின்ற காலகட்டத்தில் பயமுறுத்தும் வகையில் பல மாணவர்களின் சேட்டைகளும், குறும்புகளும் இருக்கும் என்றாலும், படித்து முடித்த பின்பு அவர்கள் இன்றவும் காண்பிக்கும் பாசத்திற்கும், நேசத்திற்கும் ஈடு இணை கிடையாது.
இந்தப் பள்ளியில் பணியில் சேருவதற்காக ஒற்றைப் பைசா கூட நம்மிடம் அவர்கள் எதிர்பார்த்ததில்லை. மாறாக, இன்றளவும் நம் நன்மைக்காக அவர்கள் தங்கள் கைக்காசை தாராளமாக செலவு செய்து வருகின்றனர். அப்பேர்பட்ட இந்த நிர்வாகத்திற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே கைமாறு, இந்தப் பள்ளிக்கு நல்ல தேர்ச்சியையும், சிறந்த சாதனை மதிப்பெண்களையும் பெற்றுத் தருவதாகத்தான் இருக்கும். அதை அனைவரும் இணைந்து செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்...
என் பணிக்காலத்தில் உங்களில் யாருக்கேனும் எனது சொல்லாலோ செயலாலோ வேதனையளித்திருந்தால் இறைவனுக்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்... என்றும் உங்களுள் ஒருவனாக நான் இருப்பேன். என்னை நேசித்த உங்கள் யாவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் அனைவரும் நிறைவான உடல் நலமுடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு பலவாண்டு வாழ்வாங்கு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்...
இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது. பின்னர், விடைபெறும் ஆசிரியருடன் நிர்வாகிகளும், ஆசிரியர்கள் - அலுவலர்களும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இல்லம் வரை...
பின்னர், பள்ளி வழமைப் படி, அனைத்து ஆசிரியர்களும் - பணி நிறைவில் செல்லும் ஆசிரியரின் - காயிதேமில்லத் நகரிலுள்ள இல்லம் வரை சென்று வழியனுப்பி, குடும்பத்தாருக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றனர். அனைவருக்கும் அங்கு தேனீர் & சிற்றுண்டி விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
விருந்துபசரிப்பு:
முன்னதாக, அன்று மதியம் எல்.கே.மேனிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் அனைவருக்கும் சைவ / அசைவ விருந்து வழங்கி உபசரிக்கப்பட்டது.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |