ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், பலதரப்பட்ட விளையாட்டுப் போட்டிகள், விருந்துபசரிப்புடன் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய அருட்பெயரால்…
துபை காயல் நல மன்றம் நடத்திய 39வது காயலர் சங்கமம்!
கடந்த 18.11.16 வெள்ளிக்கிழமை துபை ஸபீல் பூங்காவில் துபை காயலர்களின் 39வது ஒன்று கூடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
அனைவருக்கும் முன்பாக வரவேற்புக் குழுவினர் பூங்கா வந்து வருபவர்களை வரவேற்று அவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்காக காத்திருந்தனர். காலை 10.00 மணியளவில் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் துவங்கினர்.
வருபவர்களின் காலைப் பசியைத் தீர்ப்பதற்காக சூடான சுண்டலும், சுவையான தேனீரும் பரிமாறப்பட்டன.
சுமார் 11.00 மணியளவில் குழந்தைகளுக்கான கிராஅத் ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவர் சிறுமியர் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டு கிராஅத் ஓதினார்கள். இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற 20 பேர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜும்ஆ தொழுகை முடிந்ததும் கூட்ட நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சிக்கு துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள், ஊரிலிருந்து வந்த காயலர்கள் முன்னிலை வகிக்க, மன்றப் பொதுச் செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
அல்ஹாஃபிழ் ஸலாஹுத்தீன் அவர்கள் இறைமறை வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். பின்னர் செயற்குழு உறுப்பினர் எம்.யூ. ஷேக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தலைமையுரை
பின்னர் மன்றத் தலைவரும், நிகழ்ச்சியின் தலைவருமான ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது:
இது வருடத்தின் இரண்டாவது கூட்டம். இதில் நம்மை ஒன்றுகூட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உறுப்பினர்கள், நண்பர்கள், வெகு நாட்களாக சந்திக்காத நண்பர்கள் இங்கே வந்து சந்தித்துக்கொள்வதில் மகிழ்ச்சி. இந்தக் கூட்டத்திற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், மின்னஞ்சல், இணையதளம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது.
நமது மன்றம் சுமார் 25 வருடங்கள் வெகு சிறப்பாக இயங்கி வருகின்றது. நமதூர் ஒரு முஸ்லிம் கிராமம். நாம் சுற்றுவட்டார மக்களுடன் இணக்கமாக வாழ்ந்து வருகிறோம். கல்வியில் பின்தங்கியிருக்கும் நமதூர் பிள்ளைகளை முன்னேற்ற கல்வி உதவிகள் புரிந்து வருகின்றோம். அதேபோன்று நமது ஊருக்கு அருகிலுள்ள உடன்குடி, ஆத்தூர், ஏரல், கேம்பலாபாத் போன்ற ஊர்களுக்கும் நாம் உதவி புரிய வேண்டும். நமது மன்றத்தின் பணிகளை மேற்கொண்டிட செயற்குழு உறுப்பினர்களாக விரும்புவோர் தாங்களாகவே முன்வந்து பெயர் கொடுக்க வேண்டும்.
இங்கே பரிசுகளுக்கு அனுசரணை செய்த ஜமீல் ஜுவல்லர்ஸ், அரிஸ்டோ ஸ்டார், அல் பன்னா ஆட்டோ, முத்து தங்க மாளிகை, ஹலி மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் ஆகிய நிறுவனங்களுக்கும், டோஷிபா எலிவேட்டர்ஸ் நிறுவனத்தின் அபூபக்கர், எம்.யு. ஷேக், எல்எம்எஸ். ரியாஸ் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்
பின்னர் புதிய உறுப்பினர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரிலிருந்து புதிதாக அமீரகத்தில் வேலைக்காக வந்தவர்கள், விசிட் விசாவில் வந்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
நிதிநிலை அறிக்கை
மன்றப் பொருளாளர் ஏ. ஜே. யூனுஸ் அவர்கள் கடந்த ஒரு வருட நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். மன்றம் இக்ரஃ கல்விச் சங்கம் மூலமாக காயல் பதியில் செய்த கல்விச் சேவைகள், மருத்துவ உதவிகள், பைத்துல் மால்கள் மூலமாக செய்து வரும் கல்வி உதவிகள் மற்றும் ஏழை எளியோருக்கான உதவிகள் போன்றவற்றை அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
கலந்துரையாடல்
பின்னர் கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறினர். உறுப்பினர்ககளின் சந்தேகங்களுக்கு தலைவர் விளக்கமளித்தார்.
