துபையில் நடைபெற்ற ஸீரா மாநாட்டில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளவல்கள் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரகம் - துபையில், Ministry of Awqafஇன் கீழ் இயங்கி வருகிறது அல்மனார் இஸ்லாமிக் சென்டர். முஸ்லிம் மக்களுக்கு இஸ்லாமிய மார்க்க விழுமியங்களின் பால் மேலும் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்துவதற்கும் என பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது இவ்வமைப்பு. வாராந்திர மார்க்க வகுப்புகளும் இதில் அடக்கம்.
இவ்வமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி நடத்திட தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், நடப்பாண்டு - நபிமார்களின் வாழ்வு தரும் படிப்பினைகளைப் பரப்புவதற்காக “ஸீரா மாநாடு” எனும் பெயரில், நடப்பு டிசம்பர் மாதம் 01, 02 ஆகிய நாட்களில், துபை அல்மனார் இஸ்லாமிக் சென்டர் வளாகத்தில் இரண்டு நாட்கள் மாநாடு நடத்தப்பட்டது.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து மார்க்க அறிஞர்கள் பலர் இம்மாநாட்டில் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்புரையாற்றினர்.
இஸ்லாமிய வரலாற்றைத் தாங்கிய கண்காட்சி, திருக்குர்ஆன் கண்காட்சி ஆகிய கண்காட்சி அரங்கங்களும் மாநாட்டில் அமைக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் / முஸ்லிமல்லாத மக்கள் பங்கேற்புக்காக, பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குர்ஆன் - ஹதீஸ் மனனப் போட்டி உள்ளிட்டவை - வயதுக்கேற்ற பிரிவுகளுடன் நடத்தப்பட்டுள்ளன.
அவ்வாறு நடத்தப்பட்ட போட்டிகளில், சிறாருக்கான ஹதீஸ் மனனப் போட்டியும் ஒன்று. இப்போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சிறார் பங்கேற்றிருந்தனர். காயல்பட்டினத்திலிருந்தும் சில இளவல்கள் பங்கேற்றனர்.
அவர்களுள், காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவைச் சேர்ந்த எம்.என்.எஸ்.அப்துல் காதிர் - எஸ்.எச்.மும்தாஜ் தம்பதியின் மகன்வழிப் பேரனும், தைக்கா தெரு தையன்னா காலனியைச் சேர்ந்த எம்.ஏ.முத்து மீரா லெப்பை (காயல்பட்டினம் செய்கு ஹுஸைன் பள்ளியின் முஅத்தின்) - செய்யித் கதீஜா தம்பதியின் மகள் வழிப் பேரனும், ஏ.சி.மூஸா - எம்.எல்.நிலோஃபர் ஆயிஷா தம்பதியின் மகனுமான எம்.ஃபிராஸ் என்ற மாணவர், மூன்றாமிடத்தைப் பெற்றார்.
சிறாருக்கான திருக்குர்ஆன் மனனப் போட்டியில், காயல்பட்டினம் கி.மு.கச்சேரி தெருவைச் சேர்ந்த எம்.எஸ்.அப்துல் ஹமீத் - ஃபாத்திமத் ஜஹ்ரா தம்பதியின் மகன் முஹம்மத் ஸஜீத் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
அவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
போட்டியில் வென்ற / பங்கேற்ற காயல்பட்டினம் சிறாரை, பார்வையாளர்களாகக் கலந்துகொண்ட காயலர்கள் பாராட்டினர்.
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டு, கூடுதல் தகவல் & படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 19:25 / 06.12.2016.] |