நகர்மன்ற உறுப்பினர்களாகப் பதவி வகித்த காலகட்டத்தில், ஆண்டுக்கு ஒருமுறை தமது சொத்து விபரங்களை மன்றத்தில் சமர்ப்பிக்காத உறுப்பினர்கள், மீண்டும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோரிடம் மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (Mass Empowerment and Guidance Association; MEGA) கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து அவ்வமைப்பின் செயலர் எம்.ஏ.புகாரீ (48) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
ஏப்ரல் 25, 1973ஆம் ஆண்டு, தமிழக அரசு அரசாணை ஒன்றை (G.O.MS.NO.858) வெளியிட்டது. அது, நகர்மன்றங்களின் உறுப்பினர்கள் (சொத்து விபரங்களை வெளியிடல்) விதிமுறைகள், 1973 (MEMBERS OF MUNICIPAL COUNCILS [DISCLOSURE OF ASSETS], 1973) என்ற சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் அரசாணையாகும்.
அச்சட்டத்தின் படி, நகர்மன்றங்களில் (தலைவர், துணைத் தலைவர் உட்பட) உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஒவ்வோர் ஆண்டின் மார்ச் 31 முடிய - தம் சொத்து விபரங்களை விரிவாக, நகராட்சி ஆணையரிடம் வழங்கவேண்டும். அவ்விபரங்களை - நகராட்சி ஆணையர், நகர்மன்றக் கூட்டங்களில் தாக்கல் செய்யவேண்டும். அந்த ஆவணங்கள் பொது ஆவணங்களாகக் (Public Documents) கருதப்படும். விரும்பும் பொதுமக்கள், அந்த ஆவணங்களைக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
நகர்மன்ற அங்கத்தினர் ஊழல் செய்து, தவறான வழியில் சொத்துக்கள் சேர்க்காமல் இருக்க இயற்றப்பட்ட இச்சட்டம் எவ்வாறு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தம் சொத்து விபரங்களை - தங்கள் வேட்பு மனுவோடு தாக்கல் செய்ய வேண்டும் என தற்போது வழிமுறைகள் தெரிவித்தாலும், மீண்டும் போட்டியிடும் முன்னாள் உறுப்பினர்கள், தம் பதவிக் காலத்தில் நகர்மன்றத்தில் தமது சொத்து விபரங்களை, ஒவ்வோர் ஆண்டும் சமர்ப்பித்தார்களா என்ற கேள்வியை தேர்தல் ஆணையம் - வேட்பு மனு தாக்கல் படிவத்தில் கேட்பதில்லை.
நகர்மன்றத்திற்குத் தேர்வாகும் அங்கத்தினரின் கடமைகளுள் ஒன்று - அவர்கள் தொடர்புடைய விதிமுறைகளை - சட்டங்களை, தம் பதவிக் காலத்தில் கடைப்பிடிப்பதும் ஆகும்.
அவ்வாறு தம் பதவிக் காலத்தில், தமது சொத்து விபரங்களை ஒவ்வோர் ஆண்டும் சமர்ப்பிக்காத அங்கத்தினர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது எனவும்,
அவ்வாறு அனுமதிப்பது – 1973ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகளைப் பொருளற்றதாக்கிவிடும் என்றும்,
வேட்பு மனு நிராகரிப்புக்கான காரணங்களில் - முந்தைய பதவிக் காலங்களில் சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்பதுவும் ஒன்றாக இணைக்கப்படவேண்டும் என்றும்
மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர் - MEGA) |