காயல்பட்டினம் நகராட்சியில் கட்டுமான அனுமதி உரிமம் வழங்குவதில், கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் நகராட்சியின் தனி அலுவலரிடம், வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 09) கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பு வருமாறு:
காயல்பட்டினம் நகராட்சியில் - கட்டுமான அனுமதி உரிமம் வழங்குவதில், கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில், காயல்பட்டினம் நகராட்சி எல்.எப்.சாலை அருகேயுள்ள ஒரு காலி நிலத்தின் சொந்தக்காரர் - சில ஆண்டுகளுக்கு முன் நகராட்சியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட ஒப்பந்த ஊழியர் ஒருவர் மூலம், கட்டிடம் கட்ட அனுமதி கோரி விண்ணப்பம் செய்ததாகவும், இதற்காக 30 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாகவும் தெரிகிறது.
அதன் பின், ஆணையர் உட்பட அனைத்து அதிகாரிகளின் கையெழுத்துடன் தன்னிடம் வழங்கப்பட்ட கட்டுமான அனுமதி உரிமத்தைக் கொண்டு, அந்த நபர் தனது பணிகளைத் துவக்கியதாகவும், நகராட்சி ஒப்பந்த ஊழியர் மூலம் தான் பெற்ற கட்டிட அனுமதி உரிம ஆவணத்தைக் கொண்டு, ஆறுமுகநேரியிலுள்ள SBI வங்கியில் கடன் பெற்றதாகவும் தெரிகிறது.
தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவுற்றுள்ள நிலையில் அந்நபர் - சில நாட்களுக்கு முன்பு, நிறைவுச் சான்றிதழ் பெற நகராட்சிக்குச் சென்றிருந்தபோது, அவரது கட்டுமான உரிமம் - நகராட்சி பதிவேட்டில் பதிவிடப்படவில்லை என்றும், அது போலியானது என்றும் நகராட்சி ஊழியர் தெரிவித்தாகத் தெரிகிறது.
இந்நிகழ்வு நடந்து பல நாட்களாகியும், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது அதிர்ச்சியளிப்பது மட்டுமில்லாமல், பல சந்தேகங்களையும் எழுப்புகிறது.
இதில் தொடர்புடைய - பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஒப்பந்த ஊழியரையும், நகராட்சியின் பிற அதிகாரிகளையும், அரசியல் பின்புலம் படைத்தவர்களையும் பாதுகாத்திடவே - காயல்பட்டினம் நகராட்சி இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை என சந்தேகங்கள் எழும்புகின்றன.
எனவே, இனியும் காலந்தாழ்த்தாமல் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க - காயல்பட்டினம் நகராட்சியைக் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் - இந்நிகழ்வு, தனிப்பட்ட ஒரு நிகழ்வாக இருக்க வாய்ப்பில்லை என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது. இதுபோல - நகராட்சி ஊழியர்களிடமும், இடைத்தரகர்களிடமும் பல பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
கடந்த காலங்களில் - Manual Workers General Welfare Fund வகைக்காக, Tamil Nadu Construction Workers Welfare Board துறைக்கு, நகராட்சி மூலம் - ஒவ்வொரு கட்டுமான உரிமத்திற்கும் அனுப்ப வேண்டிய கட்டணத்திற்கான வரைவு காசோலை (DEMAND DRAFT) முறைகேடாக காயல்பட்டினம் நகராட்சியில் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் புகார்கள் உள்ளது.
எனவே, கடந்த ஐந்தாண்டுகளில் காயல்பட்டினம் நகராட்சி மூலம் வழங்கப்பட்ட அனைத்து கட்டுமான உரிமங்கள் விபரத்தையும் (உரிமம் எண், தேதி, இடம், வரைவு காசோலை விபரம்) - காயல்பட்டினம் நகராட்சியின் தகவல் பலகையிலும், நகராட்சியின் இணையதளத்திலும் உடனடியாக வெளியிடக் கோருகிறோம்.
மேலும் - அவ்வாறு வெளியிட்ட பின், இதுகுறித்த தகவலை பொதுமக்களுக்குத் தெரிவித்து, அவர்கள் - தாம் பெற்ற உரிமங்களை சரிப்பார்த்துக்கொள்ள அறிவுறுத்தும்படியும் காயல்பட்டினம் நகராட்சியைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அம்மனுவில் கோரப்பட்டுள்ளதாக அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |