பழைய நோட்டுகளான ரூ.500, ரூ.1000 ஆகியவற்றை வங்கிகளில், தபால் நிலையங்களில் கொடுத்து புதிய நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கை வியாழன் இரவு 12 மணியுடன் முடிவுக்கு வருகிறது.
ஆனால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
அதாவது தண்ணீர், மின்கட்டணங்கள், அரசு மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள், ரயில்வே கவுண்டர்களில் பழைய நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரீபெய்ட் மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்ய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்தலாம்.
வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் பழைய நோட்டுகளை கொடுத்து தினசரி அடிப்படையில் மாற்றி கொள்வது குறைந்து வந்ததால் இன்றுடன் நோட்டுகள் மாற்றுவது முடிவுக்கு வருகிறது என்று முடிவெடுத்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் வங்கி, தபால் நிலையக் கணக்குகளில் இந்த பழைய நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிவரை டெபாசிட் செய்து கொள்ளலாம் என்பதில் மாற்றமில்லை.
மேலும் மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் மாணவர் ஒருவருக்கு ரூ.2000 வரை செலுத்த பழைய ரூ.500 தாள்களைப் பயன்படுத்தலாம்.
சுங்கச்சாவடிகளில் டிசம்பர் 2-ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதன் பிறகும் கூட டிசம்பர் 15-ம் தேதி வரை பழைய ரூ.500 தாள்களைக் கொண்டு சுங்கக் கட்டணம் செலுத்தலாம்.
வெளிநாட்டினர் தங்கள் நாட்டுப் பணத்திற்கு ரூ.5000 வரை தங்கள் பாஸ்போர்ட்டை வங்கிகளில் காண்பித்து மாற்றிக் கொள்ளலாம்.
தகவல்:
தி இந்து |