கடந்த நவம்பர் 8 அன்று - ரூபாய் 500 மற்றும் 1000 ஆகியவை செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் - வங்கிகளில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
காயல்பட்டினத்தில் உள்ள - சென்ட்ரல் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் தங்கள் பணத்தை எடுக்க, அவ்வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், இப்பிரச்சனை கடுமையாக உள்ளது.
அளவுக்கதிகமாக திரளும் கூட்டத்தினை சமாளிக்க, கடந்த வாரம் - நடப்பது என்ன? சமூக ஊடக குழும அங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தன்னார்வலர்கள் ஆகியோர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் டோக்கன் முறையை நடைமுறைப்படுத்தினர். இருப்பினும், வங்கி மேலாளரின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், அப்பணியை தொடர்ந்து செய்யமுடியவில்லை என - அப்பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள், நேற்று அறிவித்தனர்.
இந்தியன் ஒவ்ரசீஸ் வங்கி காயல்பட்டினம் கிளையில் உள்ள பிரச்சனைகள் குறித்து - சென்னை அண்ணா சாலையில் உள்ள அவ்வங்கியின் தலைமை நிலையத்தில், அவ்வங்கியின் துணை பொது மேலாளரிடம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக, நவம்பர் 23 அன்று கோரிக்கை கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று (நவம்பர் 29), தூத்துக்குடியில் உள்ள அவ்வங்கியின் மண்டல மேலாளர் திரு ஸ்ரீனிவாசனை - நடப்பது என்ன? குழும அங்கத்தினர் சந்தித்து - காயல்பட்டினம் கிளையின் நிலையை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் - வங்கிக்கு அனுப்பப்படும் பண அளவை பல மடங்கு உயர்த்த கோரியும், தினசரி வழங்கப்படும் டோக்கன் எண்ணிக்கையையும் பல மடங்கு உயர்த்த கோரியும் கோரிக்கை வைத்தனர்.
தங்கள் வங்கிக்கு குறைவாகவே பணம் வருவதாகவும், சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை - தன் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், மண்டல மேலாளர் தெரிவித்தார். |