தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர்கள், சிலிண்டர் டெலிவரிக்கு, பில் தொகைக்கு மேல் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டாம் என ஆட்சியர் ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நவம்பர் 26 அன்று நடைபெற்றது.
கூட்டத்தில் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள், முன்னோடி வங்கி அலுவலர், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வுத்துறை சார் ஆய்வாளர் மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொது மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டரின் மேல் பகுதியில் உள்ள சீல் உடையாமல் இருக்கிறதா என்பதை பார்த்து , சமையல் எரிவாயு மொத்த எடை 29.4 கிலோ (நிகர எடை 14.2 கிலோ) மற்றும் வணிக நோக்கத்திற்கான சிலிண்டர் மொத்த எடை 37 கிலோ (நிகர எடை 19 கிலோ) உள்ளதா என்பதை எடைபோட்டு பார்த்து வாங்க வேண்டும்.
அனைத்து பில்களிலும், சிலிண்டர் விலை மற்றும் டெலிவரி சார்ஜ் உட்பட மொத்த தொகையை குறிப்பிட்டு வாடிக்கையாளர்களுக்கு பில் தர வேண்டும்.
பில்லில், "பில் தொகைக்கு அதிகமாக பணம் கொடுக்க வேண்டாம்" என்ற வாசகத்தை, பிரிண்ட்/ரப்பர் ஸ்டாம்ப் இட்டு வழங்கிட வேண்டும்.
IOC நிறுவன முகவர்களிடம் பெறும் சிலிண்டருக்கு, 15 கி.மீ. வரை டெலிவரி சார்ஜ் கிடையாது.
15 கி.மீ.க்கு மேல் - ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2.50 வீதம் டெலிவரி சார்ஜ் வசூலிக்கப்படும்.
BPC மற்றும் HPC நிறுவன முகவர்களிடம் பெறும் சிலிண்டருக்கு - 5 கி.மீ. வரை டெலிவரி சார்ஜ் கிடையாது.
6 கி.மீ. முதல் 10 கி.மீ. வரை - ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2 வீதம் டெலிவரி சார்ஜ் வசூலிக்கப்படும். 11 கிலோமீட்டருக்கு மேல் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2.50 வீதம் வசூலிக்கப்படும் என்று நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிலிண்டருக்கு கூடுதலாக பணம் கேட்டு டெலிவரி செய்யும் நபரும் பிரச்சினை செய்யும்பட்சத்தில் - நுகர்வோர்கள், கீழ்க்கண்ட கட்டணமில்லா தொலைபேசி அல்லது எண்ணெய் நிறுவன அலுவலர்களுக்கு, தொலைபேசி மூலம் புகார் அளிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
IOC மேலாளர் கைபேசி எண் 94431 05855
BPC விற்பனை மேலாளர் கைபேசி எண் 96761 91999
HPC ஏரியா மேலார்கள் கைபேசி எண் 98431 36492
IOC கட்டணமில்லா தொலைபேசி எண் 18002333555
BPC கட்டணமில்லா தொலைபேசி எண் 1800224344
HPC கட்டணமில்லா தொலைபேசி எண் 18002333555
எரிவாயு கசிவு பற்றிய புகாருக்கு 1906
எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்கள், சீருடை, பெயர் அட்டை அணிந்திருக்க வேண்டும். அவர்கள் அடையாள அட்டை அணிந்து செல்வதை உறுதி செய்யவேண்டும் என்றும், நுகர்வோர்களிடம் கனிவாக பேச வேண்டும் என்றும், நுகர்வோர்களிடம், அதிக கட்டணம் கோரி கண்டிப்பாக நிர்பந்திக்கக்கூடாது என்றும், பொது மக்களிடம் நற்பெயர் ஈட்டித்தரும் வகையில் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும் என்றும் அனைத்து எரிவாயு நிறுவனங்களுக்கும்/முகவர்களுக்கும் தக்க அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
தகவல்:
tutyonline.com
|