உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68.
முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜெயலலிதா மறைவையொட்டி, தமிழகத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். அவருடன் 31 அமைச்சர்கள் கூட்டாக பதவியேற்றுக்கொண்டனர்.
பின்னர் - ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு 2.40 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
இறுதிச் சடங்குகள் நடைபெற்ற பிறகு, தற்போது (செவ்வாயன்று காலை) - ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குவிந்தவண்ணம் உள்ளனர். போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை - ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலில் தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் நின்றிருந்தனர்.
மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே மாலை 4 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
தி இந்து
|