எழுத்து மேடை மையம், தமிழ்நாடு & ரஃப்யாஸ் ரோஸரி இணைவில் “தாரே ஜமீன் பர்” என்னும் புகழ்பெற்ற ஹிந்தி முழு நீள படத் திரையிடல் நிகழ்ச்சி, 10.12.2016 சனிக்கிழமையன்று மதியம் 02.00 மணியளவில், காயல்பட்டினம் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுள்ளது. மகளிர் & குழந்தைகள் இதில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து, எழுத்து மேடை மையம், தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை பஷீர் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எழுத்து மேடை மையம், தமிழ் நாடு சார்பில் நமதூரில் ஆவணப்பட திரையிடல்களும் நூலாய்வுகளும், அவற்றையொட்டிய கலந்துரையாடல்களும் விவாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், எழுத்து மேடை மையத்தின் 13ஆவது நிகழ்வாக ரஃப்யாஸ் ரோஸரியுடன் இணைந்து, கற்றல் குறைபாடு (Dyslexia) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பு முழு நீள திரைப்படமான “தாரே ஜமீன் பர்” ஹிந்திப் படம், 10.12.2016 சனிக்கிழமையன்று மதியம் 02.00 மணியளவில், காயல்பட்டினம் மொகுதூம் தெருவில் அமைந்துள்ள ரஃப்யாஸ் ரோஸரி வளாகத்தில் திரையிடப்பட்டது. பின்னர், அதனையொட்டிய கருத்துப்பரிமாற்ற அமர்வும் நடைபெற்றது.
தாரே ஜமீன் பர்
”புவியின் மீதுள்ள விண்மீன்கள்” எனப் பொருள்படும் தலைப்பைக் கொண்ட இத்திரைப்படம் 2007-ஆம் ஆண்டு வெளியானது. பிரபல ஹிந்தி நடிகரும் இயக்குநருமான ஆமிர் கான் இத்திரைப்படத்தை இயக்கி, நடித்தும் உள்ளார்.
பள்ளி செல்லும் குழந்தைகள் பலர் நடித்துள்ள இபடமானது, கற்றல் குறைபாட்டை மட்டுமே விளக்கும் திரைப்படம் இது என்ற பிம்பத்தைத் உடைத்தெறிந்து; குழந்தைகளைப் பற்றியும், அவர்களது திறமைகளை கண்டறிவது பற்றியுமான ஒரு சிறப்புத் திரைப்படமாகவும் விரிவடைகின்றது.
தேசிய விருது பெற்ற இப்படத்தினை ”பன்னாட்டு கற்றல் குறைபாடு கழகம் (International Dyslexia Association)”, வாஷிங்டன் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் திரையிட்டது குறிப்பிடத்தக்கது.
கதைச் சுருக்கம்
எட்டே வயதான இஷானின் உலகமோ எவரும் எளிதில் புரிந்துகொள்ள இயலாத வினோதங்கள் நிறைந்தது. ஆனால், பள்ளியின் மீதான வெறுப்பினால், அனைத்து தேர்வுகளிலும் அவனுக்கு தோல்வியே எஞ்சுகிறது. சக மாணவர்களால் சிறுமைப்படுத்தப்பட்டு, ஆசிரியர்களின் இகழ் பேச்சுக்கு ஆளாகும் இஷானுக்கு, அனைத்து பாடங்களும் கடினமாகவே தோன்றுகிறது.
அறிவாளியான தங்களின் மூத்த மகனை அவ்வப்போது ஒப்பிட்டு, இஷானின் கல்விக் குறித்து பெரிதும் வருந்துகின்றனர், அவனது பெற்றோர். பெரியவர்களின் உலகத்தில் வண்ணங்கள், மீன்கள், நாய்கள் & காற்றாடிகள் என எதற்கும் இடமில்லை; அவர்களது ஆர்வமெல்லாம் வீட்டுப்பாடத்தின் மீதும் மதிப்பெண்கள் மீதுமே இருக்கிறது.
பொறுமை இழந்தவர்களாய், இஷானை ஒரு உறைவிடப் பள்ளியில் அவர்கள் சேர்க்கின்றனர். புதியப் பள்ளியிலும் யாதொரு மாற்றமும் ஏற்படாத சூழலில், குடும்பத்தை விட்டுப் பிரிந்த ஏக்கம், ஆசிரியர்களின் கொடூரமான கற்பித்தல் முறைகள் அவனது உள்ளத்தில் மென்மேலும் வடுக்களையும் தனிமை உணர்வையுமே உண்டாக்குகிறது.
இந்நிலையில், நிகும்ப் என்பவர் கலை ஆசிரியராக அப்பள்ளியில் சேர்கிறார். முந்தைய ஆசிரியர் போல் இல்லாது, நிகும்ப்பின் பயிற்றுவிக்கும் முறை வேறுபட்டதாக இருக்கிறது. அவர் மாணாக்கருக்கு தன்னம்பிக்கையை ஊட்டி; அதே சமயம், விளையாட்டுடன் கூடிய கற்பித்தல் முறையை வழங்குவதில் வாகையராக விளங்குகிறார். கற்பனை செய்தல், சிந்தித்தல் & கனவு காணுதலின் இன்றியமையமாயை மாணாக்கருக்கு உணரச் செய்கிறார்.
இஷான் மகிழ்ச்சியற்றவனாகவும், வகுப்பினுள் அவனது ஈடுபாடு மிகவும் குறைவாகவே இருப்பதையும் உடனே உணர்ந்துகொள்ளும் நிகும்ப், அவன் கற்றல் குறைபாடுள்ள) ஒரு சிறப்புக் குழந்தை என்பதை அறிகிறார். மேலும், அவன் ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் கொண்டுள்ளதை கண்டு வியக்கிறார்.
