தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, மாவட்டம் முழுக்க - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், திடீர் சோதனைகளும் பரவலாக நடத்தப்பட்டு வந்தது.
காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், இன்று (29.11.2016.) தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் திடீர் சோதனை – நகராட்சியின் ஆணையாளர் (பொறுப்பு) & தனி அலுவலர் அருட்செல்வன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் முன்னிலையில், காயல்பட்டினத்திலுள்ள பல்வேறு வணிக நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டது.
43 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் நிறைவில் சில கடைகளிலிருந்து 7 கிலோ - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அவர்களுக்கு மொத்தம் ஆயிரத்து அறுநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி, ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
இவ்வகையான திடீர் சோதனை நகரில் இனி அடிக்கடி நடத்தப்படும் என்றும், வணிகர்கள் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமலும், வாடிக்கையாளர்கள் சிரமம் பாராமல் துணிப் பைகளைக் கொண்டு சென்று பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறும், சுகாதார ஆய்வாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
|