சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சியை, வரும் நவம்பர் மாதம் 12, 13 ஆகிய நாட்களில் - பூங்காவுடன் கூடிய உள்ளரங்கத்தில் நடத்திடுவதென அதன் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழக் கூட்டம், 07.10.2016. வெள்ளிக்கிழமையன்று 20.00 மணியளவில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைவர் வரவேற்புரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தமைக்காக உறுப்பினர்களுக்கு நன்றி கூறிய அவர், கூட்டம் நடைபெற்ற அந்நாளை உள்ளடக்கிய வாரத்தில், மன்ற உறுப்பினர் பீ.எம்.எச்.அப்துல் காதிருக்குப் புது மகவு பிறந்துள்ளதால் மகிழ்ச்சிக்குரியதாகவும், மன்ற உறுப்பினர்கள் சிலரது உறவினர்கள் மறைவால் கவலைக்குரியதாகவும் அமைந்துவிட்டதாகக் கூறினார்.
இக்கூட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஸலீம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவரை வரவேற்ற தலைவர், அவருடனான தனது தொடர்புகள், ஷிஃபா அமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் அவருடன் இருந்த தொடர்புகள், துபைக்கு தான் சென்றிருக்கையில் அவர் அளித்த உபசரிப்பு குறித்தும் நினைவுகூர்ந்து பேசினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை, செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் கூட்டத்தில் சமர்ப்பித்து, அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
கடந்த சில கூட்டங்களின்போது உறுப்பினர்கள் வருகை சரியாக இல்லை என்றும், இனி வருங்காலங்களில் அனைத்து உறுப்பினர்களும் கூட்டங்களில் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
முதியோர் நல உதவித் திட்டத்தின் புதிய பருவம் 6 பயனாளிகளுக்கான உதவிகளுடன் இம்மாதம் துவங்கியுள்ளதாகக் கூறினார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
30.09.2016. வரையிலான மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை, பொருளாளர் ஏ.எம்.உதுமான், உமர் ரப்பானீ ஆகியோர் கூட்டத்தில் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
இதுகுறித்து மன்ற துணைத்தலைவர் மொகுதூம் முஹம்மத் கருத்து தெரிவிக்கையில், 2016ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) படி மன்றத்தின் திட்டங்கள் வலிமையுடனும், சிறப்புறவும் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறியதோடு, இவ்வகைக்காக உதவிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறினார். உறுப்பினர் சந்தா நிலுவைகள், இவ்வாண்டிற்கான மொத்த கணக்கறிக்கை அனைத்தும் ஆயத்தம் செய்யப்பட்டு வருவதாகவும், நல்ல முறையில் அப்பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இக்ராஃவுக்கு நிதி திரட்டுவதற்காக - மன்றத்தால் நடத்தப்பட்ட “இக்ராஃ நாள்” நிதி திரட்டல் மூலம், திட்டமிடப்பட்ட தொகை பெறப்பட்டு, இக்ராஃவுக்கு அது முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இக்ராஃவின் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுள் சந்தா நிலுவையிலுள்ளவர்களிடமிருந்து அத்தொகையை வசூலிப்பதை முதன்மைப் பணியாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளதாகக் கூறிய அவர், அதன் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக சிங்கை காயல் நல மன்றத்தால் வாக்களிக்கப்பட்ட கல்வி உதவித்தொகை அனைத்தும் முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
வரும் 2016-17 கல்வியாண்டில், மாணவர்களுக்கு (Boys) மட்டும் தகுதி அடிப்படையில், முழு கல்வி உதவித்தொகையையும் வட்டியில்லாக் கடனாக வழங்குவதற்காக, மாணவர்களின் விண்ணப்பங்கள் பெறும் பணி நடைபெற்று வருவதாகவும், இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் அங்கம் வகிக்கும் அனைத்து காயல் நல மன்றங்களையும் கலந்தாலோசித்த பின், இவ்வகை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான வரையறைகளை (Criteria) முடிவு செய்து, வரும் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இக்ராஃவின் புதிய கட்டிட வரைபடம், அதற்கான நிதியாதாரம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படவுள்ளதாகக் கூறிய அவர், அதன் கடந்த 10 ஆண்டுகளின் கல்விச் சேவைகள் குறித்த Powerpoint Presentation Slidesஐ, ஏற்கனவே பொறுப்பேற்ற படி சிங்கை காயல் நல மன்றம் செய்துகொடுக்கவும், இக்ராஃவின் புதிய கட்டிடப் பணிக்கான நிதி திரட்டல் பணிக்காக அதைப் பயன்படுத்தவும் திட்டமுள்ளதாக மொகுதூம் முஹம்மத் கூறினார்.
