தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. இத்தேர்தல்களில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் ஆவணங்களை - தேர்தல் ஆணையம் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலர் ஆகியோரிடம் - மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து, MEGA அமைப்பின் செயலாளர் எம்.ஏ.புகாரீ (48) வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தமிழக உள்ளாட்சிகளுக்கான தேர்தல்கள் - கடந்த அக்டோபர் மாதம் நடைபெறவிருந்தன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல்கள் குறித்து வெளியான அறிவிப்புகளை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து, தேர்தல்களை நடத்திட - சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை நீங்கி, விரைவில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உள்ளாட்சி மன்றங்களின் பங்கு அதிகம் உள்ளது என்பதைக் கருத்திற்கொண்டு, மக்களிடம் வசூல் செய்யப்படும் வரிகளில் பெரும் பங்கை, மத்திய - மாநில அரசுகள் உள்ளாட்சி மன்றங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன.
தமிழக அரசு, தான் வசூல் செய்யும் வரிகளில், சுமார் 10 சதவிகிதத் தொகையை, உள்ளாட்சி மன்றங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அதுபோல மத்திய அரசு, தான் வசூல் செய்யும் வரிகளில், முக்கிய பங்கை, மாநில மற்றும் உள்ளாட்சி மன்றங்களுடன் பகிர்ந்துகொள்கிறது.
எனவே - உள்ளாட்சி மன்றங்களை நிர்வகிப்பவர்கள், திறமையானவர்களாகவும், ஊழல் - லஞ்சம் ஆகியவற்றில் ஈடுபடாதவர்களாகவும் இருப்பது மிகவும் அவசியமாகிறது.
இதனால்தான், சட்டமன்ற - பாராளுமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்கள் தாக்கல் செய்வது போல், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களும், தங்கள் வேட்பு மனுவுடன், தங்கள் சொத்து விபரங்கள், தங்கள் மீதான வழக்கு விபரங்கள் ஆகியவற்றை உறுதிச்சான்று மூலம் தாக்கல் செய்ய - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (TAMIL NADU STATE ELECTION COMMISSION) தெரிவிக்கிறது.
அதன்படி, சட்டமன்ற - பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனு மற்றும் உறுதிச்சான்றுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அவ்வாறு உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றே இந்திய தேர்தல் ஆணையம் (ELECTION COMMISSION OF INDIA), ஆணை பிறப்பித்துள்ளது.
ஆனால், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வேட்பு மனு மற்றும் உறுதிச் சான்றுகளைப் பெறும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (TAMIL NADU STATE ELECTION COMMISSION), அவற்றை - எந்த இணையதளத்திலும் பதிவேற்றம் செய்வதில்லை.
ஒரு வேட்பாளர் தவறான தகவல்களை வழங்கினால் அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்படலாம் என விதிமுறை வகுத்துள்ள தேர்தல் ஆணையம், அதனை நடைமுறைப்படுத்த - வேட்பு மனு மற்றும் உறுதிச்சான்றுகள் ஆகியவற்றை - வேட்பு மனு தாக்கல் செய்த அன்றே, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.
மேலும், வேட்பு தாக்கல் செய்ய இறுதி நாள் - வேட்பு மனு பரிசீலனை நாள் ஆகியவற்றுக்கிடையே மிகுந்த குறைவான கால அவகாசமே உள்ளது. இக்குறுகிய கால அவகாசத்தில், வேட்பு மனு மற்றும் உறுதிச்சான்றுகளில் உள்ள குறைபாடுகளை பிற வேட்பாளர்களோ, பொதுமக்களோ சுட்டிக்காட்டிட போதிய அவகாசம் இல்லை. எனவே, வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் - வேட்பு மனு பரிசீலனை நாள் ஆகியவற்றுக்கிடையே கூடுதல் நாட்கள் இருக்கவேண்டும்.
இது தொடர்பாக - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோருக்கு, மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) சார்பில் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர் - MEGA)
|