சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் 56ஆவது செயற்குழுக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்நலனுக்காக 2 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் ஊடகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 56-வது செயற்குழு கூட்டம் கடந்த 14.10.2016 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் எம் மன்றத்தின் தலைவர் சகோதரர் முஹம்மது நூஹு அவர்களின் இல்லத்தில் மன்ற செயற்குழு உறுப்பினர் சகோதரர் K.S.M. அப்துல் காதர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை சகோதரர் இர்ஷாத் வாசித்த பின் சகோதரர் S.A.C.ஸாலிஹ் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைக்க, தொடர்ச்சியாக சகோதரர் ஆதில் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
தலைமையுரை:
சகோதரர் K.S.M.அப்துல் காதர் அவர்கள் தனது தலைமையுரையில் செயற்குழுவிற்கு வரும் சிறப்பு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதின் மூலம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நம் மன்றத்தின் செயற்குழு கூட்டத்தில் நகரில் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு எவ்வாறு நிதி ஒதிக்கீடு செய்யபடுகின்றது என்ற விபரங்களை தெரிந்து கொள்ள நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும் என்றும், இதன் மூலம் உறுப்பினர்களின் மாதசந்தா அவர்களே மனமுவந்து ஆர்வமுடன் வழங்க முன் வருவார்கள் என்றும் கூறினார்கள்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
ஷிஃபா/இக்ரா அமைப்புகள் மற்றும் நேரடியாக பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து மொத்தமாக ரூபாய் 2,49,000/- வழங்க மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஷிஃபா / இக்ராஃ செயல்பாடுகள்:
மிகச்சிறந்த முறையில் செயல்பட்டு வரும் இக்ராவின் சேவைகளை பற்றி மன்றத்தின் தலைவர் சகோதரர் முஹம்மது நூஹு அவர்கள் விளக்கம் அளித்தார்.
மேலும் மத்திய அரசின் திட்டங்களின் ஒன்றான ஏழை எளிய மக்கள் பயனடையும் பொருட்டு மிகவும் குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் Generic Medical Store நமது நகரில் ஷிஃபா ஒருங்கிணைப்பில் திறக்கப்பட வேண்டியதின் அவசியம் பற்றி விளக்கினார். இவ்வகையான மருந்தகம் அமைப்பதற்கான செலவினை உலக/இந்திய காயல் நல மன்றங்களின் மூலம் முதலீடாக பெறலாம் என்று கூறினார்.
செயற்குழு உறுப்பினர்களின் கருத்து பரிமாற்றங்களை தொடர்ந்து நகரில் உள்ள மருத்துவர்களை கலந்தாலோசித்து இத்திட்டத்தில் ரியாத் கா.ந.மன்றத்தை இணைத்து கொள்ள ஒருமனதாக தீர்மானிக்கபட்டது.
சீமைக் கருவேலம்:
நகரில் பரவலாக காணப்படும் சீமைக் கருவேலம் மரங்களை பற்றி சகோதரர் முஹ்சின் கூறுகையில், சீமைக் கருவேலம் என்றும் வேலிக்காத்தான் என்றும் பரவலாக அறியப்படும் இவ்வகை மரம் வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும். வறட்சி காலங்களில் நிலத்தடி நீரை இம்மரம் உறிஞ்சிவிடுவதால் மற்ற தாவரங்களுக்கும்/உயிரினங்களுக்கும் போதிய நீர் கிடைப்பதில்லை. இவை நிலத்தில் பிற செடிகள் வளர்ப்பைத் தடுக்கிறது எனவே இவ்வகை மரங்கள் நகரில் வேரோடு களை எடுக்கப்பட வேண்டியதின் அவசியத்தை பற்றி விளக்கினார்.
மரம் நடுதல்:
நமது வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் மிக மிகச் சிறந்த சொத்து, பாதுகாக்கப்பட்ட பசுமை நிறைந்த இந்த காயல் நகரைதான் எனவே நகர சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுத்திடுவதற்கு, அதிகளவில் மரங்களை வளர்த்து பசுமையைப் பெருக்கிட வேண்டும் என்று சகோதரர் முஹ்சின் அவர்கள் கூறினார்கள்.
செயற்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்தபின், சீமைக் கருவேலம் மரங்களை களை எடுப்பதிலும், புதிதாக மரங்களை நகர வீதிகளில் நடுவதிலும் உள்ள சாதக, பாதகங்களை ஆராய இத்திட்டத்தினை நகரில் செயல்படுத்தி வரும் பொதுநல அமைப்புகள் மற்றும் இயக்கங்களின் ஆலோசனைகளை பெற்று அதன் பின்னர் இத்திட்டத்தை பற்றி முடிவெடுக்கலாம் என்று தீர்மானிக்கபட்டது.
காயல் பள்ளிகள் நல திட்டம்:
உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் துவக்கப் பள்ளிகளுக்கு, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகத்தினர் நேரடியாகச் சென்று அவர்களின் தேவைகள் யாவற்றையும் கேட்டறிந்து அதன் அடிப்படையில் ''Kayal Primary Schools Welfare Projects'' என்றொரு அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கடந்த கல்வியாண்டில் (2015-16) வழங்கியுள்ளது எமது மன்றம்.
இதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வி ஆண்டிலும் (2016-17) காயல் பள்ளிகளின் தேவைகளை கேட்டறிந்து அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முழுமையாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
திருமண வாழ்த்து:
எம்மன்ற பொதுக்குழு உறுப்பினரும் மன்ற பாடகருமான அய்யம்பேட்டையை சார்ந்த சகோதரர் பக்கீர் முஹைதீன் அவர்களின் மகள் திருமண வாழ்வுக்காக துஆ செய்து வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்:
மன்றத்தின் 53-வது பொதுக்குழு கூடத்தை எதிவரும் டிசெம்பர் மாதம் 9ம் தேதி நடத்த தீர்மானிக்கபட்டது. இது பற்றிய மேலும் விபரங்களை பொதுகுழு உறுப்பினர்களுக்கு வலைத்தளம், வாட்சப், குறுந்தகவல் மற்றும் மின்அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்றும், தமக்கு பரிட்சயமான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் புதிதாக வந்துள்ள காயலர்களை இக்கூட்டத்திற்கு அழைத்து வருமாறும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சகோதரர் S.M.A.சதக்கத்துல்லாஹ், சகோதரர் ஹாஜி, சகோதரர் முஹம்மது நூருல் இலாஹி மற்றும் சகோதரர் தைக்கா சாஹிப் ஆகியோர் தங்களை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தங்களுடைய கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொண்டார்கள்.
இறுதியாக சகோதரர் கூஸ் அபூபக்கர் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில சகோதரர் நஃயீமுல்லாஹ் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரியாத் காயல் நல மன்றம் சார்பாக, ரியாதிலிருந்து...
M.N.முஹம்மத் ஹஸன்
|