ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட - இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் கூடிய பொதுக்குழுக் கூட்டத்தில், காயலர்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும். வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 8ஆவது பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் - நிகழ்ச்சியுடன் இம்மாதம் 16ஆம் நாள் - ரமழான் பிறை 11 வியாழன் மாலையில், அபூதபீ சலாம் சாலையிலுள்ள லூலு பில்டிங், 7வது மாடியில் அமைந்துள்ள அரப் உடுப்பி பேன்க்குவெட் அரங்கில் சிறப்புற நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
ஹாஃபிழ் K.M.இப்திஹாருத்தீன் இறைமறை வசனங்களை ஓதி, கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மன்றத்தின் துணைத்தலைவர் ஜனாப். S.A.C. ஹமீது அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார்.மக்கள் தொடர்பு செயலர் A.R. ரிபாய் அவர்கள் மன்றத்தின் அழைப்பினை ஏற்று குடும்ப சகிதம் வருகை தந்த அனைத்து நிர்வாக குழு,பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்று அமர்ந்தார்.
மன்ற செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஜனாப் எம்.இ. முகியதீன் அப்துல் காதர் மஃரிப் பாங்கு ஒலிக்க இஃப்தார் நிகழ்வு துவங்கி முதல் அமர்வு மக்ரிப் தொழுகைக்காக்க இடைநிறுத்தம் செய்யப்பட்டு இரண்டாம் அமர்வு துவங்கப்பட்டது.
தலைமையுரை:
மன்றத்தின் தலைவர் ஜனாப் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை தலைமையுரையாற்றினார்.
மன்றம் இதுவரை ஆற்றிய உதவிகளையும், மன்றத்தின் செயல்பாடுகளையும், தாய்லாந்து காயல் நல மன்றத்துடன் இணைந்து - காயல்பட்டினம் நகர இமாம் - முஅத்தின்களுக்கு ரமழான் ஊக்கத்தொகை வழங்கவுள்ளமை, இவ்வாண்டு முதல் நம் நலமன்றத்தால் தனித்து 100 ஏழை-எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் உணவுப் பொருட்கள் மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வழங்கியமை குறித்தும் மென்மேலும் பல நல்ல திட்டங்கள் பணிகளும் தங்குதடை - தொய்வின்றி சிறப்புற செய்து முடிக்கப்பட, மன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் தமது சந்தா தொகைகளை நிலுவை எதுவுமின்றி, கடமையெனக் கருதி, குறித்த நேரத்தில் வழங்கி ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டு கொண்டதோடு மன்றத்தால் நடத்தப்படும் கூட்டங்களில் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
சிறப்பு விருந்தினர்கள் உரை:
சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட AIR INDIA விமான சேவையின்( Abudhabi & Al Ain) மேலாளர் Dr. நவீன் குமார் மற்றும் அபூதபீ தமிழ் சங்கத்தலைவர் திரு .ரெஜினால்ட் இருவரையும் மன்ற துணைத்தலைவர். S.A.C. ஹமீது அவர்கள் சிறப்பு விருந்தினர்களை பற்றி அறிமுகஉரை தந்து அவர்களை வரவேற்றுப் பேசியதுடன் சிறப்பு விருந்தினர்களுக்கு முறையே Dr. நவீன் குமார் அவர்களுக்கு மன்றத்தின் கவுரவ தலைவர் அல்ஹாஜ் I. இம்தியாஸ் அஹ்மது அவர்களும் திரு .ரெஜினால்ட் அவர்களுக்கு மன்றத்தின்தலைவர் ஜனாப் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை இருவரும் பொன்னாடை போர்த்தி கண்ணியப்படுத்தினர்.
