“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் முயற்சியில், காயல்பட்டினம் வழியாக வந்து செல்லும் கோவை மண்டல அரசு பேருந்துகளில் "வழி: காயல்பட்டினம்" என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இது குறித்து நடப்பது என்ன? சமூக ஊடக குழுமம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
காயல்பட்டினம் வழியாக வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள் தொடர்பாக கடந்த ஐந்து மாதங்களாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தால் பல்வேறு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைய அறிவீர்கள்.
இது குறித்து அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பல அதிகாரிகளை நேரடியாக சந்தித்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் முழு தகவல் பெறப்பட்டுள்ளது. காயல்பட்டினம் வழியாகச் செல்லாத பேருந்துகள் மீது புகார் கொடுக்கப்பட்டு - ஓட்டுநர்கள் / நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்களுக்கு, நடத்துநர்களுக்கும் எச்சரிக்கை சுற்றறிக்கைகள் வெளியிடக் கோரி - அதுவும் வெளியிடப்பட்டுள்ளது.
முன்பை விட தற்போது பல பேருந்துகள் நமதூர் காயல்பட்டினம் வழியாக வந்து சென்றாலும், தொடர்ந்து சில பேருந்துகள் நம் ஊரை புறக்கணிக்கின்றன என்பது நிதர்சன உண்மை. இதற்கு நீதிமன்றம் மூலம் நிரந்தரத் தீர்வு காண ஆவணங்கள் ஆயத்த நிலையில் உள்ளன. இருப்பினும், நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்னர் - நாம் ஏற்கனவே தெரிவித்தது போல - “நடப்பது என்ன?” குழுமம், ஒவ்வொரு மண்டல வாரியாக தற்போது பேருந்து பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்து வருகிறது.
மாநிலத்தில் உள்ள 6 மண்டலங்களில் - இரு (விழுப்புரம், சேலம்) மண்டலங்களிலிருந்து காயல்பட்டினத்திற்கு எந்தப் பேருந்தும் கிடையாது.
மீதியுள்ள நான்கு மண்டலங்களில் - மிகக் குறைந்த பேருந்துகளை இயக்கும் கோவை மண்டல அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கி, அந்த மண்டலம் மூலம் இயக்கப்படும் 8 பேருந்துகளிலும் (8 * 2 = 16 trip) "வழி: காயல்பட்டினம்" என ஸ்டிக்கர் ஒட்ட சம்மதம் தெரிவித்ததையடுத்து, நமது “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக - கடந்த வாரம் ஸ்டிக்கர் வழங்கப்பட்டு, தற்போது கோவை மண்டலத்தின் - காயல்பட்டினம் வழியாகச் செல்லும் ஏறத்தாழ அனைத்துப் பேருந்துகளின் முன்பக்கமும், பின்பக்கமும் - ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன, எல்லாப்புகழும் இறைவனுக்கே.
தற்போது - திருநெல்வேலி மற்றும் கும்பகோணம் மண்டல பேருந்துகள் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மதுரை மண்டலம் குறித்த இறுதி நடவடிக்கைகள் இன்னும் சில நாட்களில் எடுக்கப்படும்.
இறைவன் நாடினால், நமதூர் காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்ல வேண்டிய அனைத்து மண்டலங்களின் பேருந்துகள் குறித்த பிரச்சனைகளும் விரைவில் தீரும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |