கடந்த பல நாட்களாக உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா நேற்றிரவு (05.12.2016. திங்கட்கிழமை) காலமானார். அவருக்கு வயது 68.
அவரது உடல், ராணுவ மரியாதையுடன் இன்று மாலையில் சென்னை மெரீனா கடற்கரையில், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சமாதிக்கருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி, காயல்பட்டினத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ - வேன் - கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்து இல்லை. அஞ்சலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், அரசு - தனியார் வங்கிகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெயரளவில் கூட ஒரு கடையும் திறக்கப்படவில்லை.
எப்போதும் பரபரப்புடன் காணப்படும் பிரதான வீதி, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் உள்ளிட்ட வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆங்காங்கே சில பொதுமக்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக, நகரில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 06ஐ முன்னிட்டு, முன்னதாக தமுமுக, எஸ்.டி.பீ.ஐ., மஜக உள்ளிட்ட சமுதாய அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தமிழக முதல்வரின் உடல்நிலை கவலைக்கிடமான தகவல் நேற்று பெறப்பட்டதும், அவர்கள் தம் போராட்ட அறிவிப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
அடுத்த சில நிமிடங்களில், அடுத்தடுத்த நாட்களில் கடைகள் அடைக்கப்பட வாய்ப்புள்ளதை உணர்ந்தவர்களாக, நகரின் அனைத்து பலசரக்கு கடைகளிலும் பொதுமக்கள் கூட்டங்கூட்டமாகச் சென்று உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
04.12.2016. ஞாயிற்றுக்கிழமையன்று இரவில், தமிழக முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பெறப்பட்ட தகவலையடுத்து, சென்னை பரபரப்பானது. இதன் காரணமாக, அன்று காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட தனியார் பேருந்துகள் அருப்புக்கோட்டை அருகிலுள்ள பந்தல்குடி வரை வந்தடைந்ததும், பயணத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் திருச்செந்தூருக்குத் திரும்பின.
தகவல்களுள் உதவி:
OMERAYYA
படங்களுள் உதவி:
A.S.புகாரீ
OMERAYAA
|