பல்லாவரம் பயோ காஸ் திட்ட வழக்கில் - பல வாரங்கள் ஆகியும் பதில்களை தாக்கல் செய்யாததால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் திரு பனிந்த்ர ரெட்டி IAS மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் திரு ஜி.பிரகாஷ் IAS ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தலா 10,000 ரூபாய் அபராதத்தை ரத்து செய்ய முடியாது என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளை தெரிவித்தது. இது குறித்த விபரங்கள் வருமாறு: :
திடக்கழிவுகள் கொண்டு பயோ காஸ் உற்பத்தி செய்து, அதன் மூலம் பெறப்படும் மின்சாரம் கொண்டு தெரு விளக்குகளை இயக்கும் திட்டத்தினை
தமிழக அரசு 2013ம் ஆண்டு அறிவித்தது. மொத்தம் சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம், 5 மாநகராட்சிகளிலும், 24 நகராட்சிகளிலும்
அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழக அரசின் அறிவிப்பில் இடம்பெற்ற மாநகராட்சிகள்:
திருச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், திருநெல்வேலி
தமிழக அரசின் அறிவிப்பில் இடம்பெற்ற நகராட்சிகள்:
காயல்பட்டினம், ஓசூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர், திண்டுக்கல், ராஜபாளையம், நாகர்கோயில், கும்பகோணம், பள்ளிப்பாளையம், பூந்தமல்லி,
மேட்டூர்,ஆவடி, கடலூர், பல்லாவரம், திருவண்ணாமலை, கரூர், உதகமண்டலம்,பொள்ளாச்சி, பழனி, திருத்தணி, திருச்செங்கோடு, நாகபட்டினம்,
மேட்டுப்பாளையம், கோபி செட்டிபாளையம்
இப்பணிகளை காயல்பட்டினம் நகராட்சி உட்பட பல நகராட்சிகள் - மாசு கட்டுப்பாடு வாரியம்
அனுமதியின்றியே துவக்கின.
நீராதாரத்தில் இத்திட்டம் அமைவதாக எதிர்த்து பல்லாவரம் நகராட்சியை சார்ந்த ஒருவர் 2015 இல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது - பல்லாவரம் நகராட்சி உட்பட வேறு பல நகராட்சிகளும் இப்பணிகளை மாசு கட்டுப்பாட்டு
வாரியம் அனுமதியின்றி துவங்கியுள்ளன என்ற தகவல் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (மார்ச் 14, 2016) நாளிதழில் வெளியானது. அந்த நாளிதழ், இந்த தகவலை - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நிர்வாகிகளில் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியிட்டிருந்தது.
மேலும் - இத்திட்டங்களில், மாநில அளவில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளன என ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, காயல்பட்டணம்.காம் நிர்வாகியை நேரில் ஆஜராகி ஆதாரங்கள் வழங்கிட பசுமை தீர்ப்பாயம் கோரியது.
அதனை தொடர்ந்து, காயல்பட்டணம்.காம் நிர்வாகி - சுமார் 200 பக்கங்கள் அடங்கிய ஆவணத்தை - ஏப்ரல் 7 அன்று, தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார்.
அதனை தொடர்ந்து - நீதிபதி ஜோதிமணி, பல்வேறு நகராட்சிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், அரசு தரப்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் துறை முதன்மை செயலர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் ஆகியோரை வழக்கில் இணைக்க தெரிவித்தார். அவ்விருவரும் - ஆகஸ்ட் 1 அன்று, அவ்வழக்கில் இணைக்கப்பட்டனர்.
இடைக்காலத்தில் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட இவ்வழக்கு மீண்டும் - நவம்பர் 3 அன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில் இணைக்கப்பட்டு பல வாரங்கள் ஆகியும், இது வரை பதில்கள் தாக்கல் செய்யாத காரணத்தால் - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் துறை முதன்மை செயலர் திரு பனிந்த்ர ரெட்டி IAS மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் திரு ஜி.பிரகாஷ் IAS ஆகியோருக்கு
தலா 10,000 ரூபாய் அபராதம், தீர்ப்பாயத்தால் விதிக்கப்பட்டது.
மேலும் - அவ்விருவரும், ஒரு வாரத்தில் பதில்களை எதிர்தரப்பு வழக்கறிஞர்களிடம் கொடுக்கவேண்டும் என்றும், மீண்டும் இவ்வழக்கு டிசம்பர் 1 அன்று விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதி எம்.எஸ்.நம்பியார் தெரிவித்திருந்தார்.
மீண்டும் - இவ்வழக்கு, டிசம்பர் 1 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது - நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் ஜி.பிரகாஷ் IAS க்கு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் எம்.கே. சுப்பிரமணியம் - விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார்.
மனுவை பரிசீலித்த நீதிபதி எம்.எஸ்.நம்பியார், அபராதத்தை ரத்து செய்யும் கேள்விக்கே இடமில்லை எனக்கூறி, மனுவை தள்ளுப்படி செய்தார். மேலும் இவ்வழக்கை ஜனவரி 12 தேதிக்கு ஒத்திவைத்தார்.
தினமலர் (சென்னை பதிப்பு) - 4/11/2016
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (சென்னை பதிப்பு) - 4/11/2016
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமீபத்தில் இவ்வழக்கில் வெளியிடப்பட்ட ஆணைகள்
செப்டம்பர் 16, 2016
ஆகஸ்ட் 31, 2016
ஏப்ரல் 7, 2016
|