ஷிஃபா குறித்த விபரங்கள்:
ஷிஃபாவின் இதுநாள் வரையிலான செயல்பாடுகள் குறித்து, மன்றத் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் விபரங்களைக் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாத துவக்கத்தின் நிலவரப்படி, 66 பேரின் மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் பெரும்பாலானவை இதய நோய் தொடர்பான விண்ணப்பங்கள் என்றும் அவர் கூறினார்.
அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டை, வங்கிக் கணக்கு துவக்கம், நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள், பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை - அவற்றுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட விபரங்கள், பணிகளின் மேம்பாடுகள், வரவு-செலவு நிலை, ஷிஃபா நிர்வாகியின் பொறுப்புகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மருத்துவமனைகளுடன் இணைந்து செய்யப்பட வேண்டிய ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள - டாக்டர் இத்ரீஸ், எம்.ஐ.மெஹர் அலீ, அப்துல் வாஹித், சிங்கை மன்றத்தின் சாளை நவாஸ், கைலானீ ஆகியோரடங்கிய ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஷிஃபாவின் மருத்துவ உதவித் திட்ட வகைக்காக, துபை காயல் நல மன்றம் சார்பில் கூடுதலாக நிதியொதுக்க முயற்சிக்குமாறு, கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதன் துணைத்தலைவர் சாளை ஸலீமிடம் கேட்டுக்கொண்டார்.
செயல்திட்ட ஆய்வறிக்கை:
மன்றத்தின் அடுத்த ஆண்டிற்கான செயல்திட்டங்கள் குறித்தும், அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வது குறித்தும் - கடந்தாண்டு நடைமுறைகளின் படி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, எஸ்.எச்.உதுமான், எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஆகியோர் பணிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர் உரை:
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஸலீம் சிறப்புரையாற்றினார்.
தன்னை இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு துவக்கமாக நன்றி கூறிய அவர், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பணிகளையும் பாராட்டிப் பேசினார். சிங்கப்பூர் எனும் நாடு ஒரு குறுகிய பரப்பளவைக் கொண்டது என்ற நல்ல அம்சம், மன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இயங்கிடத் தோதுவாக அமைந்துள்ளதாகவும், அதன் காரணமாக வியத்தகு பணிகளை இம்மன்றம் செய்து வருவதாகவும் புகழ்ந்து பேசிய அவர், தான் சார்ந்துள்ள துபை மன்றத்தைப் பொருத்த வரை, உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பல்வேறு தொலைவான பகுதிகளில் பரவிக் கிடப்பதால், அவர்களை உடனுக்குடன் வரவழைத்து கலந்தாலோசனைக் கூட்டங்களை நடத்துவதோ, முடிவுகளை எடுப்பதோ - சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் சற்று கடினமானதே என்றும் கூறினார்.
மன்றத்தின் அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டம் நல்ல சிந்தனையின் அடிப்படையில், நம் சமூகத்திற்கு விரிவான பலனைத் தரும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், நமதூர் மக்கள் சமூகத்திற்குச் சேவை செய்வது தொடர்பாக அடுத்த கட்ட சிந்தனைக்கு இம்மன்றம் ஆயத்தமாக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
காயல்பட்டினத்தின் அடுத்த தலைமுறைக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெற இம்மன்றம் தொடர்ந்து உழைக்க வேண்டுமென்று கூறிய அவர், மன்றத்தின் அனைத்துப் பணிகளும் சிறப்புற நடந்தேற இறைவனை வேண்டி தனதுரையை நிறைவு செய்தார்.
மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன், சிறப்பு விருந்தினர் சாளை ஸலீமை வரவேற்ன்று, மன்றத்தின் பணிகள், நிதியாதாரத்தைப் பெறும் முறைகள் உள்ளிட்டவற்றை விளக்கிக் கூறி, கடந்த காலங்களில் அவரோடு தனக்குள்ள தொடர்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ உடைய மகன், அஹ்மத் ஜமீல் புகாரீ சிங்கப்பூரில் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, இங்கேயே வேலைவாய்ப்பும் பெற்றுள்ளார். இக்கூட்டத்தில் அவர் தன்னை மன்றத்தின் புதிய உறுப்பினராக அறிமுகப்படுத்திக்கொண்டார்.
அடுத்த பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சி:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை, குடும்ப சங்கம நிகழ்ச்சியாக, இன்ஷாஅல்லாஹ் வரும் நவம்பர் மாதம் 12, 13 ஆகிய இரண்டு நாட்களில் பூங்காவுடன் கூடிய உள்ளரங்கில் நடத்திடவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட குழுவை நியமிக்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
எம்.ஆர்.ஏ.ஸூஃபீயின் துஆவுடன், 21.15 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது. அனைவருக்கும் காயல்பட்டினம் தம்மடை, சமோஸா, காஃபி ஆகியவை சிற்றுண்டியாகப் பரிமாறப்பட்டன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
(சிங்கப்பூரிலிருந்து...)
M.N.L.முஹம்மத் ரஃபீக்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
|