குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் / நீக்கல் தொடர்பான சிறப்பு முகாம், தூத்துக்குடி மாவட்டத்தின் 6 வட்டங்களிலும், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில், 14.12.2016. புதன்கிழமையன்று நடைபெறவுள்ளது. அதன்படி, காயல்பட்டினத்தை உள்ளடக்கிய திருச்செந்தூர் வட்டத்திற்கு, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக திங்கட்கிழமை குறைதீர்க்கும் நாள் அன்று பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்தத் திருத்தங்கள் வட்டாட்சியர் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் பொதுமக்கள் இந்த பெயர் சேர்த்தல் / நீக்குதல் தேவைகளை அந்தந்த வட்ட அளவில் விண்ணப்பித்து அன்றே முடித்துக் கொடுக்கும் வகையில் சிறப்பு பொது விநியோக முகாம் இம்மாதம் 14.12.2016 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.
தூத்துக்குடி வட்டத்தில், தூத்துக்குடி நகரம், டூவிபுரம் 10-வது தெருவில் அமைந்துள்ள மக்கள் நலக்குழுவிற்கு பாத்தியப்பட்ட திருமண மண்டபத்திலும், ஏனைய வட்டங்களில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா; தலைமையில்; முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சிறப்பு முகாமில் பொது மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல், முகவரி மாற்றம், ஒப்புவிப்பு சான்று கோரும் மனுக்களை அளித்து, அன்றைய தினமே உடனடியாக உரிய திருத்தங்கள் / சான்றுகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றுக்கு பிறப்புச் சான்று / கல்விச் சான்று / இறப்புச் சான்று நகலுடன் விண்ணப்பித்து பயன் பெற்றிட மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொள்கிறார்.
இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
|