காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், சிவன்கோயில் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை் பள்ளியில் (தைக்கா பள்ளி) டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 25.11.2016. வெள்ளிக்கிழமையன்று காலை 09.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியை எஸ்தர் அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் உருவாகும் விதம் குறித்தும், அவை வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகள், வந்துவிட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் சிறப்புரையாற்றினார்.
டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் தடுப்பு தொடர்பாக, காயல்பட்டினம் நகராட்சி எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) அறிவுச் செல்வன் மாணவ-மாணவியருக்கு விளக்கிக் கூறி, இந்நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பளிக்குமாறு தத்தம் இல்லங்களில் அனைத்து மாணவர்களும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் அனைவரும் டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உடனிருந்தார். பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
அன்று மாலையில், பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் - காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு மருந்துப் புகை அடிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான மாணவர்களை இவ்வாறு ஓரிடத்தில் ஒருங்கிணைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதால், ஒரே நாளில் பல நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு விழிப்புணர்வுச் செய்திகள் சென்று சேரும் என்ற எண்ணத்திலேயே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்படுவதாகவும், நகரின் அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்தடுத்து இந்நிகழ்ச்சியை நடத்திட திட்டம் உள்ளதாகவும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் காயல்பட்டணம்.காம் இடம் கூறினார்.
|