நன்றியுரை
நிகழ்ச்சியின் இறுதியாக மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் நூஹு ஸாஹிப் அவர்கள் நன்றியுரை நவின்றார். கூட்ட நிகழ்விடத்திற்கான ஏற்பாடுகளை எந்தக் குறையும் இல்லாமல் செய்து தந்தவர்கள், விருந்து உணவு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்தவர்கள், இந்தக் கூட்டத்தை நடத்துவதற்காக வாராவாரம் கூடிய செயற்குழு உறுப்பினர்கள், இங்கே சுழன்று சுழன்று பணியாற்றிய தன்னார்வத் தொண்டர்கள், இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு அனுமதி தந்த ஸபீல் பூங்கா நிர்வாகத்தினர், வாகனங்களை மேற்பார்வை செய்த ஈசா, எங்கள் அழைப்பை ஏற்று மகிழ்ச்சியுடன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அபூதாபி சகோதரர்கள், நிகழ்வுகள் அனைத்தையும் நிழற்படங்கள் எடுத்த ஸுப்ஹான், கூட்டம் நடத்துவதற்கு பாய்கள், இன்னபிற பொருட்கள் தந்து உதவிய ஈடிஏ ‘டி’ பிளாக் நிர்வாகத்தினர், உறுப்பினர் சந்தா வசூல் செய்து தரும் முத்து ஃபரீத், முனவ்வர் மற்றும் முஸர்ரிஃப், உறுப்பினர்களின் பெயர்களைப் பதிவு செய்து, அவர்களது தொடர்புகளைப் புதுப்பித்த வரவேற்புக் குழுவைச் சார்ந்த சகோதரர்கள், அன்பளிப்புகளுக்கு அனுசரனை வழங்கியவர்கள் ஆகியோருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
செயற்குழுவில் சேர ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும்படி தலைவர் வேண்டுகோள் விடுக்க, அதனையேற்று இரண்டு சகோதரர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்தார்கள்.
மதிய விருந்து
அனைவருக்கும் சுவையான ஹைதராபாதி பிரியாணி பரிமாறப்பட்டது.
மதிய உணவைத் தொடர்ந்து, ஆங்காங்கே தனித்தனிக் குழுக்களாக தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்றினர்.
வினாடிவினா போட்டி
எம்.யூ. ஷேக் அவர்கள் உறுப்பினர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து பல்வேறு சுவையான வினாடிவினா போட்டிகளை நடத்தினார்.
விளையாட்டுப் போட்டிகள்
நேரக் குறைபாடு காரணமாக வினாடி வினா போட்டி நடந்துகொண்டிருக்கும்பொழுதே குழந்தைகளுக்கான பல்சுவை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை கேம் அங்கிள் சாளை ஸலீம் மற்றும் குழுவினர் சிறப்பாக நடத்தினர். குதூகலமாக அனைத்துப் போட்டிகளிலும் குழந்தைகள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அத்தோடு அனைத்துக் குழந்தைகளையும் மகிழ்விக்கும் விதமாக அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
குலுக்கல் பரிசுகள்
கூட்டத்திற்கு வருகை தருபவர்கள் முற்கூட்டியே வருவதை ஊக்குவிப்பதற்காக காலை 10.30 மணிக்கு முன்பு வருபவர்களுக்கும் (மூன்று குலுக்கல் வாய்ப்புகள்), ஜும்ஆவுக்கு முன்பு வருபவர்களுக்கும் (இரண்டு வாய்ப்புகள்), ஜும்ஆவுக்குப் பிறகு வருபவர்களுக்கும் (ஒரு வாய்ப்பு) என்று மூன்று பரிசுக் குலுக்கல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்ட இறுதியில் இதற்கான பரிசுக் குலுக்கல்கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்கள், லூலூ வவுச்சர்கள் போன்றவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
இதற்கிடையில் மாலை நேர தேனீரும், சமோசாவும் பரிமாறப்பட்டன.
துபை கா.ந.மன்றம், அபூதபீ கா.ந.மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் இந்நிகழ்ச்சிகளில் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இட வசதியும். தனித்தனி போட்டி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முறைப்படுத்தி, பொறுப்பாளிகளை Follow up செய்து மொத்த நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஈசா அவர்கள் உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து அந்தி சாயும் நேரத்தில் அனைவரும் பிரியா விடை பெற்று பிரிந்து சென்றனர்.
விடைபெறும் முன், அனைவரும் குழுப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
படத்தொகுப்பு
கீழேயுள்ள இணைப்புகளைச் சொடுக்கி, நிகழ்வுகளின் ஒளிப்படங்களைத் தொகுப்பாகக் காணலாம்:-
https://photos.google.com/share/AF1QipNMKfXHnQ-G1nWfsBtx1m626R1smDCUuDdnMKmEpPeNSdyAYbnJznp67mL9RHPEHw?key=YzNKS2FuSDBnanBOdnczZ0tpbFR2WnBxMW0zUnNR
https://photos.google.com/share/AF1QipMabGc42Oh1gDGkEsA6SUj7IOXVpjgZKWWFlhopL5PMKLHkcrBizFWuvXfcL3dHFg?key=dDRNdEZzbHhORTg5WVRyc2UxaGJWVVVzdE5FbHVB
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை கா.ந.மன்றம் சார்பாக,
துபையிலிருந்து...
செய்தியாக்கம்:
M.S.அப்துல் ஹமீத்
ஒளிப்படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் & கிங்ஸ்லி சேவியர் ஜார்ஜ் |