கோயமுத்தூரில் நடைபெற்ற - பயிற்சி மைய (அகடமி) அளவிலான கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் பங்கேற்ற 10 வயதுக்குட்பட்ட அணியினர் தமது பிரிவிற்கான கோப்பையை வென்றுள்ளனர். இதுகுறித்து, வி-யுனைட்டெட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
கோயம்புத்தூர், குனியமுத்தூர் அருகே, இடையர்பாளையம் சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா பள்ளியில், இடையர்பாளையம் தனம் கால்பந்து அகடமி சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி இம்மாதம் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெற்றது.
இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திருச்செங்கோடு மற்றும் காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து 40 அணிகள் பங்கேற்றன. முதல் சுற்றுகள் லீக் முறையிலும், அதில் அதிக புள்ளிகள் பெற்ற அணிகள் காலிறுதிப் போட்டிக்கும் தகுதிபெற்றன.
10 வயதுக்குற்பட்ட பிரிவின் அரையிறுதிப் போட்டியில் தனம் கால்பந்து அகடமி அணியினர் ஈரோடு ஃபியூஸர் ஒலிம்பியாஸ் அணியை 4 -3 என்ற கோல் கணக்கிலும், காயல்பட்டினம் வீ-யூனைடெட் அகடமி அணியினர் கோவை ஃபஸ்ட் கிக் அணியினரை 2 - 1 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.
இறுதிப் போட்டியில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் அகடமி அணியினர் 2 - 0 என்ற கோல் கணக்கில் கோவை தனம் கால்பந்து அகடமி அணியினரை வென்று ”தனம் கோப்பையை” வென்றனர்.
12 வயதுக்குற்பட்ட பிரிவின் அரையிறுதிப் போட்டியில் கோவைபுதூர் சுகி கால்பந்து அகடமி அணியினர் ராயல் கால்பந்து அணியை 3 - 0 என்ற கோல் கணக்கிலும், காயல்பட்டினம் வீ-யூனைடெட் அகடமி அணியினர் கோவை தனம் கால்பந்து அகடமி அணியை 2 - 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியில் கோவைபுதூர் சுகி கால்பந்து அகடமி அணியினர் 3 - 1 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் கால்பந்து அகடமி அணியை வென்று ”தனம் கோப்பையை” தட்டிச் சென்றனர்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் திரு. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.
இப்போட்டித் தொடரின் சிறந்த வீரர்களாக 10 வயதுக்குற்பட்ட பிரிவில் காயல்பட்டினம் வீ-யூனைடெட் கால்பந்து அகடமியின் செய்யது இப்றாஹீம் என்ற வீரரும், 12 வயதுக்குற்பட்ட பிரிவில் சிறந்த வீரராக வஸீம் என்ற வீரரும் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
|