காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில் அழைப்பாளர் பயிற்சி முகாம், விடுதி புதிய கட்டிட திறப்பு, வருடாந்திர நிகழ்ச்சி ஆகியன, 01.05.2016. ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர். விபரம் வருமாறு:-
அழைப்பாளர் பயிற்சி முகாம்:
அன்று காலையில் தஃவா சென்டர் சார்பில் அழைப்பாளர் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 5ஆவது குழுவிற்கான நிறைவு நாள் நிகழ்ச்சியில், மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் ஃபாஸீ, மவ்லவீ அப்துல் காதிர் மன்பஈ, எழுத்தாளர் சாளை பஷீர், வழக்குரைஞர் முஹம்மத் ஹுஸைன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
நிறைவில், 15 மாணவர்கள் - 22 பெண்கள் என மொத்தம் 37 பேருக்கு பரிசுகளும், அழைப்பாளருக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விடுதி புதிய கட்டிட திறப்பு:
தஃவா சென்டரின் புனித குர்ஆன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்காக தனித்தனியே விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
ஆண்களுக்கான விடுதி புதிய கட்டிடத்தை, எவ்வித இலாப நோக்கமுமின்றி தன் நேரடி மேற்பார்வையில் செய்து முடித்த பொறியாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் திறந்து வைத்தார். பெண்களுக்கான விடுதியை, இஸ்லாமைத் தன் வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட ரஹீமா திறந்து வைத்தார்.
19ஆவது வருடாந்திர நிகழ்ச்சி:
அன்று மாலையில், தஃவா சென்டரின் 19ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி குட்டியாபள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எஸ்.இப்னு ஸஊத் தலைமை தாங்கினார். டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், அப்துல் மாலிக், இளையாங்குடி தஃவா சென்டரைச் சேர்ந்த காதிர், காயல்பட்டினம் தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ (48) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
17.15 மணி முதல் மஃரிப் தொழுகை நேரம் வரை, இஸ்லாம் மார்க்கத்தைத் தம் வாழ்வியலாகக் கொண்டு, புனித குர்ஆன் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களும், மஃரிப் தொழுகைக்குப் பிறகிலிருந்து 20.30 மணி வரையிலும் மாணவியரும் தமது அனுபவங்களை உரைகளாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், புதிதாக இஸ்லாமைத் தழுவிய மோனிகா என்ற ரஹீமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், உள்ளூர் - வெளியூர்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. வெளியூர் மக்களுக்கு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
தஃவா சென்டர் சார்பில் கடந்தாண்டு (2015) நடத்தப்பட்ட (18ஆவது) வருடாந்திர நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |