காயல்பட்டினம் உட்பட 20 இரண்டாம் நிலை நகராட்சிகள் - பகுதி நேர மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்
இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அது குறித்த விபரம் வருமாறு:
மாநிலத்தில் உள்ள 20 இரண்டாம் நிலை நகராட்சிகள் தலைமை இல்லாமல் இயங்குகின்றன. நிர்வாகத்தினை திறம்பட நடத்திட, அங்கு - தேர்வு
செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இல்லை, நகராட்சி ஆணையர்களும் இல்லை. அதற்கு பதிலாக - எவருக்கும் பதில் சொல்லவேண்டிய நிர்பந்தம்
இல்லாத சூழலில் - மேலாளர்களாலும், நகராட்சி பொறியாளர்களாலும் - நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.
காலியிடங்களை நிரப்புவது குறித்த வழக்கு முடிவு நிலையை எட்டி, ஜூலை 26 அன்று தீர்ப்பு ஒத்தி வைத்தப்பிறகும், சென்னை நீதிமன்றம் இது
குறித்து இன்னும் தீர்ப்பை வழங்கவில்லை.
குடிநீர் விநியோகம், சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் ஆகியவை நகராட்சி ஆணையரின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வருவதால், முழு நேர ஆணையர்கள் நியமனம், உள்ளாட்சி மன்றங்களுக்கு அவசியமாகிறது. "வழக்கு நிலுவையில் உள்ளதால், இளநிலை அதிகாரிகளின் கையில் அதிகாரம் இருப்பது பொருத்தமான விஷயம் இல்லை" என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அக்டோபர் மாதத்துடன் மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் நிறைவுற்றதை அடுத்து, சிறப்பு சட்டம் மூலம் - உள்ளாட்சி மன்றங்களின் நிர்வாகம், அந்த மன்றங்களின் தலைமை அதிகாரியிடம் சென்றது. ஆனால் - 20 உள்ளாட்சி மன்றங்களுக்கு தலைமையே இல்லை.
முழு நேர ஆணையர்களுக்காக காத்திருக்கும் - இருபது - இரண்டாம் நிலை நகராட்சிகள் விபரம் வருமாறு:
கூடலூர் (திருப்பூர்),
புஞ்சைபுளியம்பட்டி (ஈரோடு),
குளித்தலை (கரூர்),
பள்ளிபாளையம் (நாமக்கல்),
பத்மநாபபுரம் மற்றும் குழித்துறை (கன்னியாகுமாரி);
காயல்பட்டினம் (தூத்துக்குடி),
ஜோலார்பேட்டை மற்றும் மேல்விஷாரம் (வேலூர்);
திருத்துறைப்பூண்டி மற்றும் கூத்தாநல்லூர் (திருவாரூர்);
வேதாரண்யம் மற்றும் சீர்காழி (நாகப்பட்டினம்);
ஜெயம்கொண்டாம் மற்றும் அரியலூர் (அரியலூர்);
துவக்குடி (திருச்சி),
நரசிங்கபுரம் (சேலம்),
கீழக்கரை (ராமநாதபுரம்)
மேலூர் (மதுரை).
கூடுதல் பொறுப்பாக, அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதால், கொள்கை முடிவுகள் ஸ்தம்பித்து நிற்கின்றன என மக்கள் பிரதிநிதிகள்
தெரிவிக்கிறார்கள்.
"ஆறு மாதங்களாக மேலாளரை பார்க்கமுடியவில்லை; என்னையும் அவர் பார்க்க வரவேண்டாம் என கூறுகிறார். எனது தொகுதி நிதியில் இருந்து 20
லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிட்ட பேருந்து நிலைய பணிகள், காகிதத்தில் தான் உள்ளன" என திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்
பி.ஆடலரசன் கூறுகிறார்.
120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இருப்பினும் - முழு நேர ஆணையர் இல்லாத
காரணத்தால், அந்த பணிகள் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகின்றன. "இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல், காலியிடம்
நிரப்பபடவேண்டும்" என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.நல்லதம்பி தெரிவித்தார்.
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் - இது சம்பந்தமாக அனுப்பப்பட்ட எந்த மனுவின் மீதும் நடவடிக்கை இல்லை.
பத்மநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் - "மக்கள் பிரதிநிதிகளும், முழு நேர ஆணையர்களும் இல்லாததால், தங்கள்
குறைகளை தெரிவிக்க பொது மக்கள் பெருத்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்" என தெரிவித்தார். "பகுதி நேர அலுவலர்களால் என்ன செய்ய முடியும்"
என அவர் வினவினார்.
ஆகஸ்ட் 2015 லேயே காலி இடங்கள் குறித்த விபரங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை நிரப்புவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையை எதிர்த்தே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இளநிலை உதவியாளர்களாக இருந்து பதவி உயர்வு பெற்றவர்கள் மேலாளர்கள்; அவர்களை பொறியாளர்கள் துறை - பொருட்படுத்துவதில்லை என
தகவல்கள் தெரிவிக்கின்றன.
"முடிந்த அளவு நாங்கள் பொறியாளர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம். எங்களுக்கும் - நிர்வாகத்தில், 20 ஆண்டுகள் அனுபவம் உண்டு" என
மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://timesofindia.indiatimes.com/city/chennai/20-civic-bodies-in-tamil-nadu-being-run-by-part-time-managers/articleshow/56043977.cms
|