சிறப்பு விருந்தினர் Dr.நவீன் குமார் (General Manager – Abudhabi & Al Ain) உரை:
ஹரியான மாநிலத்தை சேர்ந்த இவர் தமது ஆங்கில உரையில்,மன்றத்தின் சார்பாக தந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்து மன்றத்தின் நலப்பணிகளை பாராட்டியதோடு சுயநலமில்லா பொது நல சேவைகளில் திறம் பட பணியாற்றும் நிர்வாகத்திற்கும் ,உறுப்பினர்களுக்கும் தம் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து விமான சேவையின் நிறை குறைகளை ஆராய்ந்து சரி செய்வதாய் தம் வாழ்த்துரையில் உறுதி தந்து அமர்ந்தார்.
சிறப்பு விருந்தினர் திரு.ரெஜினால்ட்.( President – Abudhabi Tamil Sangam) உரை:
நோன்பின் மகத்துவத்தையும் ,அது ஒரு இறை கட்டளை என்று தமதுரையை துவங்கிய இவர் காயல்பட்டினத்தார் உதவி செய்வது இயற்ககையாகவே அவர்களின் உதிரத்தோடு கலந்த ஒன்று என்று நமதூர் மக்களை மெட்சிய இவர் குறைவில்லாமல் இம்மன்றம் சேவைப்பணியில் பிற அமைப்புகளுக்கு முன்னோடியாக ஒற்றுமையை கடை பிடித்து பல ஆண்டுகள் தொடரவும் தம்மை இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்ததின் மூலம் மனித நேயத்தை விதத்தமைக்கு அனைவர்களுக்கும் நன்றியும், வாழ்த்துக்களையும் கூறி விடை பெற்றார்.
சிறப்புரை:
தொடர்ந்து மன்றப் பொருளாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ சிறப்புரையாற்றினார். நமது அனைத்து கருமங்களும் நல்ல முறையில் அமைந்திட, நம் செல்வங்களை - நம்மோடு மட்டும் இருத்திக்கொள்ளாமல், பிறருக்கும் சென்றடையச் செய்ய வேண்டுமென்றும், நம்மைச் சார்ந்தோர் தமது இல்லாமை காரணமாக பிறரிடம் கையேந்தும் அவல நிலையைத் தவிர்த்திட, உரிய நேரத்தில் உடனுக்குடன் அவர்களுக்கு உதவுவது - தகுதியுடைய அனைவர் மீதுமத் கடமை என்றும், திருமறை குர்ஆன் வசனங்களிலிலிருந்தும், திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய மொழிகளிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசினார்.மன்றம் தொடர்பான நிறை-குறைகள் மற்றும் ஆலோசனைகளை மன்ற நிர்வாகிகளிடம் அவ்வப்போது தெரிவித்துவிடுமாறும் மன்றத்தின் அழைப்பினை ஏற்று குடும்ப சகிதம் வருகை தந்த அனைவர்களுக்கும் ,சிறப்பு விருந்தினர்க்களுக்கும் இஃப்தார்க்காக நோன்பு கஞ்சியை தம் இல்லங்களில் இருந்து சுவைபட தயாரித்து வழங்கிய ஜனாப் அல்ஹாஜ் I. இம்தியாஸ் காக்கா, ஜனாப் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை, ஜனாப் எம்.இ. முகியதீன் அப்துல் காதர் ஆகியோர்களுக்கும், இஃப்தார் மற்றும் பொதுக்குழ சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவர்களுக்கும் மன்றதின் சார்பாக நன்றி கூறியதோடு அவர்களின் துஆ கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
பஃபே முறையில் இஃப்தார் நிகழ்ச்சி:
கூட்டத்தின் தொடர்ச்சியாக, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பஃபே முறையில் அனைவருக்கும் இரவு உணவு பரிமாறி உபசரிக்கப்பட்டது.
பொதுக்குழுக் கூட்டம் & இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் அனைத்து நிழற்படங்களையும், https://picasaweb.google.com/115379881010944709903/6296896156892693089 என்ற இணைப்பில் சொடுக்கி, தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு செயலர்)
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடத்தப்பட்ட இஃப்தாருடன் கூடிய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ கா.ந.மன்றத்தின் முந்தைய (7ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ கா.ந.மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |