கடந்த பல நாட்களாக உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா நேற்றிரவு (05.12.2016. திங்கட்கிழமை) காலமானார். அவருக்கு வயது 68.
அவரது உடல், ராணுவ மரியாதையுடன் இன்று மாலையில் சென்னை மெரீனா கடற்கரையில், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சமாதிக்கருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி, காயல்பட்டினத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ - வேன் - கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்து இல்லை. அஞ்சலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், அரசு - தனியார் வங்கிகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெயரளவில் கூட ஒரு கடையும் திறக்கப்படவில்லை.
தமிழக முதல்வரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நகரின் அனைத்துக் கட்சிகள் சார்பில், இன்று 16.30 மணியளவில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் துவங்கி, கடற்கரையில் ஊர்வலம் நிறைவுற்றது.
கடற்கரையில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில், அஇஅதிமுக சார்பில் அதன் நகரச் செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், திமுக சார்பில் அதன் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மதிமுக சார்பில் அதன் மாவட்டப் பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், விடுதலை சிறுத்தைகள் சார்பில் விடுதலை செழியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பன்னர் செல்வம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன், எஸ்.டி.பீ.ஐ. சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பி் நஜீம், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், தேமுதிக சார்பில் சுல்தான் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.
இளந்தளிர் முத்து நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நிறைவில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிமுக பிரமுகர்களான சுல்தான், காயல் மவ்லானா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அதன் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ, அதன் செயலாளர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், அதன் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், இ.எம்.சாமி, மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷாஹுல் ஹமீத் உள்ளிட்ட - நகரின் அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகளின் அங்கத்தினர், பொதுமக்கள் இந்நிகழ்வில் திரளாகக் கலந்துகொண்டனர்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
|