காயல்பட்டினத்தின் புறவழிச் சாலையில் - 03.12.2016. சனிக்கிழமையன்று 23.30 மணி முதல் நள்ளிரவு வரை கடும் புகைமூட்டம் இருந்ததாகவும், நகர் முழுக்க பரவலாக கடும் துர்வாடையை உணர்ந்ததாகவும் - காட்டு தைக்கா தெரு, தைக்கா தெரு, புதுக்கடைத் தெரு, மகுதூம் தெரு உள்ளிட்ட தெருக்களைச் சேர்ந்த பொதுமக்கள், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் வாட்ஸ் அப் குழுமத்தில் படங்களுடன் கருத்துப் பதிவு செய்திருந்தனர்.
பனிமூட்டம் போல புகைமூட்டம் காணப்பட்டதாகவும், நகரில் பனிப் பருவம் இல்லாத நிலையில் இது பனிமூட்டமாக இருக்க வாய்ப்பேயில்லை என்றும், வாகனங்களின் டயர்கள் - ப்ளாஸ்டிக் பொருட்களை எரித்தால் உணரப்படும் வாசனையை உணர்ந்ததாகவும் - புறவழிச் சாலையில் புகைமூட்டம் காணப்பட்ட இடத்தின் அருகில் நின்றவாறும் “நடப்பது என்ன?” வாட்ஸ் அப் குழுமத்தில் கருத்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெறப்பட்ட தகவல்களுடன் படங்களையும் இணைத்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகத்தின் சார்பில், உடனடியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டுள்ளது.
தொடர் நடவடிக்கையாக, இதுகுறித்த மேலதிகத் தகவல்களுடன் - சென்னையிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகம், தூத்துக்குடியிலுள்ள அதன் மாவட்ட அலுவலகம் ஆகியவற்றிலும் புகார் மனுக்கள் அளிக்கப்படவுள்ளதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|