இஷானின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களது மகனுக்குள்ள நிலையை விளக்குகிறார் நிகும்ப். தனது மகனின் சோம்பேறித்தனத்திற்கு இது ஒரு சாக்கு என்றெண்ணி, நிகும்ப் கூறுவதை நம்ப மறுக்கிறார் இஷானின் தந்தை. பின்னர், நிகும்ப் கற்றல் குறைபாடு குறித்து விளக்க, இஷானின் தந்தையோ அதை ஒரு மனநல குறைபாடாக எண்ணுகிறார். தவறான கருத்தைக்கொண்டுள்ள அவருக்கு, கற்றல் குறைபாடு என்பது தகவலை புரிதலில் உள்ள வேறுபட்ட முறையே என எடுத்துரைக்கிறார் நிகும்ப்.
பள்ளிக்கு திரும்பி, தனது வகுப்பறையில் கற்றல் குறைபாடு குறித்து பேசுகிறார். இந்நிலை தங்களுக்கு இருந்தும் வாழ்வில் சாதித்த பல ஆளுமைகளின் பெயர்களைக் கூறி, தானும் அத்தகைய ஒருவரே என மாணாக்கருக்கு கூறுகிறார். வல்லுநர்கள் பரிந்துரைக்கும் சில சிறப்பு பரிகார நுட்பங்களை பயன்படுத்தி, இஷானின் கற்றல் திறனை மெருகேற்றுகிறார் நிகும்ப்.
இஷானின் மொழித் திறனும் கணித புலமையும் விரைவிலேயே உயர்கிறது. பள்ளியில் நடைபெறும் ஒரு கலை நிகழ்வில் இஷானின் ஓவியம் முதலிடம் பெறுகிறது. இஷான் தன்னைத் தானே அடையாளம் காண்கிறான். தங்களது மகனுக்கு ஏற்பட்ட மாற்றத்தைக் காணும் பெற்றோரோ வியப்பில் வாயடைத்துப் போகின்றனர். இதயம் கணக்க ஆசிரியர் நிகும்ப்பிற்கு நன்றிகளை உரித்தாக்குகின்றனர்.
கற்றல் குறைபாடு
கற்றல் குறைபாடு என்பது நரம்பியல் சார்ந்த ஒரு நிலை. கற்றல் குறைபாடு கொண்ட ஒரு குழந்தை வாசிப்பதற்கு, எழுதுவதற்கு, பேசுவதற்கு, கவனிப்பதற்கு, கணிதக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கு மற்றும் பொதுவாகவே எதையும் புரிந்துகொள்வதற்குச் சிரமப்படக்கூடும்.
ஒரு குழந்தை வாசிக்க, எழுத அல்லது கற்றுக்கொள்ளச் சிரமப்படுகிறது என்பதை முதலில் கவனிப்பவர்கள் அதன் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தான். குழந்தைப் பருவத்தின் ஒவ்வொரு நிலையிலும் கற்றல் குறைபாட்டின் அறிகுறிகள் சற்றே மாறுபடும்.
இது உடல் சார்ந்த நோய்களாலோ மன நோய்களாலோ பொருளாதார நிலை அல்லது பண்பாட்டுப் பின்னணியினாலோ உண்டாவதில்லை; கற்றல் குறைபாடு உள்ள ஒரு குழந்தை பலவீனமாக அல்லது சோம்பேறித்தனமாக உள்ளது என்ற அர்த்தமுமில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்; விஞ்ஞானிகள் நிகோலா டெஸ்லா, ஆட்பெர்ட் ஐன்ஸ்டின் & தாமஸ் எடிசன்; ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் என எண்ணற்ற பிரபங்கள் கற்றல் குறைபாட்டை வெற்றிக்கொண்டு வாழ்க்கையில் சாதித்தனர்.
கருத்துப்பரிமாற்றம்
“தாரே ஜமீன் பர் திரைப்படத்தை என்றாவது ஒரு நாள் ரஃப்யாஸ் றோஸரியில் திரையிட வேண்டும் என்ற எனது கனவு எழுத்து மேடை தமிழ் நாடு வாயிலாக சாத்தியப்பட்டதற்கு அவர்களுக்கும் இறைவனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்த காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரும் - ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியின் நிறுவனருமான ஐ.ஆபிதா ஷேக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் , நமதூரில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளங்கண்டு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான பரிகார உதவிகளை நாம் இணைந்து அளிக்க வேண்டும் “என்றார்.
முன்னதாக கற்றல் குறைபாடு பற்றியும் எழுத்து மேடை தமிழ்நாடு அமைப்பின் பணிகள் குறித்தும் அதன் நிர்வாகிகளான அஹ்மத் ஸாஹிப், சாளை பஷீர் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
இந்நிகழ்வில் தாய்மார்களும் குழந்தைகளுமாக கிட்டதட்ட 70 பேர் வரை கலந்து கொண்டனர்.
இறுதியாக நன்றி நவிலல், கஃப்ஃபாராவுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
மேற்கோள்கள்
1. கற்றல் குறைபாடு உள்ள பிரபலங்கள்
https://en.wikipedia.org/wiki/List_of_people_diagnosed_with_dyslexia
2. தாரே ஜமீன் பர்: அதிகாரப்பூர்வ இணையதளம்
https://www.taarezameenpar.com
3. தாரே ஜமீன் பர்: IMDB
http://www.imdb.com/title/tt0986264
4. கற்றல் குறைபாடு
http://tamil.whiteswanfoundation.org/disorder/learning-disability
செய்தியாக்கம்:
சஊதி அரபிய்யா – தம்மாமிலிருந்து...
அ.ர.ஹபீப் இப்றாஹீம் |