3 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பிலிருக்கும் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட தேர்தலுக்குத் தொடர்பான அனைத்து அதிகாரிகளையும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் பணியிட மாற்றம் செய்யுமாறு, மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு - MEGA கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, MEGA செயலாளர் எம்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தல்களுக்கான அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்னர், 3 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் உள்ள - தேர்தலுக்குத் தொடர்பான அனைத்து அதிகாரிகளையும், பணியிட மாற்றம் செய்திட, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோரிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (MEGA) பின்வருமாறு கோரிக்கை வைத்துள்ளது:-
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தமிழக உள்ளாட்சிகளுக்கான தேர்தல்கள் - கடந்த அக்டோபர் மாதம் நடைபெறவிருந்தன. இத்தேர்தல்கள் குறித்து வெளியான அறிவிப்புகளை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து – அவ்வறிவிப்பின் படி உள்ளாட்சிகளுக்கான தேர்தல்களை நடத்திட, நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் மூன்று மிகப்பெரிய தேர்தல்களில் - உள்ளாட்சிகளுக்கான தேர்தல்களும் ஒன்று.
பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் (ELECTION COMMISSION OF INDIA) நடத்துகிறது. ஆனால் – உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (TAMIL NADU STATE ELECTION COMMISSION) நடத்துகிறது.
இந்திய அரசியல் சாசனம், உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது. பொதுமக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்தக் கட்டமைப்புகளுக்கான தேர்தல்கள் நேர்மையாகவும், முறையாகவும் நடைபெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
பாராளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் - அத்தேர்தல்களில் தொடர்புடைய அதிகாரிகள் தங்கள் சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தாலோ அல்லது தேர்தலில் தொடர்புடைய அதிகாரிகள் - அப்பொறுப்புகளில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்தாலோ, அவர்களைப் பணியிட மாற்றிட இந்திய தேர்தல் ஆணையம் (ELECTION COMMISSION OF INDIA) - ஆணைகள் பிறப்பித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தைக் (TAMIL NADU STATE ELECTION COMMISSION) கட்டுப்படுத்தாவிட்டாலும், இந்திய தேர்தல் ஆணையம் (ELECTION COMMISSION OF INDIA) மூலம் வெளியான உத்தரவுக்குப் பின்பு உள்ள காரணங்கள், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கும் பொருந்தக் கூடியவை.
எனவே – உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தொடர்புடைய - சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவதற்கு முன்னதாக பணியிட மாற்றம் செய்யவேண்டும்.
கீழ்க்காணும் மாவட்ட ஆட்சியர்கள் மூன்றாண்டுகளுக்கும் மேலாக - ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களையும் - உள்ளாட்சி மன்றத் தேர்தல்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவதற்கு முன்னதாக பணியிட மாற்றம் செய்யவேண்டும்.
(1) திருமதி பி.மஹேஸ்வரி (06/06/2011 தேதியில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்)
(2) திரு கே.விவேகானந்தன் (28/06/2013 தேதியில் இருந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர்)
(3) திரு ம.ரவிக்குமார் (07/08/2013 தேதியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்)
(4) திரு இ.சரவனவேல் ராஜ் (07/08/2013 தேதியில் இருந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர்)
(5) டாக்டர் பி.ஷங்கர் (20/10/2013 தேதியில் இருந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர்)
இது தொடர்பாக, MEGA அமைப்பின் சார்பில் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், தமிழக அரசின் தலைமைச் செயலர், நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலர் ஆகியோருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர் - MEGA)
|