அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில், நடத்தப்பட்ட தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் மனனத் திறனாய்வுப் போட்டியில், உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி மாணவர் முதலிடம் பெற்று, 40 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பில், இம்மாதம் 12, 13 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில், தமிழ்நாடு மாநிலம் தழுவிய - திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி நடத்தப்பட்டது. துவக்க நாளன்று தகுதிச் சுற்றும், நிறைவு நாளன்று இறுதிச் சுற்றுப் போட்டியும் நடைபெற்றன.
காயல்பட்டினம், மேலப்பாளையம், உமராபாத், மேல்விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு, திருச்சி, கரூர், பள்ளப்பட்டி, மேட்டுப்பாளையம், ஆக்கூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, சென்னை, தர்மபுரி, கடையநல்லூர், உள்ளிட்ட ஊர்களிலிருந்து மொத்தம் 97 பேர் கலந்துகொண்ட தகுதிச் சுற்றின் நிறைவில், இறுதிச் சுற்றுக்குத் தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதிச் சுற்றுப்போட்டி 13.11.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 09.30 மணி முதல் 19.00 மணி வரை நடைபெற்றது. இப்போட்டியில், முஹம்மத் ஜாபிர் யூஸுஃபீ (காயல்பட்டினம்), முஹம்மத் ஸாலிஹ் உமரீ (காயல்பட்டினம்), மளீஉர்ரஹ்மான் உமரீ (பேர்ணாம்பட்டு), நவ்ஃபல் உமரீ (கோயமுத்தூர்), ஜஹீர் உமரீ (சென்னை), ஷுஅய்ப் உமரீ (உமராபாத்) ஆகிய மவ்லவீ - ஹாஃபிழ் - காரீகள் நடுவர்களாகவும், எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம், மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் நூஹ் அல்தாஃபீ ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகவும் கடமையாற்றினர்.
20.00 மணியளவில் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவீ முபாரக் மஸ்ஊத் மதனீ முன்னிலை வகித்தார். ‘தம்மாம்’ எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். செயற்குழு உறுப்பினர் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். துணைத் தலைவர் எஸ்.இப்னு ஸஊத் வாழ்த்துரையாற்றினார்.
இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவீ முஜீபுர்ரஹ்மான் உமரீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் ஆற்றிய உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, ஆண்கள் - பெண்கள் பகுதிகளிலிருந்து சரியான விடையளித்தோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஹிஃப்ழுப் போட்டிகளில் நடுவர்களாகவும் - துணை நடுவர்களாகவும் கடமையாற்றியோருக்கும், சிறப்பு விருந்தினருக்கும் நினைவுப் பரிசுகள் - பள்ளி நிர்வாகிகளால் வழங்கப்பட்டன.
திருக்குர்ஆனின் 5 ஜுஸ்உகள், 15 ஜுஸ்உகள் ஆகிய இரண்டு பிரிவு போட்டிகள் - நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மும்மாவட்ட அளவிலான போட்டியாகவும், 30 ஜுஸ்உகள் பிரிவு தமிழகம் தழுவிய அளவிலும் என மொத்தம் 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுக்குரியவர்கள் நடுவர்களால் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மும்மாவட்ட அளவிலான 05 ஜுஸ்உகள் பிரிவில்,
நாகர்கோவில் அல்ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக் கல்லூரியின் எம்.அர்ஷத் ஃபிர்னாஸ், எம்.ஆதில் அப்துர்ரஹ்மான், கே.அஹ்மதுல் அஷ்ரஃப் ஆகியோர் முதல் மூன்றிடங்களைப் பெற்றனர். அவர்களுக்கு முறையே 10 ஆயிரம், 07 ஆயிரம், 04 ஆயிரம் ரூபாய் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலப்பாளையம் உதுமானிய்யா அரபிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஏ.முஹம்மத் இல்யாஸ் 4ஆவது இடத்தையும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் ஏ.எம்.இஸ்மாஈல் 05ஆம் இடத்தையும் பெற்றனர். அவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
மும்மாவட்ட அளவிலான 15 ஜுஸ்உகள் பிரிவில்,
கன்னியாகுமரி அல்ஹுதா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா மாணவர் எம்.முஸ்ஸம்மில் ரஹ்மான் முதலிடத்தையும், மேலப்பாளையம் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் ஹிஃப்ழு மத்ரஸா மாணவர் எஸ்.ஏ.முஹம்மத் தமீம் யஹ்யா இரண்டாமிடத்தையும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் ஏ.எம்.ரஸீன் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
அவர்களுக்கு முறையே 20 ஆயிரம், 10 ஆயிரம், 05 ஆயிரம் ரூபாய் பணப்பரிசுள் வழங்கப்பட்டன.
மேலப்பாளையம் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் ஹிஃப்ழு மத்ரஸா மாணவர் டீ.அத்தீக் அஹ்மத், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் எம்.எஸ்.அனஸ் இஸ்மாஈல் ஆகியோர் முறையே 4ஆம், 5ஆம் இடங்களைப் பெற்று ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டனர்.
தமிழகம் தழுவிய 30 ஜுஸ்உகள் பிரிவில்
உமராபாத் ஜாமிஆ தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரி மாணவர் அஸ்லம் முதலிடத்தையும், அதே கல்லூரியின் மாணவர் அப்துல் கவிய்யு இரண்டாமிடத்தையும், திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி மாணவர் ஆர்.முஹம்மத் ஸாலிஹ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். அவர்களுக்கு முறையே 40 ஆயிரம், 30 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.
மாநில அளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற இம்மாணவர்களிடம் போட்டி ஏற்பாட்டாளர்கள் நேர்காணல் செய்து, திருக்குர்ஆனின் சில பகுதிகளை ஓதிக் காண்பிக்கச் செய்து, பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.
பள்ளப்பட்டி ஸபீலுல் ஹுதா மத்ரஸா மாணவர் கே.எஸ்.முஹம்மத் ஹுதைஃபா, காயல்பட்டினம் மாணவர் நஜ்முத்தீன் ஹுனைஃப், உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி மாணவர்களான முஹம்மத் உமர், என்.ஆமிர் ஸுஹைல், அஸீஸுர் ரஹ்மான், தர்மபுரி மிஃராஜுல் உலூம் மத்ரஸா மாணவர் முஹம்மத் தானிஷ், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் எஸ்.என்.அஹ்மத் அம்மார், காயல்பட்டினம் மாணவர் எம்.எஸ்.ஜிந்தா ஷராஃப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்று, ஆறுதல் பரிசுகளாக 5 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு வழங்கப்பட்டனர்.
பரிசு பெற்ற அனைவருக்கும் பணப்பரிசுகளுடன் - நினைவுப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவற்றை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகிகளும், சிறப்பு விருந்தினர்களும் வழங்கினர்.
பள்ளியின் செயலாளர் ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் செயற்குழு உறுப்பினர்களும், தன்னார்வலர்களும் இணைந்து செய்திருந்தனர்.
தகவல் உதவி:
‘தம்மாம்’ M.M.செய்யித் இஸ்மாஈல்
|