சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 09.12.2016. அன்று நடைபெறுமெனவும், அனைத்து காயலர்களும் கலந்துகொள்ளுமாறும், அதன் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, நகர்நலப் பணிகளில் மகளிரையும் - சிறாரையும் ஊக்குவிக்கும் வகையில் WAKF நிதித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செயலாளர் ஒய்.ஏ.எஸ்.ஹபீப் முஹம்மத் முஹ்ஸின் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ரியாத் கா.ந.மன்றத்தின் 57-வது செயற்குழு கூட்ட நிகழ்வு மற்றும் 53-வது பொதுக்குழு கூட்ட அழைப்பு
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 57-வது செயற்குழு கூட்டம் கடந்த 02.12.2016 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் சகோதரர் செய்து இஸ்மாயீல் அவர்களின் இல்லத்தில் சகோதரர் ஷஃபியுல்லாஹ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் ஆதில் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் சகோதரர் நஈமுல்லாஹ் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைக்க, அதனை தொடர்ந்து சகோதரர் நுஸ்கி அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
தலைமையுரை:
சகோதரர் ஷஃபியுல்லாஹ் அவர்கள் தனது தலைமையுரையில் மன்றத்தின் நிதிநிலை அதிகரிக்க அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
ஷிபா அமைப்பு மூலம் மருத்துவ உதவிகள் அருமையாக முறைபடுத்தப்பட்டுள்ளது என்றும், அதைபோல் கல்வி மற்றும் சிறு தொழில் சார்ந்த உதவிகளில் நாம் அதிகப்படியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
ஷிஃபா/இக்ரா அமைப்புகள் மற்றும் நேரடியாக பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து மொத்தமாக ரூபாய் 1,53,100/- வழங்க மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்:
பொதுக்குழு தொடர்பாக பேசிய சகோ. முஹ்சின் அவர்கள் மன்றத்தின் 53-வது பொதுக்குழு கூட்டத்தை இம்மாதம் (டிசெம்பர்) 9ம் தேதி நடத்த கடந்த செயற்குழுவில் தீர்மநிக்கப்பட்டதின் அடிப்படையில் மன்ற பொதுகுழு உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இந்த பொதுக்குழுக் கூட்டத்தை ரியாத் (சுலை) EXIT 16-இல் அமைந்துள்ள இஸ்திராஹ அல் கும்மாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
பொதுக்குழுவிற்கு வருபவர்களுக்கு பத்ஹா - லக்கி மற்றும் R.T. ரெஸ்டாரண்ட் அருகில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சரியாக காலை 9.00 மணிக்கு முதல் வாகனமும், 10.00 மணிக்கு இரண்டாவது வாகனமும் அங்கிருந்து புறப்படும்.
பொதுக்குழு நிறைவுற்றதும் இரவு மீண்டும் பத்ஹாவில் விடப்படும். இரவு 7.00 மணிக்கு முதல் வாகனமும், 8.30 மணிக்கு இரண்டாவது வாகனமும் இஸ்திராஹாவில் இருந்து புறப்படும். வாகனம் சம்பந்தமாக சகோ முஹ்ஸின் மற்றும் சகோ சித்திக் அவர்களை முறையே 056 403 5113, 050 889 6723 என்ற எண்ணிலும். இஸ்திராஹ (LOCATION) சம்பந்தமாக சகோ. நூஹ் மற்றும் சகோ. அபூபக்கர் அவர்களை முறையே 056 847 7484, 050 318 8841 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பெண்கள் மற்றும் சிறார்கள் நிதி (Women And Kids Fund – WAKF)
எமது மன்றத்தின் துணை செயாலாளர் சகோ. செய்யது இஸ்மாயில் அவர்களின் மகள்கள் இளவல் பாத்திமா மற்றும் இளவல் ஹனா இருவரும் தங்களின் சிறுசேமிப்பான (உண்டியல்) 15,300/- ரூபாயை மன்ற நல உதவிகளுக்காக வழங்கினார்கள்.
சிறுமிகளின் இந்த அர்ப்பணிப்பை பாராட்டி பேசிய மன்ற தலைவர் சகோ. நூஹு அவர்கள், வரும் காலங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் முகமாக அவர்களுக்கு மன்றத்தின் வக்ஃப்(WAKF) திட்டத்தின் மூலம் உண்டியல் வழங்கலாம் என்றும் வருடத்திருக்கு ஒருமுறை அவர்களிடம் இருந்து உண்டியலை பெற்று அதன் மூலம் பெறப்படும் நிதியினை நகரில் ஏதேனும் சிறப்பு திட்டம் செயல்படுத்த பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.
திருமண வாழ்த்து:
எம்மன்ற முன்னாள் செயற்குழு உறுப்பினர் சகோதரர் மீரா நெய்னா அவர்களின் மகன் திருமணம் மற்றும் மன்ற செயற்குழு உறுப்பினர் சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்களின் சகோதரர் திருமண வாழ்வுக்காக துஆ செய்து வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
சகோ. ஹைதர், சகோ. கூஸ் அபூபக்கர், சகோ. நஈமுல்லாஹ், சகோ. K.S.M. அப்துல் காதர் ஆகியோரின் அனுசரணையில் மதிய விருந்து வழங்கப்பட்டது. இக்கூட்டம் நடத்த இடம் தந்த சகோ. செய்யது இஸ்மாயில் அவர்கள் அனைவருக்கும் மாலை தேனீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.
இறுதியாக சகோதரர் கூஸ் அபூபக்கர் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில சகோதரர் நஈமுல்லாஹ் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ். வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
M.S.தைக்கா ஸாஹிப்
|